TNPSC Thervupettagam

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களைக் காப்பது யாருடைய கடமை?

October 17 , 2024 38 days 64 0

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களைக் காப்பது யாருடைய கடமை?

  • உலகம் முழுவதும் சுற்றுச்​சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்​கொண்டு​வரும் பிரச்​சினைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்​கப்​படு​கிறார்கள், மிரட்​டப்​படு​கிறார்கள், தாக்கப்​படு​கிறார்கள், கடத்தப்​படு​கிறார்கள், காணாமல் போகிறார்கள், சட்ட விரோதிகள் என வகைப்​படுத்​தப்​படு​கிறார்கள். உச்சபட்​ச​மாகக் கொலைகூடச் செய்யப்​படு​கிறார்கள்.
  • காடழிப்பு, மாசுபடுத்​துதல், கட்டாயப்​படுத்தி நிலங்களை அபகரிப்பது போன்ற​வற்றுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; காலநிலை மாற்றம், சுற்றுச்​சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்​சினைகள் குறித்துச் சமூகத்தில் விழிப்பு​ணர்வை உருவாக்கப் பாடுபடுவது என அயராமல் இயங்கும் அவர்கள் குறிவைக்​கப்​படு​கிறார்கள்.
  • பரவலாக இயற்கை வளங்களைக் கையாளும் தனியார் நிறுவனங்களே சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்​களுக்கு எதிரான வன்முறை​களுக்கு மிக முக்கியக் காரணம். அதில் சில அரசியல்​வா​தி​களுக்​கும், அரசு அலுவலர்​களுக்கும் பங்கிருப்பதை மறுக்க இயலாது.
  • உலக அளவில் உயிர்​களின் இருத்​தலுக்கு அச்சுறுத்தலாகக் காலநிலை மாற்றம் மாறிவரும் இவ்வேளை​யில், இயற்கையைப் பாதுகாப்​பதில் சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்​களின் பங்கு இன்றியமை​யாதது. புவி வெப்ப​மாதலுக்கான முதன்மைக் காரணங்​களில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மிக முக்கிய​மானது. அந்த வகையில்தான் முதலா​ளித்துவப் பொருளாதார அடிப்படையில் இயங்கும் உலகம், தற்போது புதுப்​பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை அதிகம் பயன்படுத்த முனைப்புக் காட்டுகிறது.
  • இதனால் காடுகள் அழிக்​கப்​படு​கின்றன; இயற்கைத் தாதுக்கள் சுரண்​டப்​படு​கின்றன; சூரிய சக்தி, காற்றாலைகள் மூலம் புதுப்​பிக்​கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க நிலங்கள் கையகப்​படுத்​தப்​படு​கின்றன. அத்தகைய தொழில் முன்னெடுப்புகள் மக்களின் நிலம், நீர், விவசாயம் உள்ளிட்ட வாழ்வுரிமை​களைப் பாதிக்​கும்​பட்​சத்​தில், தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடும் சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்கள் அச்சுறுத்​தப்​படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.

தரவுகள் கூறும் உண்மை:

  • சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்​களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்து 2012ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒருங்​கிணைந்த தரவுகள் பொதுவெளியில் ஏறக்குறைய இல்லை. நல்வாய்ப்பாக, 2012க்குப் பின் ‘குளோபல் விட்னஸ்’ (Global Witness) என்கிற அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய அனைத்து நாடுகளி​லிருந்​தும், எத்தனை சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்கள் வன்முறையால் பாதிக்​கப்​பட்டனர் என்கிற தரவுகளைச் சேகரித்து​வரு​கிறது.
  • 2012 முதல் 2023 வரையிலான 12 ஆண்டு​களில் உலகம் முழுவதும் 2,106 பேர் இந்த வகையில் கொல்லப்​பட்​டுள்​ளனர். அதில் ஆண்கள் 1,873, பெண்கள் 226, அடையாளம் தெரியாதவர்கள் 6 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். 2012இல் கொலை செய்யப்பட்ட செயல்​பாட்​டாளர்​களின் எண்ணிக்கை 139. அதுவே, 2023ஆம் ஆண்டு 197. இத்தர​வுகள் கொலை செய்யப்​படு​பவர்​களின் எண்ணிக்கை உயர்ந்​து​கொண்டே வருவதைக் காட்டு​கின்றன.
  • 2023இல் உலகம் முழுவதும் 100 பேர் கூலிப்​படைகளாலும் மாஃபி​யாக்​களாலும், 19 பேர் ராணுவம் / காவல் துறையாலும் கொல்லப்​பட்​டுள்​ளனர். நில உரிமை​யாளர்கள், தனியார் பாதுகாவலர்​களால் பிறர் கொல்லப்​பட்​டுள்​ளனர். 50% மரணங்​களுக்குக் கூலிப்​படைகளும் மாஃபி​யாக்​களுமே காரணம். அதிகரித்து​வரும் கொலைச் சம்பவங்கள் ஒருவகையில் இயற்கை வளச் சுரண்​டலின் வேகம் அதிகரித்து​வரு​வதையே காட்டு​கிறது.
  • சுற்றுச்​சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்​பாடு​களில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்​டிருந்​தா​லும், சுரங்​கங்கள், கனிமங்கள் சார்ந்த தொழில் துறைகளே சுற்றுச்​சூழல் பாதுகாவலர்​களுக்கு மோசமான தீங்கு விளைவிப்​பவையாக இருக்​கின்றன. இது புதுப்​பிக்​கத்தக்க ஆற்றல் வளங்களை நோக்கி நாம் நகர்வதை​யும், அது தொடர்​புடைய மின் வாகனங்​களுக்கான மின்கலன்கள் தயாரிக்கத் தேவையான நிக்கல், கோபால்ட், லித்தியம் ஆகியவற்றின் தேவை அதிகரிப்​பதையும் வெளிப்​படுத்து​கிறது.
  • மேற்சொன்ன 12 ஆண்டு​களில் இந்தியாவில் கொல்லப்​பட்​ட​வர்​களின் எண்ணிக்கை 86 (அதில் நால்வர் பெண்கள்). இவர்களில் 18 பேர் கூலிப்படை அல்லது மாஃபி​யாக்​களால் கொல்லப்​பட்​ட​வர்கள். 37 பேர் காவல் துறையால் கொல்லப்​பட்​ட​வர்கள். மீதமுள்ள 31 பேர் நில உரிமை​யாளர்​களாலோ, தனியார் பாதுகாவலர்​களாலோ அல்லது அடையாளம் தெரியாதவர்​களாலோ கொல்லப்​பட்​டிருக்​கிறார்கள். இதில் 43% மரணங்கள் காவல் துறையால் நிகழ்த்​தப்​பட்​டிருப்பது குறிப்​பிடத்​தக்கது.
  • பிற நாடுகளைப் போலவே, கொல்லப்​பட்​ட​வர்​களில் ஏறக்குறைய 50% பேர் சுரங்​கங்கள், கனிமங்கள் தொடர்​புடைய தொழில்​களுக்கு எதிராகப் போராடிய​வர்களே! 2023ஆம் ஆண்டு நம் நாட்டில் 5 பேர் இந்த வகையில் கொல்லப்​பட்​டிருக்​கிறார்கள். மத்திய அரசின் சமீபத்திய ‘தேசிய முக்கியக் கனிமங்கள் இயக்கம்’ (National Critical Mineral Mission) செயல்​பாட்டுக்கு வந்திருப்பது, அத்தகைய நிறுவனங்​களால் நம் நாட்டில் சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்​களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கச் சாத்தியமாக அமைந்​து​விடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்து​கிறது.

இதற்கு என்னதான் தீர்வு?

  • ஒவ்வொரு தொழில் நிறுவனமும் அது ஏற்படுத்த இருக்கும் சுற்றுச்​சூழல் தாக்கத்தை மதிப்​பிட்டு, மக்களின் கருத்தைக் கேட்டு, அனைத்து சுற்றுச்​சூழல் பாதுகாப்பு விதிமுறை​களையும் கடைப்​பிடித்துச் செயல்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் இவை அனைத்தும் பின்பற்​றப்​படு​கின்றனவா என்பது மிகப் பெரிய கேள்வி. நிர்ண​யிக்​கப்பட்ட அளவைவிட அதிக மணல், கனிம வளங்களைச் சுரண்​டுதல், மாசு ஏற்படுத்​துதல் போன்றவை அன்றாடச் செய்தி​களாகி​விட்டன.
  • ஜனநாயகரீ​தியிலான போராட்​டங்​களுக்​கும், கருத்துச் சுதந்​திரத்​துக்கும் புகலிட​மாகக் கருதப்​படும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளும் சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்களை முடக்கும் விதமாகப் புதிய சட்டங்​களை​யும், சட்டத்​திருத்​தங்​களையும் மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் தங்களின் உரிமைக்​காக​வும், விதிகளை மீறும் நிறுவனங்​களைக் கேள்வி கேட்டுப் போராடு​பவர்களைக் குற்றவாளி​களாகச் சித்திரிக்கும் நடைமுறை கையாளப்​படு​கிறது.
  • நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு நடைமுறைகளை இலகுவாக்குவது, ஊக்கப்​படுத்துவது என்கிற வகையில் சுற்றுச்​சூழல் பாதுகாப்புச் சட்டங்களை நீர்த்​துப்​போகச் செய்து, அதனால் விளையும் தீமைகளை எதிர்த்துப் போராடு​பவர்​களைக் காவல் துறையின் உதவிகொண்டு ஒடுக்குவது நம் நாட்டிலும் நடந்து​வரு​கிறது. மேலும், செயல்​பாட்​டாளர்​களுக்கு எதிராகப் பொய்ப் பரப்பு​ரைகள் (பெருமளவு சமூக வலைதளங்​களில்) முன்னெடுக்​கப்​படு​வதையும் காண முடிகிறது.
  • அத்தகைய பரப்பு​ரைகள், அவர்களைத் தேச விரோதிகள், நகர்ப்புற நக்ஸல்கள், வளர்ச்​சிக்கு எதிரானவர்கள் என முத்திரைகுத்து​வதும் பரவலாகக் காணப்​படு​கிறது. விதிமீறும் நிறுவனங்​களால் நிகழ்த்​தப்​படும் அவர்களின் உயிருக்கு எதிரான தாக்குதல்​களை​யும், பொய்ப் பரப்பு​ரைகளால் நிகழ்த்​தப்​படும் உளவியல் தாக்குதல்​களையும் எதிர்​கொண்டே களத்தில் சமரசம் செய்து​கொள்​ளாமல் மக்கள் நலனுக்​காகவும் பிற உயிர்​களின் நலனுக்​காகவும் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து இயங்கிவரு​கிறார்கள்.
  • ஆக, சுற்றுச்​சூழல் செயல்​பாட்​டாளர்​களுக்கு எதிராகத் திட்ட​மிட்டு நிகழ்த்​தப்​படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது? அதற்கான தீர்வு மிக எளிமை​யானது! அது நடைமுறையில் உள்ள மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை எவ்வித சமரசமும் இன்றி நடைமுறைப்​படுத்துவதே. ஆனால், அவ்வாறு நடக்கும் என எதிர்​பார்ப்பது வெறும் கனவாக மட்டுமே இருக்க முடியும். எனவேதான் நிலம், வளம், மக்களின் உரிமைகள் ஆகியவற்றைக் காக்க முனைவோர் அச்சுறுத்​தலுக்கு ஆளாவது ஒரு தொடர்​கதை​யாகவே நீள்கிறது.
  • பொதுச் சமூகம் அவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்​தால், செயல்​பாட்​டாளர்​களுக்கு அது ஊக்கத்தைத் தரும். நாம் ஒருவரை இழந்தாலும் இன்னொருவர் எழுவார். இயற்கைப் பாதுகாப்​புக்கான அறப்போராட்​டங்கள் தொடரும். ஏனெனில், இயற்கை வளங்களைப் பாதுகாப்​ப​தற்கான போராட்டம் மிக நீண்டது, இடைநில்​லாதது. இப்போராட்டம் ஒரு தலைமுறையோடு முடிந்​து​விடாமல், எதிர்​காலச் சந்ததி​யினரின் நலனுக்​காகவும் தொடர வேண்டியதாக உள்ளது. அது காலத்தின் கட்டாயம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories