TNPSC Thervupettagam

சீர்குலைவில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்

July 26 , 2023 482 days 356 0

தோற்றம்:

  • 1964-ஆம் ஆண்டில் இந்திய தலைநகரான தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை மொழிகள் ஆய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர்.
  •  உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி தமிழ் ஆராய்ச்சிக்கு என உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து முனைவர் தனிநாயகம் அடிகளும், முனைவர் வ.அய். சுப்ரமணியமும் கலந்தாலோசித்து அவர்கள் பெயரால் அழைப்பு விடுக்கப்பட்டு 7.12.1964 அன்று ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. மூத்த தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உலகளாவிய தமிழ் ஆய்வு மையம் ஒன்றை தோற்றுவிக்க வேண்டிய தேவை குறித்து தனிநாயகம் அடிகள் விளக்கிக் கூறினார்.
  •  உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்கியமான தமிழறிஞர்கள் அனைவரும் பங்கேற்ற இக்கூட்டத்தில் மன்றத் தலைவராக ழான் ஃபிலியோசா (பிரான்ஸ்) தலைவராகவும், பேராசிரியர் தாமஸ் பரொ (பிரிட்டன்), பேராசிரியர் கியூடன், பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், பேராசிரியர் மு. வரதராசனார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பேராசிரியர் கமில் சுவலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்த அமைப்புக்கு உலக அளவில் பெருமை தேடித் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இதன் தலைவர்களாக இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் உயரிய மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கிணங்க கீழ்க்கண்டவர்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜீன் பில்லியோஸட்; நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஃப்.பி.ஜெ. குய்பெர்; பிரிட்டனின் எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர்.இ. ஆஷர்; ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியரான நொபுரு கரோஷிமா; மலேசிய கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் டான் ஸ்ரீ மாரிமுத்து என்று அந்த வரிசை தொடர்ந்தது.
  • உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடர்ந்து அது நடத்தியுள்ளது. இதுவரை 8 மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
  • இவற்றில் 5 மாநாடுகள் பிரான்ஸ், இலங்கை, மோரீஷஸ், மலேசியா (இரு மாநாடுகள்) ஆகிய வெளிநாடுகளில் நடைபெற்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மூன்றிடங்களில் மாநாடுகள் நடைபெற்றன.
  • உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் ஒன்பதாவது மாநாடு குறித்த பிரச்னை எழுந்தபோது அதன் தலைவர் பதவியிலிருந்து முனைவர் நொபுரு கரோஷிமா விலகியதை அடுத்து முனைவர் மாரிமுத்து மன்றத் தலைவராக சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்த பேரா. இ. அண்ணாமலை சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக இருந்தார். அவருடைய முயற்சியின் விளைவாக, 10-ஆவது மாநாட்டினை அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. ஆராய்ச்சியாளர்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து மாநாட்டை முழுமையான கல்விசார் மாநாடாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிகாகோ பல்கலைக்கழகம் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
  • ஆனால், பொன்னவைக்கோ போன்றவர்களுக்கு இது பிடிக்கவில்லை. எனவே, அவர் வடஅமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளை அணுகி இம்மாநாட்டினை நடத்தும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார்.
  • மாநாடு முடிந்த பிறகு பொன்னவைக்கோ ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்திற்கு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவரான பேராசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். இக்கூட்டத்தின் இறுதியில் திடீரென்று புதிய தலைவராக பொன்னவைக்கோ முன்மொழியப்பட்டு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத் தலைவரான பேராசிரியர் மாரிமுத்து அதிர்ச்சியடைந்ததோடு, இதை ஏற்க மறுத்தார். கூட்ட நடவடிக்கைக் குறிப்பேட்டிலும் அவர் கையொப்பமிட மறுத்து வெளியேறினார்.
  • உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் சட்டத்துக்கு மாறாக சிறிதும் சம்பந்தமில்லாத 15 பேர் மட்டுமே கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்துவிட்டனர். இந்த அறிவிப்பு அமைப்பின் சட்டத்துக்கு எதிரானது என உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அப்போதைய தலைவரான பேரா. மாரிமுத்து அறிவித்தார்.

 முறைகேடுகள்

  • உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (ஐ.ஏ.டி.ஆர்.) முதல் தலைவரான பேரா சிரியர் ஃபிலியோசாவினால் பாரிஸில் யுனெஸ்கோ மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் வேர்ல்ட் தமிழ் ரிசர்ச் அசோசியேஷன் (டபிள்யூ.டி.ஆர்.ஏ.) என மாற்றி இந்தியாவில் கம்பெனி சட்டத்தின் கீழ் பொன்னவைக்கோ பதிவு செய்துள்ளார்.
  • ஐ.ஏ.டி.ஆர். அமைப்பு விதிமுறைகளும், டபிள்யூ.டி.ஆர்.ஏ. அமைப்பின் விதிமுறைகளும் முற்றிலும் வெவ்வேறானவை. டபிள்யூ.டி.ஆர்.ஏ. என்பது சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் அடங்கிய லிமிடெட் கம்பெனி ஆகும். உறுப்பினர்கள் தமிழறிஞர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அமைப்பின் இயக்குநர்கள் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள்.
  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களைக் கொண்ட தேசியக் குழுவினர் ஐ.ஏ.டி.ஆர். அமைப்பின் உறுப்பினர்களாவர். பல்வேறு நாடுகளின் தேசியக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்டதுதான் ஐ.ஏ.டி.ஆர். பொதுக்குழுவாகும். இந்த அமைப்புதான் தலைவரையும், இதர நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்கும். எனவே, ஐ.ஏ.டி.ஆர். அமைப்பு வேறு; டபிள்யூ.டி.ஆர்.ஏ. அமைப்பு முற்றிலும் வேறானதாகும்.
  • ஐ.ஏ.டி.ஆர். அமைப்பு பிரான்ஸில் யுனெஸ்கோ அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டபிள்யூ.டி.ஆர்.ஏ. அமைப்பு தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பையும் இரண்டு நாடுகளில் பதிவு செய்ய முடியாது.
  • எனவே, சிகாகோவில் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் 10-ஆவது மாநாடு அல்ல. அதன் பெயரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட மாநாடாகும்.
  • ஆனால், இந்த உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் சிகாகோ மாநாட்டில் கலந்துகொண்டனர். அவர்கள் மட்டுமல்ல, தமிழக அமைச்சராக இருந்த மா.பா. பாண்டியராஜன் பங்கேற்றார். தமிழக அரசின் சார்பில் இம்மாநாட்டிற்காக ரூ.10 கோடி வழங்கப்பட்டது.
  • பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), பேராசிரியர் ஸ்டீவ் ஹட்ஸ் (பிரிட்டன்), பேராசிரியர் பிரான்சிஸ் கோடி (கனடா), பேராசிரியர் ஒல்ரிக் நிக்லஸ் (ஜெர்மனி), பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி (ரஷியா - இவர் தற்போது உயிருடன் இல்லை) உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 தமிழறிஞர்கள் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்கள்.
  • உலக அளவில் புகழ் பெற்ற தமிழறிஞர் ஒருவர்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் மரபு பின்பற்றப்படவேண்டும்.
  • இம்மன்றத்தின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுடன் சுருங்கிவிடக் கூடாது. உலக அளவில் அமைய வேண்டும்.
  • உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களைக் கொண்ட குழுவினால் முறைப்படி பரிந்துரைக்கப் படுபவர்கள் இம்மன்றத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • அறிவியல்பூர்வமாகவும், தொழில்நுட்ப கோணத்திலும் இம்மன்றம் தமிழாய்வுப் பணிகளைத் தொடருமாறு முடுக்கிவிடப்பட வேண்டும்.
  • உலக நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அரசியல் சார்பற்ற உண்மையான கல்வி ஆய்வு அமைப்பாக இம்மன்றம் திகழ வேண்டும்.
  • உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்குப் புத்துயிர் கொடுத்துச் செயல்பட வைக்கவேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
  • 46 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டுத் தமிழ் ஆராய்ச்சியை உலகத் தரத்திற்கு எடுத்துச்சென்ற இந்த அமைப்பு தற்போது பெரும் சீர்குலைவில் சிக்கியுள்ளது. இதிலிருந்து இந்த அமைப்பை மீட்டு, புத்துயிர் ஊட்டி காக்க வேண்டிய கடமை உலகத் தமிழர்களுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.
  • கீழ்க்கண்ட அம்சங்களை அவர்கள் நன்கு ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் செயல் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்.
  • தமிழக முதலமைச்சரைச் சந்தித்து நிலைமைகளை விளக்குவதற்கு ஒரு தூதுக் குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • ஐ.ஏ.டி.ஆர்.-ஐ பதிவு செய்த ஆவணத்தை யுனெஸ்கோவிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து உதவ வேண்டும். பல ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் நிலுவைச் சந்தாவையும் கட்டி மீண்டும் யுனெஸ்கோ ஆதரவில் ஐ.ஏ.டி.ஆர். இயங்குவதற்கு தமிழக அரசு உதவிடவேண்டும். வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லாத இந்தப் பெருமையை தமிழுக்குப் பெற்றுத்தர தமிழக அரசு முன்வரவேண்டும்.
  • உலகத் தமிழாராய்ச்சி மன்றத்துக்கு நிரந்தரமான அலுவலகம் இதுவரை இல்லை. இம்மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரின் இல்லத்தில் அலுவலகம் இயங்கியது. ஒவ்வொரு முறையும் புதிய தலைவர் எந்த நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ, அவரின் இல்லத்துக்கு அலுவலகம் மாறும். இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
  • தமிழ்நாட்டில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க அலுவலக வளாகத்திலோ இம்மன்றத்திற்கு நிரந்தரமான அலுவலகக் கட்டடம் உருவாக்கப்பட வேண்டும். நிரந்தரமான அலுவலர்களும் நியமிக்கப்படவேண்டும். இதற்குத் தேவையான நிதி உதவியை தமிழக அரசு மட்டுமல்ல, இந்திய அரசிடமும், ஐ.நா. யுனெஸ்கோ அமைப்பிடமும் கேட்டுப் பெற்றுத் தர வேண்டும்.

நன்றி: தினமணி (26  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories