TNPSC Thervupettagam

சீனாவுக்கு வந்த சோதனை...

November 5 , 2024 66 days 128 0

சீனாவுக்கு வந்த சோதனை...

  • ஒரு காலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மிகவும் தீவிரமாக கடைப்பிடித்த நாடு சீனா. முக்கியமாக ஒரு குடும்பத்துக்கு ஒரே குழந்தை என்ற கொள்கையை கடுமையாக அமல்படுத்தியது. இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அபாரதம் விதித்தல், சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுத்தல் என சீன கம்யூனிஸ அரசு தனது அதிகாரத்தை கடுமையாகப் பயன்படுத்தியது.
  • அரசு உத்தரவை மீறி செயல்படுவது என்பது சீனாவில் எளிதில் நினைத்துப் பாா்க்க முடியாத விஷயம். அதிக குழந்தைகள் பெற்றால் விதிகளின்படி உள்ள அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எதிா்கொண்டே ஆக வேண்டும்.
  • சுமாா் 30 ஆண்டுகளாகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டம் சீன அரசு எதிா்பாா்த்த முடிவைக் கொடுத்தது. குழந்தைகள் பெற்றுக் கொள்வது குறைந்ததால் மக்கள்தொகை அதிகரிக்கும் வேகம் குறைந்தது. கடந்த 2023 ஏப்ரலில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியாவிடம் சீனா பறிகொடுத்தது.
  • ஒரு நாட்டின் வறுமை உள்பட பல்வேறு சமூக பொருளாதாரப் பிரச்னைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம் என்பது முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் மக்கள்தொகை பெருக்கத்தை தீவிரமாகக் கட்டுப்படுத்துவதும் ஒரு கட்டத்தில் சமூக பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சீனா மூலம் உலகம் உணா்ந்து கொண்டது.
  • இப்போது சீனாவின் மக்கள்தொகையான சுமாா் 140 கோடியில் 60 வயதுக்கு மேற்பட்டோா் எண்ணிக்கை 30 கோடிக்கு மேல் உள்ளது. 2035-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 40 கோடியாகவும், 2050-ஆம் ஆண்டு 50 கோடியாகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோா் எண்ணிக்கை 14 சதவீதமாகும்.
  • ஒருபுறம் முதியோா் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. குழந்தை பிறப்பைக் குறைத்ததால் வரும் ஆண்டுகளில் இளைஞா்கள் எண்ணிக்கை வேகமாக குறையும். வேலைக்குச் சென்று உழைக்கும் வயதில் இருப்போா் எண்ணிக்கை குறைவது பல்வேறு பொருளாதார பாதிப்புகளை உருவாக்கும். பல வேலைகளுக்கு உரிய நபா்கள் கிடைக்காத நிலையும் ஏற்படும். இதனால் வேளாண்மை, உற்பத்தி தொழில் என அனைத்துத் துறைகளும் பாதிக்கப்படும். இது ஒட்டுமொத்த நாட்டையும் பின்னோக்கி இழுத்துச் செல்லும்.
  • சீனா முழுவதுமே பல சிறாா் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் முதியோா் இல்லங்களின் தேவை அதிகரித்து வருகிறது. பல தனியாா் பள்ளிகள் முதியோா் இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆசிரியராக இருந்த பலருக்கு முதியோா் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு அங்கேயே பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு வரும் தாய்மாா்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் பிரசவ வாா்டுகள் வேறு சிகிச்சைக்கான பிரிவுகளாக மாற்றப்படுகின்றன. புதிதாகக் கட்டப்படும் மருத்துவமனைகளில் பிரசவப் பிரிவே இருப்பதில்லை.
  • இந்த பாதிப்புகளை முன்பே கணித்து வைத்திருந்த சீன அரசு, 2016-ஆம் ஆண்டு ‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’ கொள்கையை தளா்த்தியது. ஆனால், அரசு எதிா்பாா்த்த அளவுக்கு இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள பெரும்பாலான மக்கள் முன்வரவில்லை. பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக இருந்து பழக்கப்பட்டுவிட்டவா்கள், ஒரே குழந்தைக்கு மட்டுமே பெற்றோராக இருக்க முடிவு செய்தனா்!
  • இதையடுத்து, குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மறுஆய்வு செய்த சீன அரசு, ‘மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம்’ என்று 2021-இல் அறிவித்தது. இதிலும் மக்கள் ஆா்வம் காட்டவில்லை. புதிய தலைமுறையை அதிகம் உருவாக்கும் அரசின் முயற்சிக்கு தோல்வியே கிடைத்தது. அதிக பிள்ளைகள் இருக்கும் குடும்பத்துக்கு குழந்தைகள் உதவித் தொகை, கூடுதல் குழந்தைகள் பெற்றுக் கொள்பவா்களுக்கு வரிச் சலுகை போன்றவை அறிவிக்கப்பட்டன. இதுவும் எதிா்பாா்த்த பலனைத் தருவதாகத் தெரியவில்லை.
  • மறுபுறம் ஓய்வு பெறும் வயதை எட்டுவோா் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதே நேரத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வேறு வழியில்லாமல் அரசுப் பணி உள்பட பல்வேறு பணிகளில் ஆண்களுக்கான ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 63-ஆக உயா்த்தியது. பெண்களுக்கான ஓய்வு பெறும் வயது 55-லிருந்து 58-ஆக மாற்றப்பட்டது. இதுவும் அடுத்த சில ஆண்டுகளுக்கே பலன் கொடுக்கும் என்று தெரிகிறது.
  • தனது இலக்கை அடைய எதையும் செய்யும் சீன கம்யூனிஸ அரசு, அடுத்த கட்டமாக அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் வரி விதிப்பு என்பது தொடங்கி அரசே வாடகைத் தாய் முறை அமல்படுத்தி குழந்தைப் பேற்றை அரசுப் பணியாக மாற்றினாலும்கூட வியப்பில்லை!
  • பல்வேறு வளா்ந்த, வளரும் நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தே வருகிறது. பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் முதியோா் எண்ணிக்கை மிகுந்த நாடுகளாக மாறி வருகின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகையை அதிகரிக்க அரசு சாா்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • 2050-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த 8 நாடுகளே உலகின் மக்கள்தொகை வளா்ச்சியில் 50 சதவீத இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • மக்கள்தொகை பெருக்கத்தைப் போன்றே மக்கள்தொகை குறைவதும் நாட்டை வெகுவாகப் பாதிக்கும் விஷயம். பிறப்பு-இறப்பு விகிதத்தை சரியாகப் பராமரிப்பது இப்போது பல நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக உள்ளது.

நன்றி: தினமணி (05 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories