TNPSC Thervupettagam

சும்மா வரவில்லை சுதந்திரம்

August 20 , 2023 380 days 271 0
  • 'என்று தணியும்‌ இந்த சுதந்திர தாகம்‌
  • என்று மடியும்‌ எங்கள்‌ அடிமையின்‌ மோகம்‌'
  • - பாரதி
  • 1932-ம்‌ ஆண்டு அடிமையிருளில்‌ மூழ்கிக்‌ கிடந்தது இந்தியா; நம தருமைத்‌ தாய்நாடு. அப்படியென்றால்‌? அப்போதிருந்த இந்தியர்கள்‌ அனைவரும்‌ அடிமைகள்‌! இதில்‌ சாதி மதபேதமில்லை. ஏழை பணக்காரனும்‌, ஏற்றத்தாழ்வுகளும்‌ இல்லை. சமத்துவம்‌ பூத்துக்குலுங்கியது - அடிமைத்தனத்தில்‌.
  • 'அடிமையிருளகற்றி, சுதந்திர ஒளியேற்றி வைத்திடுவார்‌ அவர்‌' என மக்கள்‌ அனைவரும்‌ நம்பினர்‌. அவரும்‌, அந்த நம்பிக்கைக்கு உரியவர்தான்‌ என்பதை நிரூபித்தார். இந்தியர்களின் சுதந்திரக் கனவை நனவாக்கிவிட்டு, இந்தியன் ஒருவனின் துப்பாக்கி ரவைகளினால்‌ முத்தமிடப்பட்டுசெங்குருதியினைச்‌ சிந்தியவாரே, 'ஹே, ராம்' என உச்சரித்த வண்ணம்‌ மரண தேவதையின் கரங்களில் அவர் வீழ்ந்தார்‌.
  • 'அவர்‌' யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆம், அவர்தான் 'அரை நிர்வாணப்‌ பக்கிரி' என சர்ச்சில் பெருமானால் 'புகழாரம்' சூட்டப்பட்ட காந்தியடிகள்! 
  • 1932 ஆம் ஆண்டு - நாடெங்கும் அன்னியத் துணிகளைப் பகிஷ்கரித்துப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணமாயிருந்தன.
  • இந்தியாவின்‌ நுழைவாயில்‌ எனச்‌ சிறப்பிக்கப்படுகின்ற பம்பாய்‌ மாநகரத்தில்‌ ஒருநாள் மாலை,
  • அது ஒரு நெடுஞ்சாலை, அதன்‌ இருமருங்கிலும்‌ எண்ணற்ற கடைகள்‌ - அன்னியத்துணிகளை விற்பவை.
  • மகாத்மா காந்திக்கு! ஜே! என்ற முழக்கம்‌ ஒலிக்க, போராட்ட வீரர்கள்‌ நகர்வலம்‌ வருகின்றனர்‌. அன்னியத் துணிகளை வாங்கச்‌ செல்வோரைக்‌ கைகூப்பி 'வேண்டாம்‌' எனத்‌ தடுக்க முயல்கின்றனர்‌. வீரர்களில்‌ சொற்கேட்டு, தம்‌ தவற்றினை உணர்ந்த 'சில மனிதர்கள்‌' திரும்புகின்றனர்‌. 'சிலதுகள்‌' பிரிட்டிஷ்‌ சாம்ராஜ்ய போலீசாரைத்‌ துணைக்கழைத்துத்‌ தங்கள்‌ காரியத்தைச்‌ சாதித்துக்‌ கொண்டன.
  • வீதியெங்கும்‌ பரபரப்பு! திகில்‌! தேசிய உணர்ச்சி மேலீட்டால்‌ அன்னியத்‌ துணிகளைப்‌ பகிஷ்கரிக்கக்‌ கோரி போராட வந்துள்ள தியாகத்திலகங்கள்‌ ஒருபுறம்‌. சுதந்திர வேட்கையுள்ள தேசியச்‌ சிங்கங்களை சிதைத்திட வந்துள்ள சிறு நரிகள்‌ மற்றொரு புறம்‌; மக்கள்‌ திரள்‌ பிரிதொருபுறம்‌.
  • அதோ, ஓடோடி வருகின்றானே, அய்யய்யோ! போராட்டத்தலத்திற்கல்லவா வந்துவிட்டான்! எட்டு வயது சுட்டிப்பயல்! 'பாபு' - அதுதான் அவன் பெயர். வளரும் தலைமுறையின் இளம் குருத்து. பள்ளியிலே பயிலும் பச்சிளம் பாலகன்: பார்ப்போரை ஈர்க்கும் பால் வண்ணமுகம் பாபுவுக்குச் சொந்தம்... 

போராட்டத்தலத்தில்‌ பாபுவுக்கு என்ன வேலை?

  • கொல்லன் உலைக் களத்தில் ஈக்கு என்ன வேலை? என்று நீங்கள் வினவக்கூடும். அவன் அங்கே வந்தது வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல, பங்கு கொள்ள! ஏன் தெரியுமா? அவனுக்கும் தேசிய உணர்ச்சி உண்டு. அதனால் அன்னியத் துணியின் பால் தீரா வெறுப்பும் உண்டு. பாபுவுக்குத் தெரிந்ததெல்லாம் 'மகாத்மா காந்திக்கு! ஜே' என்ற முழக்கம் ஒன்றுதான்.
  • இப்போது பாபு போராட்ட அணியின் முகப்பில் நின்று கொண்டிருக்கிறான். எதிரே, போலீஸ் லாரி, விலகிச் செல் என எச்சரிக்கிறான், அதிலமர்ந்துள்ள வெள்ளைக்கார சார்ஜெண்ட். 'மகாத்மா காந்திக்கு ஜே!' இதுதான் பதில். சார்ஜெண்ட் கோபவயப்படுகின்றான். ஆத்திரம் பீறிடுகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு அல்லவா
  • எதிரேயிருக்கின்ற அடிமை நாய்களின் மீது லாரியைச் செலுத்து என டிரைவருக்கு ஆணையிடுகின்றான். 
  • டிரைவர் எதிரே பார்க்கின்றான்; திகைக்கின்றான். 'பச்சிளம் பாலகனைப் படுகொலை செய்வதாசே! மாட்டேன், அதைவிட என்னுயிரையே போக்கிக்கொள்ளலாம்' - அவன் மனசாட்சி பேசிற்று. உடனே லாரியை விட்டுக் கீழே இறங்கினான். அதைக் கண்ட சார்ஜெண்ட், 'சுட்டுவிடுவேன்' என எச்சரிக்கிறான், நெஞ்சைத் திறந்துகாட்டி, இங்கே சுடு என்கின்றான், தன்மான உணர்ச்சி மிக்க அந்த டிரைவர். ஏனென்றால், அவன் உடலிலும் இந்திய ரத்தம் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. 
  • டிரைவர் ஸ்தானத்தில் சார்ஜெண்ட்! எருமைக்கடா மெது எமன் வீற்றிருப்பதாகச் சொல்வார்களே, அதுபோல! 
  • மகாத்மா காந்திக்கு, ஜே! இது பாபுவின் குரல்தான். 'டேய், பொடிப்பயலே, விலகிப் போய்விடு; இல்லாவிட்டால் லாரிச் சக்கரம் உனதுயிரைக் குடித்துவிடும்' இது சார்ஜெண்ட். 
  • மகாத்மா காந்திக்கு, ஜே!!
  • 'உடனே  ஓடி விடு- ஜே!!'
  • 'டர்ர்ர்' லாரின் வலிய சக்கரங்கள் பல தடவை உருண்டுவிட்டன. சாலையில் அதன் சுவடுகள் தென்படுகின்றன. 
  • அதோ, அங்கே, ஐயகோ! செங்குத்தியல்லவா சிந்தியிருக்கிறது! அய்யோ!! பாபு!! 
  • தன்னுடைய ஆத்திரத்திற்கு இளங்குருத்து இனியமலர் பாபுவையல்லவா பலியிட்டுவிட்டான், அந்தப் பாவி, இரக்கமில்லா அரக்கன் - ஆங்கிலேய சார்ஜெண்ட்! 
  • பம்பாய் நகரமே, பாரதமே, துயரவேதனையில் ஆழ்ந்தது. அனைவரும் தங்களுடைமையில் ஒன்றைப் பறிகொடுத்த உணர்வை எய்தினர்.
  • நாட்கள் நகர்ந்தன! 
  • மாதங்கள் மறைந்தன! 
  • வருடங்கள் உருண்டன!!! 
  • 1947 ஆம் ஆண்டு 'அவன்' விரும்பி வேண்டிய சுதந்திரம், அவனால் அனுபவிக்க முடியாத சுதந்திரம் வந்துவிட்டது. 
  • அந்த வீதிக்குப் பாபு வீதி என்று பெயர் சூட்டித் தங்களுடைய நன்றியை அங்கிருந்தோர் விளம்பரப்படுத்திக் கொண்டனர். ஆனால் இன்று
  • வேதனைதான் விடையாகத் தென்படுகிறது. 'ஸ்மக்ளிங் குட்ஸ்' என ஆங்கிலத்தில் செல்லமாக அழைக்கப்படும் அன்னியக் கடத்தல் பொருட்கள் கிடைப்பது எங்கே தெரியுமா? அந்த இடம் அன்னியத் துணிகளைப் பகிஷ்கரித்துப் போராடி தன்னையே பலி பீடத்தில் ஏற்றி, தான் பிறந்த மண்ணை சிவந்த மண்ணாக்கி, இன்னுயிரை ஈந்தானே பாபு, அதே வீதிதான். சே!
  • பொன்னுலகில் அண்ணல் காந்தியடிகள் அருகினில் நேரு மாமாவுடன் பாபு! ஓ! அவன் விழிகள் ஏன் இப்படி இப்படிச் சிவந்திருக்கின்றன
  • 'அந்த வீதி'யைப் பார்த்து இதயம் நொந்து, ரத்தக் கண்ணீர் சிந்தியதால் தானோ என்னவோ! 

நன்றி: தினமணி (20 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories