TNPSC Thervupettagam

சிறைவாசிகள் விடுதலை முஸ்லிம்களிடம் ஏன் பாரபட்சம்

October 3 , 2023 464 days 447 0
  • தூக்குத் தண்டனைக்கு எதிராகவும், நீண்ட காலச் சிறைவாசத்தைக் குறைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் பேசிவருகிறார்கள். ஆனால், பலன் என்ன?
  • ராஜிவ் காந்தி கொலை வழக்கு, கீழ்வெண்மணிப் படுகொலை வழக்கு, மேலவளவுகொலை வழக்கு, மதுரை கவுன்சிலர் லீலாவதிகொலை வழக்கு போன்ற வழக்குகளில்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவரும்10 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். பல்வேறு குற்றவாளிகளை மாநில அரசுகளே விடுதலை செய்திருக்கின்றன.

சச்சார் ஆணையப் பரிந்துரை

  • நீதி பரிபாலன உரிமைகளைப் பெறுவதில் இந்திய முஸ்லிம்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்வதாக 2006இல் சச்சார் ஆணையம் கண்டறிந்தது; மேலை நாடுகளில் இருப்பது போன்ற சம வாய்ப்பு ஆணையம் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரையையும் முன்வைத்தது. இப்படி ஓர் ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்டால் விளிம்புநிலைச் சிறுபான்மையின மக்கள், மதப் பாகுபாடு அடிப்படையில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆணையத்தில் முறையிட்டுப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

தமிழ்நாட்டின் நிலை

  • ஆயுள் தண்டனைக்கான கால வரையறையை ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக வரையறுத்துள்ளன. ஆயுள் தண்டனைக்கான கால வரையறையாக 14 ஆண்டுகள் என்று தமிழ்நாடு அரசு நிர்ணயித்திருக்கிறது. ஆயுள் தண்டனையைக் குறைத்து வழங்கிவிடக் கூடாது என்றும், தூக்குத் தண்டனை பிற்காலத்தில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டால், அவர்களுக்குக் கருணை அடிப்படையில் விடுதலை கூடாது என்றும் அகில இந்தியச் சிறை சீர்திருத்தக் கமிட்டி கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தூக்குத் தண்டனை பெற்று, பிறகு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டவர்கள் 7 ஆண்டுகள் மட்டும் சிறைத் தண்டனை அனுபவித்த வரலாறெல்லாம் உண்டு. தமிழ்நாடு அரசின் தளர்த்தப்பட்ட அரசாணை மூலம் மட்டுமே இது சாத்தியப்பட்டது.
  • தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைப் பொறுத்தவரை முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டுக் காவல் துறை நடத்திய வழக்குகளில் கிட்டத்தட்ட 35 பேர் 14 ஆண்டுகள் கடந்தும், அதைத் தொடர்ந்து 25 ஆண்டுகளும் முடித்துவிட்டவர்களாக உள்ளார்கள். பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், சுதந்திர தினம் போன்ற தருணங்களில் ஏராளமான ஆயுள் தண்டனைக் கைதிகள் ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்படும்போது, முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் தொடர்ந்து விடுதலை மறுக்கப்படுகிறது.
  • இது குறித்துக் கேள்வி எழுப்பும்போது பலரும் இஸ்லாமியர்கள் ஏதோ சலுகை கேட்பதாகப் பேசுகிறார்கள். ஆனால், மற்ற கைதிகளுக்கு என்ன உரிமை வழங்கப்படுகிறதோ அதே உரிமையை முஸ்லிம் கைதிகளுக்கும் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் முஸ்லிம் சமூகத்தின் ஒரே கோரிக்கை.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories