சீரமைக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு
- இந்திய அரசமைப்பின் மிகச்சிறந்த கூறுகளில் ஒன்றாக மிளிர்வது நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை. தேர்தல் மறுசீரமைப்பு, தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) ஆகிய இரண்டும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் நடத்துவதும், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதும் உள்ளபடியே சிக்கலான பிரச்சினைகள்.
- அதிலும், தொகுதிகள் மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை தொடர்பான விஷயம் என்று எளிதில் கடந்து போய்விடக்கூடியதல்ல. குடிமக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், மாநில உரிமைகள், கூட்டாட்சி முறையின் கதியை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய விஷயம் இது.
அரசமைப்பும் தொகுதி மறுசீரமைப்பும்:
- வாக்குரிமையின் மூலமாகவே குடிமக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வர்க்க பேதம், மதம், இனம், சாதி, மொழி, பாலினம் என அனைத்துப் பாகுபாடுகளையும் உடைத்தெறிந்து (18 வயது பூர்த்தியான) குடிமக்கள் அனைவருக்கும் ஒரே மதிப்பு கொண்ட வாக்குரிமையை (Equally Weighted Vote) இந்திய அரசமைப்பு வழங்கியிருக்கிறது.
- தொகுதிகளுக்கு இடையே நிலவும் மக்கள்தொகை வேறுபாடு காரணமாக வாக்குகளின் மதிப்பு ஏற்றத்தாழ்வு கொண்டதாக மாறிவிடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அத்தகைய சீரற்ற பிரதிநிதித்துவ நிலையை (Malapportionment) அறிவியல்பூர்வமான முறையில் கையாளுவதற்காகவே தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
- எனவே, ஒவ்வொரு பத்தாண்டுகள் நிறைவுற்ற பிறகு, மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் (Census Act) அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது; மக்கள்தொகை வளர்ச்சியின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசமைப்பின் பிரிவுகள் 81, 82, 170, 329, 330, 332, மறுசீரமைப்புச் சட்டம் (Delimitation Act) ஆகியவை இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உரிய அதிகாரத்தையும், வழிகாட்டுதலையும் வழங்குகின்றன.
- இவற்றின் அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள ஓர் உயர்நிலை அமைப்பு (Delimitation / Boundary Commission) அமைக்கப்படுகிறது. இதுநாள்வரையில் 1952, 1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில், அத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டுத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மூலமாக நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை முறையே 494, 520, 542, 543 என அதிகரித்தது.
- 1976ஆம் ஆண்டில், இந்திய அரசமைப்பின் 42ஆவது திருத்தச் சட்டத்தின்படி, 2001ஆம் ஆண்டு வரையிலும் தொகுதி மறுசீரமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், 2001இல், இந்திய அரசமைப்பின் 84ஆவது திருத்தச் சட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டு வரையிலும் தொகுதி மறுசீரமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இருப்பினும், 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில், மாநிலத்துக்கு உட்பட்ட தொகுதிகளின் (Constituencies within the States) மக்கள்தொகைச் சமன்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
மக்கள்தொகையும் பிரதிநிதித்துவமும்:
- 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின்போது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17.3 கோடி. நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 401 ஆக இருந்தது. 2024 ஜனவரி நிலவரப்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 96.8 கோடி. நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக இருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில், வாக்காளர் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், பிரதிநிதித்துவத்தில் மக்கள்தொகையின் பிரதிபலிப்பு சரியான விகிதத்தில் இல்லை.
- தற்போதுள்ள நிலையில், இதர ஜனநாயக நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும், நமது மக்களவை உறுப்பினர்கள், மக்கள்தொகை அதிகம் கொண்ட - பரந்து விரிந்த தொகுதிகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்புமிக்கவர்களாக இருக்கிறார்கள். 6.73 கோடி மக்கள்தொகை கொண்ட பிரிட்டனில், நாடாளுமன்றக் கீழவையின் (Lower House) மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 650.
- அதேபோல், 6.56 கோடி மக்கள்தொகை கொண்ட ஃபிரான்ஸில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 577. 8.34 கோடி மக்கள்தொகை கொண்ட ஜெர்மனியில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 736. எனவே, இந்திய மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்திருப்பதை மறுக்க முடியாது. அவ்வாறு அதிகரிப்பதன் மூலம், குடிமக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் ஓரளவு மேம்படுத்தப்படுவதுடன், தொகுதி மக்களின் நியாயமான தேவைகளையும் உறுப்பினர்கள் திறம்பட நிறைவேற்றிட முடியும்.
இந்தியச் சூழலில் மறுசீரமைப்பு:
- அதேவேளையில், உலகின் இதர ஜனநாயக நாடுகளில் இருப்பதைப் போல், மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல், பன்மைத்துவமிக்க இந்தியாவின் பிரத்யேகமான சமூக அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டியது அவசியம்.
- முதலாவதாக, மக்கள்தொகைப் பெருக்கம் - கட்டுப்பாடு என்பது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சீராக இல்லை; மேலும், நகரமயமாக்கம், கல்வி, வேலைவாய்ப்புக்காகப் புலம்பெயர்தல் ஆகிய சமூக இயங்குமுறைகள் (Societal Dynamics), பட்டியல் சாதி - பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவம் நெடுங்காலமாக உயர்த்தப்படாமல் இருப்பது, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்கிற நியாயமான அச்ச உணர்வு, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல், சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எனப் பல்வேறு சமூக - அரசியல் - பொருளாதார அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், கலந்தாலோசனைகள், கருத்தொற்றுமை மூலமாக இந்தியாவில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதே சிறந்த அணுகுமுறையாக இருக்கும்.
- 1970களில் இருந்து மத்திய அரசின் மக்கள்தொகை பெருக்கம் -கட்டுப்பாடு தொடர்பான கொள்கை முடிவுகளை ஏற்று, அதற்கான சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய காரணத்தால் தென்னிந்திய மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒப்பீட்டு அளவில் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழலில் 15ஆவது நிதி ஆணையம் 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளுக்குப் பதிலாக 2011ஆம் ஆண்டின் தரவுகளைப் பயன்படுத்தி மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வுக்கான ஏற்பாட்டை மேற்கொண்டது.
- இதன் காரணமாக, தென்னிந்திய மாநிலங்கள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றன. இதுபோன்றே, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையிலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்கிற கருத்து நிலவுகிறது.
தீர்வை நோக்கிய பயணம்...
- மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஸ்திரத்தன்மையை அடையும்வரை 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த ஏற்பாடு தொடரும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
- தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே வேளையில், தொகுதி மறுசீரமைப்பு என்பதைத் தென்னிந்திய மாநிலங்களின் பிரச்சினை என்கிற அளவில் சுருக்கி விடாமல், குடிமக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவ பிரச்சினை என்கிற விழிப்புணர்வை உருவாக்கிட வேண்டும்.
- தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும், அதற்கான அறிவியல்பூர்வமான தீர்வுகளை அடைந்திட விரிவான பொது விவாதங்கள் தேசம் தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள்தொகை கட்டுப்பாடு, அரசியல் பிரதிநிதித்துவம், வரி வருவாய் பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தேசத்தின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தியுள்ள கூட்டாட்சி முறையையும், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும் பாதுகாத்திட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதும் மிகவும் அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2025)