- கடந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் மொத்தமுள்ள 716 பணியிடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து 36 பேர் மட்டுமே தேர்வாகியிருப்பது, இது குறித்து தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
- யுபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதுவதில் தமிழ்நாடு மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றுவருகின்றனர்.
- வெ.இறையன்பு, சி.சைலேந்திரபாபு போன்ற அதிகாரிகள், ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஊர்தோறும் சென்று, ஊக்க உரைகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்திவருகின்றனர்.
- இதன் விளைவாக, கிராமப்புறப் பின்னணியிலிருந்து அரசுக் கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களைப் படித்த மாணவர்கள் பலரும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்று, இந்தியா முழுவதும் அதிகாரிகளாகப் பணியாற்றிவருகின்றனர்.
- வழிகாட்டுதல்களை வழங்கிவரும் மூத்த அதிகாரிகள் மாநிலத்தின் முதன்மைப் பொறுப்புகளை வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய பின்னடைவு விரைவில் சரிசெய்யப்படக் கூடியதே.
- மொத்தப் பணியிடங்கள் ஆண்டுதோறும் குறைந்துவருகின்றன என்பதும் பின்னடைவுக்கு ஒரு காரணம். அதே நேரத்தில் கலை, அறிவியல் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் விகிதமும்கூடக் குறைந்துவருகிறது.
- முதனிலைத் தேர்வில் விருப்பப் பாடம் நீக்கப்பட்டு, திறனறித் தேர்வு புகுத்தப்பட்ட பிறகு அதுவும் நீட் தேர்வு போலவே தொடர் பயிற்சிகளால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழலை ஏற்படுத்திவிட்டது.
- திறனறித் தேர்வின் சரிபாதிக் கேள்விகள் ஆங்கில மொழிப் பயிற்சியையும் மறுபாதிக் கேள்விகள் திறனறிப் பயிற்சியையும் கட்டாயமாக்கிவிட்டன.
- இந்தியாவின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகிப்பதற்கான வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களிடமிருந்து கைநழுவிக்கொண்டிருக்கின்றன.
- முதனிலைத் தேர்வுக்காகத் தனிச் சிறப்பான பயிற்சிகளை அளிக்காதபட்சத்தில், அவர்கள் முதற்கட்டத்திலேயே போட்டியிலிருந்து விலக நேரிடும்.
- தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கான ஆதரவையும் பயிற்சியையும் அரசு வழங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.
- முதற்கட்டமாக, சிவில் சர்வீஸ் தேர்வு குறித்தும் அதற்கான தயாரிப்புகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அனைத்திலும் மிக முக்கியமானது.
- மாணவர்களின் ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொள்ளும் புற்றீசல்கள் போன்ற பயிற்சி நிலையங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
- போதிய கல்வியனுபவமோ போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற அனுபவமோ இல்லாதவர்களைக் கொண்டு இயங்கும் பயிற்சி நிலையங்கள், அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடக்கூடியவை.
- தமிழ்நாடு அரசின், அண்ணா மேலாண்மை நிலையத்தால் நடத்தப்பட்டுவரும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தை மண்டலவாரியாக விரிவுபடுத்த வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.
- ஓராண்டு பயிற்சியாக மட்டும் முடிந்துவிடாமல், மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறும் வரையில் ஆண்டுதோறும் குறுகிய காலப் பயிற்சிகளையும் தொடரலாம்.
- இந்தப் பயிற்சிகளைத் திட்டமிடுவதற்குச் சமீபத்திய தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்களின்படி தேர்வான தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் அதிகாரிகளைக் கொண்ட ஆலோசனைக் குழுக்களை அமைக்கலாம்.
- மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் என்பது வேலைவாய்ப்பு மட்டுமில்லை, கூட்டாட்சி அமைப்பில் மாநிலத்துக்கான பிரதிநிதித்துவமும்கூட.
நன்றி: இந்து தமிழ் திசை (29 - 09 - 2021)