சுற்றுச்சூழல் பாதிப்புகள் தீவிரமடைந்த ஆண்டு!
- டிசம்பர் 9 ஆம் தேதியன்று ஐரோப்பாவின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கோப்பர்நிகஸ் சேவை அமைப்பு (Copernicus Climate Change Service) ஓர் அறிக்கையை வெளியிட்டது. செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள், உலகெங்கிலும் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைத்த தரவுகளையெல்லாம் தொகுத்து உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையில், 2024ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு (Hottest year on record) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- டிசம்பர் நீங்கலாக மற்ற 11 மாதங்களில் சேகரிக்கப்பட்ட கணக்குகளின் அடிப்படையில், இந்த ஆண்டின் சராசரி உலகளாவிய வெப்பநிலை 1.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது, உலகளாவிய வருடாந்திர சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்திருப்பது இதுவே முதல் முறை. காலநிலை மாற்றத்தின் தீவிரக் கட்டத்தை நாம் எட்டிவிட்டோம் என்பதையே இது காட்டுகிறது.
கவலையூட்டும் பேரிடர்கள்:
- இந்த ஆண்டு மொத்தம் 124 காலநிலை சார்ந்த பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டு வறட்சிகள், 10 வெப்ப அலைகள், 17 நிலச்சரிவுகள் (இவற்றில் பல நிகழ்வுகள் வெள்ளத்தால் ஏற்பட்டவை), 58 வெப்பமண்டலப் புயல்கள், 37 காட்டுத்தீ நிகழ்வுகள் எனப் பல விதங்களில் இவை நிகழ்ந்துள்ளன. ஒட்டு மொத்தமாக இவற்றால் 310 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக ஒரு கணிப்பு தெரிவிக்கிறது.
- இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையை அறிவியல் - சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 2024ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 93% நாள்களில் ஏதேனும் ஒரு தீவிர வானிலை நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. இவற்றால் மொத்தம் 3,238 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 32 லட்சம் ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 9,457 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன.
- மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. உயிரிழப்பு என்கிற வகையில் மிகவும் பாதிப்படைந்திருக்கும் மாநிலம் கேரளம். வெள்ளத்தால் மட்டுமே இந்தியாவில் இந்த ஆண்டு 1,376 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். வெப்ப அலையால் உயிரிழந்தோர் 210 பேர். தீவிர வானிலை நிகழ்வுகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்றும், 2022 நிலவரத்தோடு ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 18% அதிகம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
உச்சி மாநாடுகளால் என்ன பலன்?
- உயிர்ப்பன்மைக்கான 16ஆவது உச்சிமாநாடு கொலம்பியாவில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 1 வரை நடைபெற்றது. மரபணு சார்ந்த வளங்களில் இருந்து கிடைக்கும் பயன்களை நியாயமான முறையில் பங்கிட்டுக்கொள்வது, உயிர்ப்பன்மையைக் காப்பதில் தொல்குடிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பது எனப் பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டன.
- காலநிலை மாற்றத்துக்கான 29ஆவது உச்சிமாநாடு நவம்பர் 11 முதல் 22ஆம் தேதிவரை அசர்பைஜானில் நடந்தது. காலநிலை நிதி ஒதுக்கீட்டை மூன்று மடங்காக உயர்த்துதல், கரிமச் சந்தை பற்றிய முன்னெடுப்புகள் ஆகியவை இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள். ஆனால், காலநிலைச் செயல்பாடுகளின் தீவிரத்தன்மைக்கு ஏற்றவாறு இந்த மாநாட்டில் முடிவுகள் எட்டப்படவில்லை. இந்த மாநாடு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருந்தது.
- பாலைவனமாதலைத் தடுப்பதற்கான 16ஆவது உச்சிமாநாடு சௌதி அரேபியாவில் டிசம்பர் 2 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. சீர்குலைந்த நிலத்தை மீட்டெடுப்பது, வறட்சியிலிருந்து மீள்வது, பெண்களுக்கான நில உரிமைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
- தொடர்ந்து உலகளாவிய உச்சிமாநாடுகள் நடைபெற்றுவருகின்றன என்றாலும், அவற்றின் செயல்திறன் போதுமான அளவில் இருக்கிறதா என்பது பெரிய கேள்வி. குறிப்பாக, காலநிலை சார்ந்த பல பேச்சுவார்த்தைகளில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. இந்த உச்சிமாநாடுகளை இன்னும் வலுவானவையாக மாற்ற வேண்டும். உலகளாவிய அரசியலில் இதுபோன்ற சூழலியல் கூட்டமைப்புகள்/மாநாடுகளின் குரல் உரக்க ஒலிக்க வேண்டும். சூழலியல் செயல்பாட்டாளர்கள் இதை இந்த ஆண்டு தீவிரமாக வலியுறுத்தியிருக்கின்றனர்.
செயல்பாடுகளில் போதாமை:
- 2024இல் உலகளாவிய கரிம உமிழ்வுகளின் அளவு 3,740 கோடி டன்னாக இருந்தது. 2023ஆம் ஆண்டின் அளவைவிட இது 0.8% அதிகம். 2024 டிசம்பரில் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரையில், ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலம் பாழாகிவருவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
- ஆண்டுதோறும் காடழிப்பு அதிகரித்த படியே இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கடலின் வெப்பநிலை அதீதமாக உயர்ந்தது. இதனால் உலகளாவிய பவளத்திட்டு வெளிறுதல் நிகழ்வு (Global coral bleaching event) ஏற்பட்டது. சூழலியலைப் பாதுகாக்கும் செயல்பாடுகளில் உள்ள போதாமையை இவை சுட்டிக்காட்டுகின்றன.
- கரிம உமிழ்வுகளைக் குறைக்க வேண்டும் என்றும் காலநிலைப் பிரச்சினைகளைச் சரிசெய்ய நிதி வேண்டும் என்றும் மூன்றாம் உலக நாடுகள் தொடர்ந்து குரல்கொடுத்துவருகின்றன. ஆனால், வளர்ந்த நாடுகள் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் தங்களுக்குச் சாதகமான முடிவுகளையே எடுத்துவருகின்றன. காலநிலை மறுப்பாளரான டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் மீண்டும் பதவிக்கு வரவுள்ளார். இது உலகளாவிய காலநிலைச் செயல்பாடுகளில், குறிப்பாக நிதி ஒதுக்கீட்டில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைகள்:
- உலகளாவிய சூழலியல்சார் உச்சிமாநாடுகள் மீது வளரும் நாடுகளுக்கு நம்பிக்கை குறைந்துவருகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடிய (Legally binding) ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட வேண்டும். உறுதிமொழிகளைப் பின்பற்றாத நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற விதிமுறை இருந்தால், சூழலியல்சார் செயல்பாடுகளில் நாடுகள் தீவிரமாக இயங்கும். சர்வதேச நீதிமன்றமும் ஐ.நா. அவையும் இணைந்து இதற்கான ஒப்பந்தங்களையும் சட்டங்களையும் உருவாக்க வேண்டும். நிலக்கரியைச் சார்ந்திருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மாற்று எரிபொருளைக் கண்டறிய வேண்டும்.
- இந்தத் தேடுதலுக்கும் ஆய்வுக்குமான நிதி ஒதுக்கப்பட வேண்டும். காடழிப்பைத் தடுக்கும் வகையில் கடுமையான சர்வதேசச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். காலநிலை-சுற்றுச்சூழல்-உயிர்ப்பன்மை எனப் பல்வேறு கோணங்களில் உலகளாவிய பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும். கரிமச் சந்தைக்கான விதிமுறைகளும் கடல் வளங்கள் பற்றிய விதிமுறைகளும் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைப்பதிலும் நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
- ஏற்கெனவே, தொழிற்புரட்சிக் காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலை உயர்வை எட்டிவிட்டோம் என்னும் நிலையில், அதனால் விளையும் மோசமான பாதிப்புகளையும் எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். அதேநேரம், இதைத் தாண்டி வெப்பநிலை உயராமல் இருக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால், புவியையும் மக்களையும் காப்பாற்றுவது கடினம்.
நன்றி: தினமணி (20 – 12 – 2024)