TNPSC Thervupettagam

சுயமரியாதைத் திருமணம்

September 4 , 2023 495 days 742 0
  • சுயமரியாதைத் திருமணம் குறித்துத் தெளிவான பார்வையை வழங்கும் தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். தான் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணை அவரது பெற்றோரின் பிடியிலிருந்து மீட்டுத் தரக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளவரசு என்பவர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது சுயமரியாதைத் திருமணத்தை அங்கீகரித்து வழக்கறிஞர் கொடுத்த திருமணச் சான்று செல்லாது என்று கூறி, ஆட்கொணர்வு மனுவைக் கடந்த மே 5 அன்று நிராகரித்துவிட்டது. 2014இல் இதே போன்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது.
  • வழக்கறிஞர்கள் நடத்திவைக்கும் இம்மாதிரித் திருமணங்கள் செல்லாது என்றும் சுயமரியாதைத் திருமணங்களை ரகசியமாக மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் தமது கருத்தைத் தெரிவித்திருந்தனர். மேலும், போலி திருமணச் சான்றிதழ் வழங்கியதற்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கும் அறிவுறுத்தியிருந்தனர். தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம், சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
  • ஆனால், அவை அன்றைய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் கொண்டுவரப்பட்ட இந்துத் திருமணச் சட்டம் 1955இல், சுயமரியாதைத் திருமணத்துக்கான வரையறை தெளிவாக இல்லை. அதனால், தமிழ்நாட்டில் அண்ணா தலைமையில் 1967இல் ஆட்சிக்குவந்த திமுக அரசு, இந்துத் திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்திருத்தம் நாட்டுக்கே முன்னுதாரணமாகும்.
  • இந்துத் திருமணச் சட்டத்தில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் 7 () மனமொத்த இந்துக்கள் இருவர், உறவினர்கள், நண்பர்கள், மற்ற நபர்கள் முன்னிலையில் செய்துகொள்ளும் திருமணம் செல்லும் எனக் கூறுகிறது. அக்னி குண்டத்தைச் சுற்றிவருவதோ தாலி கட்டிக்கொள்வதோ இந்தச் சட்டத்தில் கட்டாயமாக்கப்படவில்லை. மாலை மாற்றிக்கொண்டாலும் போதுமானது அல்லது மோதிரம் மாற்றிக்கொள்ளலாம் அல்லது தாலி மாற்றிக்கொள்ளலாம் எனச் சட்டத்திருத்தம் கூறுகிறது.
  • இந்தச் சட்டத்தை மேற்கோள் காட்டித்தான் உயர் நீதிமன்றம் இளவரசுவின் திருமணத்தை ஏற்க மறுத்தது. ஆனால், மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இதே சட்டத்தைச் சுட்டிக்காட்டித்தான் இளவரசுவின் திருமணத்தைத் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டத்திருத்தத்தின் விசேஷமான அம்சமே ஒரு திருமணத்தை அங்கீகரிக்க, ஒரு புரோகிதர் இருப்பது அவசியம் இல்லை என்பதுதான். நண்பர்கள், உறவினர்கள், மற்ற நபர்கள் முன்னிலையில், ஒருவருக்கு ஒருவர் கணவன் - மனைவியாக வாழப் போகிறோம் எனத் தங்களுக்குப் புரியும் மொழியில் அறிவித்துக்கொள்ள வேண்டும். திருமணச் சடங்குகளும் எளிமையானவைதான்என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
  • உயர் நீதிமன்றத் தீர்ப்பில் இம்மாதிரித் திருமணங்களில் ஆண்கள் ஆட்கொணர்வு மனுவுடன் நீதிமன்றத்தை நாடும்போது, சம்பந்தப்பட்ட பெண், திருமணம் நடைபெறவே இல்லை எனக் கூறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 21இன்படி, தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடிக்கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் சிக்கல் நிரூபணமாகிறது.
  • இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சுயமரியாதைத் திருமணங்களுக்கான தடைகளை நீக்க உதவும் என்று எதிர்பார்க்கலாம். இதை முன்னுதாரணமாகக் கொண்டு, பெண்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் சுயமரியாதைத் திருமணங்கள் எந்தத் தடையும் இன்றி அங்கீகரிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் உறுதியாக நம்பலாம்!

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories