TNPSC Thervupettagam

சுதந்திர தினத்தன்று காந்தி என்ன செய்துகொண்டிருந்தார்?

September 18 , 2019 1950 days 1126 0
  •  “என்னால் ஆகஸ்ட் 15-ம் தேதியைக் கொண்டாட முடியாது. உங்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அதே நேரத்தில், உங்களைக் கொண்டாட வேண்டாம் என்று நான் கூறவும் மாட்டேன்.
  • துரதிர்ஷ்டவசமாய், இன்று நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கான விதைகள் அடங்கியிருக்கின்றன. இத்தருணத்தில், எப்படி நாம் ஒளியேற்றிக் கொண்டாட முடியும்?” என்றார் காந்தி. இது சுதந்திரத்துக்கு முன்பு 1947 ஜூலை மாதத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின்போது காந்தி கூறியது.

இந்தியாவிற்கு சுதந்திரம்

  • அதற்கும் முன்னதாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற பணிக்காகப் புதிய வைஸ்ராயை அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி பிப்ரவரி-20 அன்று நியமித்தார்.
  • மவுண்ட்பேட்டன் பிரபுதான் அந்த வைஸ்ராய். இதனை அடுத்து மார்ச் 22-ம் தேதியன்று மவுண்ட்பேட்டன் இந்தியாவுக்கு வந்தார்.
  • வந்த உடனே காந்தியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். காந்தி அப்போது பிஹாரில் இருந்தார். பிஹாரில் மோசமான இனக் கலவரத்தால் ஏராளமான முஸ்லிம்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
  • நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், அங்கிருந்த காந்திக்கு மவுண்ட்பேட்டன் தன்னைச் சந்திக்க விரும்புகிறார் என்பது தெரியவருகிறது.
  • அதனையடுத்து டெல்லிக்கு மார்ச் 31-ல் காந்தி செல்கிறார். அங்குள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் குடியிருப்பில் காந்தி தங்குகிறார். ஏப்ரல் முதல் தேதியன்று மவுண்ட்பேட்டனை காந்தி சந்திக்கிறார்.
  • இந்தியா இரண்டாகப் பிரியப்போகிறது என்ற அச்சத்தில் இருந்த காந்தி, மவுண்ட்பேட்டனிடம் ஒரு யோசனையை முன்வைக்கிறார்.
  • ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக் கட்சியே ஆட்சியை அமைக்கட்டும். தான் விரும்பியவர்களையே ஜின்னா அமைச்சரவையில் நியமிக்கட்டும். காங்கிரஸ் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்றார் காந்தி.

இந்து-முஸ்லிம் கலவரங்கள்

  • ஏற்கெனவே, கடுமையான இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பார்த்து மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த காந்தி, தேசப் பிரிவினை என்பது பெருமளவில் ரத்தம் சிந்த வைக்கும் ஒரு நடவடிக்கையாகத்தான் இருக்கும் என்று தீர்க்கதரிசனமாகத் தெரிந்திருந்தது.
  • அதைத் தடுப்பதற்காகத்தான் ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீகே ஆட்சியை அமைக்கட்டும் என்றார். ஆனால், இதை நேரு, படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை.

காங்கிரஸ் தீர்மானம்

  • இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்படும் என்றும் ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் அட்லி அறிவித்தார். இதை நேரு, படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
  • இந்தத் திட்டத்தை ஆதரித்து காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இயற்றியது. ஜூன் 15-ல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழு, இந்தத் திட்டத்தை ஏற்பது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. 153 பேர் ஆதரித்தும் 29 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • எனினும் இது காந்திக்கு ஒப்புதல் இல்லாத தீர்மானம் என்பதால் அவருடைய நெருக்கமான தொண்டரும் அப்போதைய காங்கிரஸ் தலைவருமான கிருபளானி இப்படிக் கூறினார்: “நான் முப்பதாண்டு காலமாக காந்திஜியுடன் இருந்திருக்கிறேன். சம்பாரண் சத்தியாகிரகத்தின்போது அவருடன் இணைந்தேன்.
  • அவர் மீது நான் கொண்டிருக்கும் விசுவாசத்துக்கு மாறாக நான் என்றுமே நடந்துகொண்டதில்லை. ஆனால், இப்போது அவரால் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு தீர்மானத்தை ஏன் நிறைவேற்றியிருக்கிறோம்? ஏனெனில், சகோதரத்துவத்துக்கும் அமைதிக்கும் காந்தி விடுத்த அறைகூவலுக்கு இந்த தேசம் செவிமடுக்கவில்லை.”
  • ஆம்! காங்கிரஸுக்கு வேறு வழியே இல்லை. 1946-லிருந்து நடைபெற்றுவரும் இனக் கலவரங்களைப் பார்த்த பிறகு பிரிவினை என்பது தவிர்க்க முடியாதது என்ற நிதர்சனம் காங்கிரஸ் தலைவர்களுக்குப் புரிந்திருக்கும்.
  • மேலும், இரு மதத்தினரும் என்றென்றுமாக ஒருவரையொருவர் அடித்துக் கொன்று குவித்துக்கொண்டிருப்பதை நாடு தாங்க முடியாது என்பதால், தேசப் பிரிவினைத் தீர்மானத்தை வேறு வழியின்றி காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. ஆனால், காந்திதான் இறுதிவரை தேசப் பிரிவினையை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தார்.
  • “பாகிஸ்தான் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுவிட்டது. பஞ்சாபையும் வங்கத்தையும் பிரிக்க வேண்டும் என்றும் அது கோரியிருக்கிறது. இந்தியாவைப் பிரிப்பதற்கு நான் எப்போதும்போல எதிரானவன்.
  • ஆனால், என்னால் என்ன செய்துவிட முடியும்? என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு விஷயம் எதுவென்றால், இந்தத் திட்டத்திலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்வதுதான். கடவுளைத் தவிர, வேறு யாராலும் இதை ஒப்புக்கொள்ளும்படி என்னை வலியுறுத்த முடியாது” என்று காந்தி கூறியது விரக்தியின் உச்சம்.

ரத்தம் சிந்திய வரைபடம்

  • தேசப் பிரிவினை உறுதியான பிறகு, எந்தெந்த இடங்கள் எந்தெந்த நாட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு சிறில் ராட்கிளிஃப் என்ற பாரிஸ்டர் ஜூன் இறுதியில் நியமிக்கப்பட்டார்.
  • இந்தியாவைப் பற்றிச் சிறிதும் தெரியாத, இந்தியாவில் காலடியே வைத்திராத ஒருவரிடம் இந்தியாவைப் பிரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது விசித்திரம்.
  • ஜூலை மாதம் ராட்கிளிஃப் இந்தியாவுக்கு வந்தார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினமாகக் குறிக்கப்பட்டுவிட்டதால், ராட்கிளிஃபிடம் இருந்ததெல்லாம் சில வாரங்களும் ஒரு வரைபடமும் சில உதவியாளர்களுமே. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்ளிட்ட தகவல்களைக் கையில் வைத்துக்கொண்டு வரைபடத்தில் கோடு கிழிக்க ஆரம்பித்தார் ராட்கிளிஃப்.
  • அவருடைய பென்சில் உண்மையில் தேச வரைபடத்தில் விளையாடியிருக்கிறது. வயல் ஒரு நாட்டிலும் வீடு ஒரு நாட்டிலும், முன்வாசல் ஒரு நாட்டிலும் பின்வாசல் ஒரு நாட்டிலும், தெருவின் எதிரெதிர் சாரிகள் வேறு வேறு நாட்டிலும் என்று தேச வரைபடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ராட்கிளிஃபின் பென்சில் கிழித்த கோடுகளை காந்தி பார்த்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்.
  • சுதந்திரம் நெருங்க நெருங்க பஞ்சாப், வங்கம், பிஹார் போன்ற இடங்கள் கலவரங்களால் பற்றியெரிந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் கேள்விப்பட்ட காந்தி, “தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியாவில் எனக்கு இடமே இல்லை. 125 ஆண்டுகள் வாழும் விருப்பத்தை நான் விட்டுவிட்டேன். ஓரிரு ஆண்டுகள்தான் நான் நீடிக்கலாம். அது வேறு விஷயம். வன்முறை வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில் வாழ எனக்கு விருப்பமே இல்லை” என்று புலம்பினார் காந்தி.
  • சுதந்திர தினமும் வந்துவிட்டது. இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டும்விட்டது. வன்முறைகளுக்குச் சிறிது இடைவெளி விட்டு, நாடு முழுதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்படிக் கொண்டாடாத ஒரு நபர் காந்திதான். சுதந்திர தினத்தன்று அவர் கல்கத்தாவில் இருந்தார். கல்கத்தாவில் நடந்த கலவரங்களைத் தணிப்பதற்காக அங்கு சென்றிருந்த காந்தி, சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருந்தார். ராட்டையில் நூல் நூற்றார்.
  • கல்கத்தாவில் அவர் சுஹ்ரவர்த்தி என்ற முஸ்லிம் தலைவருடன் தங்கியிருந்தார். காந்தி வந்த பிறகு அங்கே கலவரம் தணிந்தது. சுதந்திர தினத்தன்று இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள்.
  • மாணவர்கள் மத நல்லிணக்க அணிவகுப்புகளை நடத்தினார்கள். தொடர்ந்துவந்த நாட்களிலும் அப்படியே. அதைப் பற்றிக் குறிப்பிடுகையில் மவுண்ட்பேட்டன், “பஞ்சாபில் கலவரத்தை அடக்க முடியாமல் நமது ராணுவ வீரர்கள் 50 ஆயிரம் பேர் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.
  • ஆனால், கல்கத்தாவில் நமது ராணுவம் ஒரே ஒரு நபரை (காந்தியை) உள்ளடக்கியது. ஆனால், அங்கு கலவரமே இல்லை” என்றார். அப்போது வங்கத்தின் ஆளுநராக இருந்த ராஜாஜி, “மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் எத்தனையோ விஷயங்களைச் சாதித்திருக்கிறார்.
  • ஆனால், கல்கத்தாவில் சாதித்த அளவுக்கு மிக அற்புதமாக வேறெதையும் அவர் சாதித்திருக்கிறார் என்று நான் கருதவில்லை” என்று நெகிழ்ந்துபோனார். அதுதான் காந்தியின் வல்லமை!

நன்றி: இந்து தமிழ் திசை (18-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories