- 1991 – 2001 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் ஜப்பான் மிக மோசமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டது. இந்தக் காலகட்டத்தை ‘இழந்தசகாப்தம்’ (Lost Decade) என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், அதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில், அமெரிக்கா உட்பட ஏனைய வளர்ந்த நாடுகள் பொறாமைகொள்ளும் அளவுக்கு ஜப்பானின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. ஐப்பானின் இந்த வளர்ச்சிக்கு அதன் ரியல் எஸ்டேட் துறை மிக முக்கிய காரணமாக இருந்தது.
- நிலப்பரப்பில் ஜப்பானைவிட அமெரிக்கா 25 மடங்கு பெரிய நாடு. ஆனால், 1980-களில் ஐப்பானின் மொத்த நில மதிப்பானது அமெரிக்காவின் மொத்த நில மதிப்பைவிட 4 மடங்கு அதிகமாக இருந்தது. ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்ததால், ஜப்பான் வங்கிகள் கடனை வாரி இறைத்திருந்தன.
- 1980-களில் இறுதியில் ரியல் எஸ்டேட் துறை திடீர் தேக்கம் காணத் தொடங்கியது. ரியல் எஸ்டேட் துறை தேக்கத்தால், அதில் முதலீடு செய்த நிறுவனங்களும் மக்களும் இழப்பைச் சந்தித்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனை வாரி இறைத்த வங்கிகள் திவாலாகின.ஜப்பானின் இருண்ட காலம் தொடங்கியது.
- 1989 முதல் 1992 வரையிலான மூன்றே ஆண்டுகளில் ஜப்பானில் பங்குச் சந்தை 60 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ரியல் எஸ்டேட் மதிப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் 70 சதவீதம் அளவில் சரிந்தது.
- நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில் மக்கள் பணத்தை செலவு செய்யாமல் சேமித்து வைக்க ஆரம்பித்தனர். மக்களிடம்நுகர்வை தூண்டும் நோக்கில் ஜப்பான் அரசுஅதன் வட்டி விகிதத்தை பூஜ்யம் வரையில் குறைத்தது. அதாவது வங்கியில் கடன் பெற்றால், அதற்குவட்டி செலுத்தத் தேவையில்லை.
- எனினும், மக்கள் வங்கியில் கடன் வாங்க முன்வரவில்லை. மக்களின் நுகர்வு குறைந்ததால் விலைவாசி வீழ்ந்தது. தொழிற் செயல்பாடுகள் முடங்கின. விளைவாக, நிறுவனங்கள் ஊழியர்களை பெரும் எண்ணிக்கையில் வேலைநீக்கம் செய்தன. இந்தப் பொருளாதார மந்தநிலை பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.
- ஒரு நாட்டின் ரியல் எஸ்டேட் துறை பெரும் உச்சத்துக்குச் சென்று, வீழ்ச்சி அடையும்போது ஜப்பானின் இந்த வரலாற்றை நினைவுகூர்வது வழக்கம். தற்போது சீனாவை மையப்படுத்தி ஜப்பானின் இந்த வரலாறு நினைவுகூரப்படுகிறது.
தடுமாற்றத்தில் சீனா
- கடந்த 20 ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக மிகப் பெரும் வளர்ச்சியை எட்டி, அமெரிக்காவுக்கு நிகரான நாடாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. ஆனால், தற்போது சீனாவின் சாம்ராஜ்யத்துக்கு பெரும் சவால் வந்துள்ளது, ரியல் எஸ்டேட் துறை வழியாக.
- சீனாவின் மொத்த ஜிடிபியில் ரியல் எஸ்டேட் துறை 30 சதவீதம் பங்கு வகிக்கிறது. அத்துறையில் சீனா மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. தற்போது அத்துறை பெரும் தேக்க நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.
- பொதுவாக ஒரு நாட்டில் ரியல் எஸ்டேட் துறை பெரும் தேக்கத்தைச் சந்திக்கும்போது, அடுத்த பாதிப்பு அந்நாட்டின் வங்கித் துறையில் நிகழும். ஏனென்றால், ரியல் எஸ்டேட் துறை வளர்ந்துவரும் சமயத்தில் அந்நாட்டு வங்கிகள் அத்துறைக்கு கடன்களை வாரி இறைத்திருக்கும்.
- அத்துறை தேக்கத்தைச் சந்திக்கும்போது கடன்கள் திரும்பி வருவது நெருக்கடிக்கு உள்ளாகும். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலானதற்கு இது அடிப்படை காரணமாக இருந்தது. அதேபோல், தற்போது சீனாவில் ரியல் எஸ்டேட் துறையின் தேக்கத்தால் வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
மூன்று பிரச்சினைகள்
- 2020 மார்ச் மாதம் கரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் உலக நாடுகள் ஊரடங்கைக் கொண்டுவந்தன. தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை தளர்த்தின. ஆனால், சீனா ஊரடங்குக் கட்டுப்பாட்டை இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீட்டித்தது. இதனால், அங்கு தொழிற் செயல்பாடுகள் முடங்கிய நிலையில், நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தை சந்திக்கத் தொடங்கியது.
- கரோனாவுக்குப் பிறகு சீனாவில்மூன்று முக்கிய பிரச்சினைகள் தீவிரமடைந்தன. முதலாவது. ரியல் எஸ்டேட் துறையின் தேக்கம். இரண்டாவது உள்ளூர் அரசு நிர்வாகங்களின் கடன் சுமை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு. மூன்றாவது, மக்களின் நுகர்வு சரிவு. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தமூன்று பிரச்சினைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
- சீன சட்டப்படி, நில உரிமை சீன அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். தனியாருக்கு நிலத்தின் மீது உரிமை கிடையாது. அரசிடமிருந்து அவை நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். சீன அரசுக்கான வருவாயில் நில குத்தகை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், சீனா அந்நாட்டில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஊக்குவித்தது. சீன வங்கிகள் ரியல் எஸ்டேட் துறைக்கு கடன்களை வாரி இறைத்தன.
- மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி அதிக எண்ணிக்கையில் குடியேறுவார்கள் என்ற கணிப்பில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் காணும் இடமெங்கிலும் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டியெழுப்பின. ஆனால், எதிர்பார்த்த அளவில் அங்கு குடியேற்றம் நிகழவில்லை. 2022 நிலவரப்படி சீனாவில் 2.5 கோடி அடுக்குமாடி குடியிருப்புகள் காலியாக இருக்கின்றன. இது ஒட்டுமொத்த பிரிட்டன் மக்கள் குடியேறுவதற்கு போதுமானதாகும்.
- நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சீன அரசு, இனியும் ரியல் எஸ்டேட் துறைக்கு வரைமுறையில்லாமல் கடன் வழங்கினால் அது பெரும் சிக்கலில் முடிந்துவிடும் என்ற நிலையில், 2020-ம் ஆண்டு கடன் வழங்கலில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது.
- இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக பெரிய நிறுவனங்கள் எதிர்கொண்டுவந்த கடன்நெருக்கடி வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது. சீனாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் தீவிர நிதி நெருக்கடியில் இருப்பது 2021-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது.தற்போது கன்ட்ரி கார்டன் என்ற மற்றொரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் கடன் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
- ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய நூற்றுக்கணக்கான சீன வங்கிகள் நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தவிர, ரியல் எஸ்டேட் துறையின் சரிவால் உள்ளூர் நிர்வாகங்களுக்கான வருவாய் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் கடன் சுமை இதுவரையில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
பணவாட்டம்
- ரியல் எஸ்டேட் துறையின் சரிவு மக்களின் நுகர்வையும் பாதித்துள்ளது. சீன மக்களின் சேமிப்பில் 60 சதவீதம் ரியல்எஸ்டேட் துறையில் சொத்துகளாகஉள்ளன. அத்துறை தேக்கம் கண்டுள்ள நிலையில் மக்களின் சொத்து மதிப்பும் சரிந்துள்ளது. இதனால், மக்கள் பணத்தை செலவழிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
- மக்களின் நுகர்வு குறைந்துள்ளதால், நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருள்கள் தேங்கியுள்ளன. இதனால், விலைவாசி சரிந்துள்ளது. தொழிற் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால்,வேலையின்மையும் தீவிரமடைந்துள்ளது.
- அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்போது ‘பணவீக்கம்’ (Inflation) தீவிரமாக காணப்பட்டு வருகிறது. ஆனால், சீனாவில் ‘பணவாட்டம்’ (Deflation) காணப்படுகிறது. விலைவாசி உயர்ந்தால் அது பணவீக்கம். விலைவாசி சரிந்தால் அது பணவாட்டம். விலைவாசி உயர்வைப் போலவே விலைவாசி சரிவும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியது.
- ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்களின் நுகர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் அந்நாட்டின் ஜிடிபியில் மக்களின் நுகர்வு 70 சதவீதமாக இருக்கிறது. அதுவே சீனாவில் மக்களின் நுகர்வு 38 சதவீதமாக இருக்கிறது. முதலீடு 50 சதவீதமாக இருக்கிறது. முதலீடுக்கு ஏற்ப நுகர்வு நிகழ வேண்டும். இல்லையென்றால், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும்.
- கடந்த இருபது ஆண்டுகளில் சீனா கடன் திட்டங்கள் மூலம் முதலீட்டை மட்டுமே ஊக்குவித்து வந்துள்ளது. மக்களின் நுகர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதனால், முதலீடுக்கு ஏற்ப நுகர்வு நிகழவில்லை. தவிர, மக்களின் தனிநபர் வருமானமும் மேம்படவில்லை.
வேறு சில சவால்கள்
- ஆப்பிள், டெஸ்லா உட்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது விநியோக தளத்தை சீனாவில் கொண்டுள்ளன. தற்போது சீனா பொருளாதார தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனா தவிர்த்து இந்தியா உட்பட வேறு நாடுகளில் தங்களுக்கான விநியோக தளத்தை அமைக்கும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இது சீனாவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
- சீனாவின் மக்கள் தொகையும் குறையத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக வேலைவாய்ப்பில் பங்கேற்கக்கூடிய 15 – 64 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது.வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது சீனாவின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக நாடுகளுடன் நேரடி வர்த்தகத்தை சாத்தியப்படுத்தும் வகையில் மாபெரும் உள்கட்டமைப்பு (Belt and Road Initiative) திட்டத்தை சீனா மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆப்ரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு பெரும் தொகையை கடனாக வழங்கியுள்ளது. தற்போது அந்நாடுகளில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அந்தக் கடன் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உற்றுநோக்கும் உலகம்
- மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜி ஜின்பிங் சீனாவை அரசியல் தளத்திலும் பொருளாதார தளத்திலும் உலகின் மையமாக தன்னை மாற்ற திட்டங்கள் வகுத்து வருகிறார். ஆனால், களச் சூழல் மிக மோசமாகிக்கொண்டிருக்கிறது.
- தற்போதைய சரிவிலிருந்து சீனா எப்படி மீளப்போகிறது என்பதையும் அதன் முன் இருக்கும்சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது!
நன்றி: இந்து தமிழ் திசை (09 - 10 – 2023)