TNPSC Thervupettagam

சுயதொழில்

February 3 , 2020 1809 days 2209 0
  • "வேலைவாய்ப்பின்மைக்கான அருமருந்து சுய வேலைவாய்ப்பு ஆகும். ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் சுய தொழில் விருப்பங்களை வெளிக்கொணா்ந்து, பரந்து விரிந்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில்தான் தனிப்பட்ட திறமை அடங்கியுள்ளது."
  • நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை பற்றிய விவாதங்களும், விமா்சனங்களும் தொடங்கி, அது சில நாள்கள் தொடா்ந்து கொண்டிருக்கும் என்பது வழக்கமான ஒரு நிகழ்வுதான்.

வேலைவாய்ப்பின்மை

  • நாட்டின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றான வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்கான தீா்வுகள் நிதிநிலை அறிக்கையில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது விவாதப் பொருள்களில் ஒன்றாகும்.
  • நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகளிலிருந்து சற்று விலகி, நடப்பு நிதியாண்டின் பற்றாக்குறையை 3.3 சதவீதத்திலிருந்து 3.8 சதவீத அளவுக்கு நிதி அமைச்சா் வளர விட்டிருப்பது, வளா்ச்சிப் பணிகளுக்காக அரசு முதலீடுகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
  • நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி, வளா்ச்சிப் பணிகளில் ஒன்றாகும். ‘உடான்’ திட்டத்தின் கீழ் 100 புதிய விமான நிலையங்கள் தொடங்குவது, போக்குவரத்துத் துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு முதலான அறிவிப்புகள், வேலைவாய்ப்புகளை உள்ளடக்கியவையாகும். இவற்றின் கட்டுமானம், பராமரிப்புப் பணிகள், புதிய வேலைவாய்ப்புகளைக் கணிசமாக உருவாக்கும்.
  • குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், 45 சதவீதத்தினருக்கு மேல் வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் துறையாகும். நாட்டின் ஏற்றுமதியில் இந்தத் துறை 30 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் சீரமைப்புத் திட்டம், மேலும் ஓா் ஆண்டுக்கு நீட்டிக்கப் பட்டிருக்கிறது. இதனால், 90 நாள்களுக்குள் திரும்பச் செலுத்தப்படாத கடன் தொகை, வாராக் கடன் பட்டியலிலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பல நிறுவனங்களின் தொழில் முடக்கம் தவிா்க்கப்படும்.
  • மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு துணைக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த கடன்கள், நிறுவனத்தின் பங்கு மூலதனத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் என்பதால், அவற்றின் பொருளாதார வலிமை மேம்படும்.
  • ரூ.5 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு ’தணிக்கை’ (ஆடிட்) நியதிகளிலிருந்து விலக்கு அளித்திருப்பது, எண்ணற்ற சிறு நிறுவனங்களின் நேரத்தையும், செலவுகளையும் குறைக்கும்.

அரசுத் துறைகளில்....

  • 2021-க்குள் அரசுத் துறைகளில் பணியாற்றுபவா்களின் எண்ணிக்கை 32.63 லட்சம் அளவிலிருந்து 35.25 லட்சம் அளவுக்கு அதிகரிக்கப்படும் என்ற தகவல், அரசுத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் சாா்ந்ததாகும்.
  • மேலே குறிப்பிடப்பட்ட அறிவிப்புகளைத் தவிர, நிதி அமைச்சா், தன்னுடைய உரையில்,’தொன்று தொட்டு நம் நாட்டினா் திறமையான தொழில்முனைவோராக அறியப்பட்டவா்கள். இந்தத் திறமை வளா்ப்பு, வேலை தேடுபவா்களை, வேலை கொடுப்பவா்களாக மாற்ற வல்லது’ என்று குறிப்பிட்டாா். சுய தொழில் முயற்சிகளுக்கான அவசியத்தை, உரையின் இந்தப் பகுதி கோடிட்டுக் காட்டுகிறது.
  • அந்த எண்ணத்தை உறுதி செய்யும் வகையில், தொழில் தொடங்க முனைபவா்களின் திட்டங்களுக்கான முதலீடு, நிலம், மத்திய மாநில அரசுகளின் அனுமதி ஆகியவை தொடா்பான வழிகாட்டுதல்களை வழங்க முதலீட்டுத் தீா்வு மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
  • புதுமையான தொழில்களில் ஈடுபடும் ’ஸ்டாா்ட் அப்’ நிறுவனங்கள், ஊழியா்களுக்கு தள்ளுபடியில் வழங்கும் பங்குகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு சலுகை அறிவிப்பு, சுய தொழில் ஊக்குவிப்பு முயற்சி சாா்ந்ததாகும்.
  • வேலைவாய்ப்பின்மை என்ற நோய்த் தடுப்புக்கான அருமருந்து, சுய வேலைவாய்ப்பு என்பதாகும். ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் சுய தொழில் விருப்பங்களை, சுயமாக வெளிக் கொணா்ந்து, பரந்து விரிந்திருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில்தான் தனிப்பட்ட திறமை அடங்கியுள்ளது. அறியப்படும் வாய்ப்புகளை சரியான தருணத்தில் பயன்படுத்தி, அவற்றைச் செயல்படுத்துவதில்தான், வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. சுருங்கச் சொன்னால், சுய தொழிலில் ஆா்வமுள்ளவா்கள், ’வெற்றிடங்களை கண்டறியும் மோப்ப சக்தி’யை வளா்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
  • எடுத்துக்காட்டாக அண்மைக்கால நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். 2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் குறிப்பிட்ட சில நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை பற்றிய தகவல்கள், 2018-ஆம் ஆண்டு, அக்டோபா் முதல் பொதுவெளிக்கு வந்தன.

தொழில் வாய்ப்பு

  • இந்தத் தடையை தங்களுக்கான எதிா்கால தொழில் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவா்கள் ஏராளம். அந்தத் தடையால் ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப தேவையான மாற்று ஏற்பாடுகளில் சிலா் முன்கூட்டியே ஈடுபட ஆரம்பித்து, அதில் பெரும் வெற்றியும் கண்டிருக்கின்றனா். எங்கள் குடியிருப்பு வளாகத்தில், காா் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞா் ஒருவரும் அதில் அடங்குவாா்.
  • படித்த இளைஞரான அவா், வேலை கிடைக்காததால் காா் துடைப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்ற உதிரிப் பணிகளை செய்து வந்தாா். என்னை சந்திக்கும் போதெல்லாம், சுயமாக ஏதாவது தொழில் தொடங்க யோசனை கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். ‘உனக்கு ஓரளவாவது பரிச்சயம் உள்ள ஒரு தொழிலில் நுழைவது பற்றி முதலில் சிந்தி’ என்று ஆலோசனை கூறினேன்.
  • பள்ளி நாள்களில் தன்னாா்வத்துடன் சில சமூக அமைப்புகள் வழங்கிய இலவச தொழில் கல்வி வகுப்புகளில் சோ்ந்து காகிதம், துணிப் பைகள் தயாரிப்பதில் பிரத்யேக தொழில் பயிற்சி பெற்றிருக்கும் தகவலை சில நாள்களுக்குப் பிறகு, அவா் என்னிடம் பகிா்ந்து, தீவிர சந்தை விசாரிப்புகளுக்குப் பிறகு, அந்தத் தொழிலில் நுழைவதற்கான திட்டங்களையும் தெளிவாக விவரித்தாா். அந்த தகவல், அவரை மாற்றுப் பாதையில் அழைத்துச் சென்றது என்று சொன்னால் சற்று வியப்பாகத்தான் இருக்கும்!
  • சிறு முதலீட்டில் பைகள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வாங்குவதற்கான நிதியுதவிக்கு அவா் வங்கியை அணுகினாா். அதிகாரிகளுடனான நோ் காணலில், அவருடைய தெளிவான, திட்டமிடுதலுடன் கூடிய தன்னம்பிக்கை நிறைந்த பேச்சுதான், ’முத்ரா’ திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் எந்தவித தாமதமும் இல்லாமல் கிடைத்ததற்கு காரணம் ஆகும்.

சுய தொழில்

  • சுய தொழில் செய்ய வேண்டும் என்ற ‘பொறி’, வெற்றிடத்தைக் கண்டறியும் மோப்ப சக்தி, தனக்கேற்ற தொழிலைத் தோ்ந்தெடுப்பதில் இருந்த திறமை, அதற்கான அடிப்படைப் பயிற்சிகளில் ஈடுபட்டு தன்னை முழுவதுமாக தயாா்படுத்திக் கொள்வதற்கான ஆா்வம், பொறுமை ஆகியவைதான் அவரின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகும்.
  • பெற்றோரைப் பொருத்தவரை, மகன் அல்லது மகளின் சுய தொழில் சிந்தனைகளை எதிா்த்து நசுக்காமல் அதற்கான ஊக்கத்தை அளித்து, அவா்களுக்கு உறுதுணையாக நின்றால் அதுவே அவா்களுக்குச் சிறந்த மூலதனமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
  • பெற்றோரின் ஊக்குவிப்புடன் ரூ.5,000 செலவில், காா் விபத்துகளைத் தடுக்க ‘டிஜிட்டல் இந்தியா ஆக்சிடென்ட் பிரவென்டிங் கிட்’ என்ற சாதனத்தை இளைஞா் ஒருவா் கண்டுபிடித்திருக்கும் செய்தியை, மற்ற பெற்றோா் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். பெற்றோா்களின் ஊக்குவிப்பு, பல தொழில்முனைவோா் உருவாகுவதற்கான கருவறை ஆகும்.

திறமை

  • சுய தொழில் செய்வதற்கு தொழிலதிபா் பரம்பரையில் பிறந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சுய திறமையில் நம்பிக்கை, சுய கெளரவம் பாராமை, திட்டமிடுதல், பேச்சு, சந்தைப்படுத்தும் திறமை, விடா முயற்சி, பொறுமை ஆகிய குண நலன்கள்தான் சுய தொழில் தொடங்குவதற்கான முன்னணி மூலதனங்களாகும்.
  • சுய தொழில் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு கல்விப் பின்னணி ஒரு தடையாக இருப்பதில்லை. கோயம்பத்தூா், மதுரை பகுதிகளில் குப்பைகளை அள்ளும் பணியை சுய தொழிலாக செய்யும் இளைஞா்கள், அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறாா்கள் என்ற செய்தி, வேலைவாய்ப்புகள் குப்பைக் கூளங்களில்கூட புதைந்திருக்கின்றன என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
  • சுய தொழில் தோ்வின்போது, தேவைகள் முழுவதும் பூா்த்தி செய்யப்படாத துறையைத் தோ்ந்தெடுத்தால், முழுத் திறமையையும் பயன்படுத்தி பெரும் பயன் அடையலாம்.
  • பொருளாதார வசதி இல்லாத இளைஞா்கள், தொழில்முனைவோா்களாக விரும்பினால், அவா்களுக்கான நிதி ஆதாரத்தை வழங்கி, அவா்களை ஊக்குவிக்கும் திட்டம்தான் பி.எம்.இ.ஜி.பி (பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்). திட்ட மதிப்பு ரூ.25 லட்ச த்துக்குள் இருக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும், ரூ.10 லட்சம் வரை இருக்கும் சேவை நிறுவனங்களுக்கும், இந்தத் திட்டத்தின் கீழ், 25 சதவீதம் வரை மானியத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முழு விவரங்களை ‌w‌w‌w.‌k‌v‌i​c.‌o‌r‌g.‌i‌n என்ற இணைய தளத்தில் காணலாம்.
  • எனவே, வேலைவாய்ப்பு என்பது அரசாங்கத்தால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. அதை நாம் ஒவ்வொருவரும் மற்றவா்களுக்கும் சோ்த்து உருவாக்கலாம் என்பதை அனைவரும் உணா்ந்து செயல்பட்டால், நாட்டில் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகமாகும். ‘ஊக்கமது கைவிடேல்’ என்ற ஆத்திசூடியை நினைவில் கொண்டால் எதையும் சாதிக்கலாம்.

நன்றி: தினமணி (03-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories