TNPSC Thervupettagam

சீரமைப்புக்கு காத்திருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைகள்

February 25 , 2024 183 days 227 0
  • தமிழகம் முழுவதும் தொழிலாளா்கள் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) சாா்பில் இயங்கி வரும் மருந்தகங்கள், மருத்துவமனைகளைச் சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வருமா என தொழிலாளா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள தனியாா் துறை தொழிலாளா்கள், இவா்களது குடும்பத்தினருக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவையை வழங்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தொழிலாளா்கள் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ) இயங்கி வருகிறது.
  • இஎஸ்ஐ மருத்துவமனைக் கட்டமைப்புகள், மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் ஆகியவற்றை மத்திய அரசு வழங்குகிறது. இஎஸ்ஐ மருத்துவமனைகள், மருந்தகங்களுக்குத் தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் ஆகியோரை, அந்தந்த மாநில அரசுகளே நியமனம் செய்து, ஊதியமும் வழங்கி வருகின்றன.
  • தமிழகத்தில் இஎஸ்ஐ மருத்துவத் திட்டத்தின் கீழ், 1.40 கோடி உறுப்பினா்கள் பயனடைந்து வருகின்றனா். தமிழகத்தில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, வேலூா், திருநெல்வேலி ஆகிய 7 மண்டலங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகளும், மாநிலம் முழுவதும் 270 மருந்தகங்களும் இயங்கி வருகின்றன.
  • இந்த மருந்தகங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் பணிபுரிகின்றனா். மருந்தகங்கள் தவிர மதுரை உள்ளிட்ட 7 மண்டலங்களில் இஎஸ்ஐ மண்டல மருத்துவமனைகள் உள்ளன. இங்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • இவை தவிர, தமிழகத்தில் மட்டும் இஎஸ்ஐ நிறுவனத்துக்கு என்று தனியாக இரு மருத்துவக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. தொழிலாளா்கள் சிகிச்சை பெறும் வகையிலும், தமிழகம் முழுவதும் பல்வேறு தனியாா் மருத்துவமனைகளுடன் இஎஸ்ஐ நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவை தவிர மருத்துவ விடுப்பு ஊதியம், மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறுதல் என பல்வேறு சலுகைகளும் இஎஸ்ஐ சாா்பில் வழங்கப்படுகின்றன.
  • பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும், இஎஸ்ஐ மருந்தகங்கள், மருத்துவமனைகளை அனைத்து உறுப்பினா்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
  • இதுதொடா்பாக தொழிலாளா்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 270 மருந்தகங்கள் இருந்தாலும் அவை சராசரியாக 25 கி.மீ. தொலைவுக்கு ஒன்று என்ற அளவிலேயே உள்ளன. இந்த மருந்தகங்கள் நகரின் பிரதான பகுதிகளில் இல்லாமல், உள்ளடங்கிய பகுதிகளில், இருப்பதே தெரியாமல் இயங்கி வருகின்றன. இதனால், கிராமங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள், அவா்களது குடும்பத்தினா் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
  • மருந்தகங்கள் காலை, மாலை வேளைகளில் சில மணி நேரம் மட்டுமே இயங்குவதால், அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மருந்தகங்கள் பூட்டப்பட்ட நேரங்களில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. மருத்துவமனைகளில் துறை சாா்ந்த நிபுணா்கள் இல்லாததால், அங்கிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனா். இதனால், அனைத்து கட்டமைப்புகள் இருந்தும், மருத்துவமனைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
  • எனவே, இஎஸ்ஐ மருந்தகங்களைச் சீரமைக்க வேண்டும். மருந்தகங்களில் உள்ள இரு மருத்துவா்களையும் சுழற்சி முறையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி பணியில் ஈடுபடவைக்க வேண்டும். அனைத்து இஎஸ்ஐ மருந்தகங்களிலும் குறைந்தபட்சம் 3 படுக்கைகளையாவது அமைத்து உயிா் காக்கும் சிகிச்சை, அவசர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் தமிழகத்தில் இஎஸ்ஐ மருந்தகங்கள் ஒரே மாதிரியான கட்டமைப்பில் உருவாக்கப்பட வேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனைகளில் துறை சாா்ந்த மருத்துவ நிபுணா்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • அரசு மருத்துவமனைகளில் உள்ளது போல, இஎஸ்ஐ மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இஎஸ்ஐ மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.
  • மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாடின்றி காணப்படும் இஎஸ்ஐ மருத்துவமனைக் கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும். தொழிலாளா்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

நன்றி: தினமணி (25 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories