சுற்றுச்சூழல் ஆண்டுத் தொகுப்பு
- இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த ஆண்டுத் தொகுப்பு நூலான 'State of India’s Environment 2025' நூலை டில்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழலுக்கான மையம் வெளியிட்டுள்ளது. 'டவுன் டுர் எத்' என்கிற மாதம் இருமுறை சுற்றுச்சூழல் இதழை வெளிக்கொண்டுவரும் நிறுவனம் இது.
- 12ஆவது ஆண்டாக வெளிவந்துள்ள இந்தத் தொகுப்பு நூல் சுற்றுச்சூழல் குறித்த சமீபத்திய பார்வைகள், அறிவியல் புரிதல், புதிய போக்குகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இந்தத் தொகுப்பில் ஞெகிழி, உயிர்ப் பன்மை, மருத்துவம், காலநிலைப் பேரிடர், ஆறுகள், தண்ணீர், வெப்பம், காற்று மாசுபாடு, திடக்கழிவு மேலாண்மை, தொழிற்சாலைக் கழிவு, உணவு உள்ளிட்ட துறைகள் சார்ந்து தனிக்கவனம் செலுத்தப் பட்டுள்ளது.
- உலகின் மிகப் பெரிய தொழிற் சாலைப் பேரிடரான போபால் விஷ வாயுக் கசிவின் 40 ஆண்டுகள், நுண்ணுயிர்க் கொல்லி மருந்து எதிர்ப்பு, மேற்குமலைத் தொடரின் தற்போதைய நிலை, மக்கள் புலப்பெயர்வு-வெளியேற்றம், நிகோபார் தீவு பிரச்சினை, தார் பாலைவனத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், இந்தியாவின் 500 கி.வா. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கனவு உள்ளிட்டவை குறித்து விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 668 பக்கங்களில் பார்க்கவே மலைப்பாக இருக்கும் இந்தச் சுற்றுச்சூழல் தொகுப்பு அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டியது.
- குறிப்பாக, சுற்றுச்சூழல் துறை சார்ந்து பணிபுரிபவர்கள் மட்டுமன்றி, பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசுத் துறையினர், போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெறுபவர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த நூல் பெரிதும் பயனளிக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2025)