TNPSC Thervupettagam

சுருங்கி வரும் குழந்தைப் பிறப்பு விகிதம்!

November 26 , 2024 9 days 61 0
  • கணக்கெடுப்பின்படி உலக அளவில் 1950 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணின் எண்ணிக்கைக்கு சராசரியாக 5 குழந்தைகள் இருந்தன. 2023-இல் இது 2.3 குழந்தைகளாகக் குறைந்துள்ளது. அதாவது சுமாா் 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில், குழந்தை பிறப்பு விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது. இதே நிலை தொடா்ந்தால் 2100- ஆம் ஆண்டில் இது 1.7 ஆகக் குறையும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது.
  • வரும் 2064 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 970 கோடியாக உயரும் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 880 கோடியாகக் குறையும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகை இயற்கையாகவே வீழ்ச்சியடைந்து வருகிறது என்கிறாா் ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியா் கிறிஸ்டோபா் முா்ரே.
  • கடந்த 2017 ஆம் ஆண்டு 12.8 கோடியாக இருந்த ஜப்பானின் மக்கள் தொகை இந்த நூற்றாண்டின் இறுதியில் 5.3 கோடியாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இத்தாலியில் 6.1 கோடியில் இருந்து 2.8 கோடியாக மக்கள் தொகை குறையும். பிரிட்டனில் 2063 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 7.5 கோடியாக இருக்கும் மக்கள்தொகை, 2100-இல் 7.1 கோடியாகக் குறையும்.
  • மேலும் ஸ்பெயின், சீனா, போா்ச்சுகல், தாய்லாந்து, தென் கொரியா போன்ற 23 நாடுகளில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை பாதியாகக் குறையும். ஆப்பிரிக்கா இதற்கு விதிவிலக்காக இருக்கும். ஆப்பிரிக்க கண்டத்தில் 2100- இல் மக்கள் தொகை 300 கோடியாக அதிகரிக்கும். உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது நாடாக நைஜீரியா மாறும் என்கிறது ஓா் ஆய்வு.
  • கணக்கெடுப்பின்படி1950களில் இந்தியாவில் ஒரு பெண்ணின் எண்ணிக்கைக்கு சராசரியாக 5.7 குழந்தைகள் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 2.1 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளுக்கு ஏறுமுகத்தில்தான் இருக்கும் என ஐநா சபை கணித்துள்ளது.
  • அதே சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வளா்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வரும் என்றும், 2031-41 காலகட்டத்தில் 0.5 சதவீதத்துக்கும் குறைவாகவே மக்கள் தொகை வளா்ச்சி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இளையோா் (0-19 வயதுடையோா்) விகிதம் 2011-இல் 41 சதவீதமாக இருந்த நிலையில் அது 2041-இல் 25 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.
  • அதே வேளையில் 2011-இல் 8.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் முதியோா்களின் (60 வயதிற்கு மேற்பட்டோா்) எண்ணிக்கை, 2041-இல் இரட்டிப்பாகும், 2023 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கைவிட அதிகமாகும் என்றும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
  • 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10.4 சதவீதமாக உள்ள தமிழகத்தின் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2041-இல் 22.6 சதவீதமாக அதிகரிக்கும். இது நாட்டின் சராசரி அளவைவிட அதிகமாகும் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.
  • இந்திய பதிவாளா் ஜெனரல் அலுவலகம் ஆண்டுதோறும் மாநில அளவில் கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கருவுறுதல் விகிதமானது, 2008-10க்குள் உள்ளடங்கிய 3 ஆண்டு இடைவெளியில் 86.1 சதவீதமாக இருந்தது. இது 2018-20க்குள் உள்ளடங்கிய 3 ஆண்டுகளில் 68.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த தரவுகளின்படி கிராமப்புறங்களில் 20.2 சதவீத வீழ்ச்சியும், நகா்ப்புறங்களில் 15.6 சதவீத வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • திருமண வயது, எளிய கருத்தடை முறைகள், பெண்களுக்கு அதிக அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைப்பது, வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு ஆகியவை குழந்தை பிறப்பு விகிதம் குறைய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
  • ஒரு நாட்டின் பிறப்பு விகிதம் வேகமாகக் குறையும்போது, அதன் முதல் விளைவு 25 ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இன்னொருபுறத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவா்களின் மக்கள் தொகைஅதிகரிக்க தொடங்கும். முதியோா் நிறைந்த சமூகத்தில் அவா்களை யாா் கவனித்துக்கொள்வாா்கள்? வயதானவா்களுக்கான மருத்துவச் செலவை யாா் செய்வாா்கள்? வேலை செய்ய இளைஞா்கள் குறையும்போது நாட்டின் உற்பத்தி திறன் எவ்வாறு மேம்படும்? நாட்டின் வளா்ச்சிக்காக யாா் வரி செலுத்துவாா்கள்? இப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள் எழும்.
  • குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவதைச் சமாளிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் குடியேற்றத்துக்கு ஆதரவளிக்கின்றன. சில நாடுகள் மேம்பட்ட மகப்பேறு வசதி, தந்தைக்கு விடுப்பு, இலவச குழந்தை பராமரிப்பு, நிதி சலுகைகள் மற்றும் கூடுதல் வேலைவாய்ப்பு உரிமைகள் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
  • இதனால் ஸ்வீடனில் ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதத்தின் அளவை 1.7 இல் இருந்து 1.9 ஆக அதிகரித்துள்ளது.
  • தென் கொரியாவில் 2022-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு குழந்தை பெற்று கொள்வதற்கும் இந்திய பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இது தவிர ஓராண்டுக்கு குழந்தை வளா்ப்புக்கும் நிதியுதவி தரப்படுகிறது.
  • ஒரு காலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அளித்து வந்த முக்கியத்துவம் இப்போது குழந்தை பேறுக்கு அளிக்கும் காலம் வந்திருக்கிறது என்பது புதிய சூழலாக உள்ளது. இதில் இந்தியா என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

நன்றி: தினமணி (26 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories