TNPSC Thervupettagam

சுற்றுலா

January 25 , 2020 1818 days 1487 0
  • பெரியவர்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் புதுப்புது இடங்களுக்குச் செல்வதற்கும், அங்கு விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்கும். மேலும் அங்குள்ள இயற்கை அழகை ரசித்தும், பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டும் புத்துணர்ச்சி பெற்றால்தான் வரும் நாள்களில் மீண்டும் தங்கள் வேலையைத் தொடர முடியும் என்ற எண்ணம் வளர ஆரம்பித்து விட்டது. அதுவே நாளடைவில் சுற்றுலாத் துறை மேம்பட வழிவகுத்தது.

ஜா கமிட்டி

  • இந்தியாவில் 1960-ஆம்  ஆண்டுக்குப் பிறகு சுற்றுலா வேகமாக வளர்ச்சியடைந்ததால், இதன் மேம்பாட்டுக்கான ஆலோசனை கூற அமைக்கப்பட்ட "ஜா கமிட்டி" 1963-இல் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது. இதன்படி, மத்திய அரசு சுற்றுலாத் துறையில் மிகுதியான கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்திய விடுதிக்  கழகம், இந்திய சுற்றுலாத் துறைக் கழகம், இந்திய சுற்றுலாத் துறை போக்குவரத்துக் கழகம் என்ற மூன்று கழகங்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது. அதன்படி மேற்கண்ட மூன்று கழகங்களை 1965-இல் இந்திய அரசு அமைத்தது.
  • ஆனால், பின்னர் இந்திய அரசின் பொருளாதார சிக்கனம் போன்ற காரணங்களுக்காக இந்த மூன்று கழகங்களும் இணைக்கப்பட்டு, 1966 அக்டோபர் 1-ஆம் தேதி தில்லியில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் என்ற பெயருடன் செயல்பட ஆரம்பித்தது.
    இந்தியா ஒரு தேவதைகளின் தேசம். அழகான புவியியல் அமைப்பையும், சரியான தட்பவெப்ப நிலையையும் கொண்ட தனித்துவமான நாடு. சுற்றுலாவைப் பொருத்தவரை, இங்கு கலாசாரம், பண்பாடு, வரலாறு, ஆன்மிகம், மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்துக்கும் சிறந்த இடங்கள் உண்டு.
  • பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கோடைவாசஸ்தலங்களையும், கோயில்களையும், விடுமுறை பொழுது போக்கிடங்களையும் சுற்றிப் பார்க்கவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். காற்றோட்டமான இடமும், சுவையான உணவும், ஆடை மாற்ற பாதுகாப்பான இடம், சுகாதாரமான கழிப்பறை,  இருப்பிட வசதிகள் இருந்தால், அங்கு உள்நாட்டு-வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வருவார்கள்.

வருவாய்

  • சுற்றுலாத் துறையின் வருவாய்க்கு சுகாதாரம், நல்ல உணவு வசதிகளுடன் கூடிய விடுதிகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. இதன் பற்றாக்குறை இந்தத் துறைக்கு சவாலாக உள்ளது. அடுத்து, சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாதது, சுகாதாரமற்ற போக்கு முதலானவை இதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
  • பாதுகாப்பு, பண்பாடு, பாரம்பரியம், கோயில் கட்டடக் கலைக்குப் புகழ் பெற்றுள்ளதால் சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி-சீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்றது. தற்போது இது பெரும் சுற்றுலாத் தலமாக மாறிவருகிறது. எனினும், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பற்றாக்குறை,சுகாதாரமின்மை, பராமரிப்பு, நடைபாதை நெரிசல் போன்றவை இன்னும் சவாலாகவே உள்ளன.

ஆக்கிரமிப்பு

  • மேலும், மலைகளின் அரசி என்று கொண்டாடப்படும் உதகமண்டலம், கொடைக்கானலில் அதிகப்படியான வசதிகளோடு கூடிய தனியார் விடுதிகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் ஆக்கிரமிப்பு இடங்களிலேயே அமைந்துள்ளன. அதனால் அவற்றின் இயற்கை அழகு மறைந்து நாம் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால், இவற்றை முறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
  • பிரபலமான இடங்கள் மட்டுமல்லாமல், வெளிச்சத்துக்கு வராத நல்ல இயற்கை அழகோடும், பாரம்பரியத்துடனும் கூடிய இடங்களையும் சுற்றுலா செல்ல தகுதியான இடங்களாக மாற்ற வேண்டும். முதுமலை, வேடந்தாங்கல் உள்ளிட்ட பல சரணாலயங்களை ஏற்படுத்தலாம். அதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து விலங்கினங்களைக் கொண்டுவந்து இங்குள்ள பரந்த காடுகளில் இனப்பெருக்கம் செய்ய வழிவகுக்கலாம்.
    சுற்றுலா என்றால், இளைஞர்களும், குழந்தைகளும் கேட்கும் முதல் கேள்வி அங்கு விளையாட, உற்சாகப்படுத்த என்னென்ன இருக்கும் என்பதுதான். எனவே, பாரா கிளைடிங், மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகள் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். இதுபோன்ற விளையாட்டுகள் விளையாட சூழ்நிலை உள்ள இடங்களில், அங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு அரசின் மூலம் பயிற்சி கொடுக்கலாம். இவர்களுக்குப் பயிற்சியளிக்க இந்திய மலையேற்ற நிறுவனம் போன்றவற்றில் பயிற்சி பெற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அந்த இடத்தின் இயல்பு பற்றி மலைவாழ், பழங்குடியின மக்கள் நன்கு தெரிந்திருப்பதால் குரங்கணி போன்ற விபத்துகளும் தவிர்க்கப்படும். அவர்களைக் கொண்டே உணவு தயாரித்தல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், கைவினைப் பொருள்களை விற்றல் முதலானவற்றைச் செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

விளையாட்டுகள்

  • இதேபோல், சுற்றுலாப் பயணிகளுக்கு நீர் விளையாட்டில் எப்போதும் ஆர்வம் இருக்கும். எனவே, உலகில் இரண்டாவது நீளமான  கடற்கரையான மெரீனா, புதுச்சேரி, கோவா போன்ற இடங்களில் சாகச நீர் விளையாட்டுகளையும், படகு இல்லம் போன்றவற்றையும் அமைக்கலாம். இதற்காக, நீர் விளையாட்டுகளுக்கான தேசிய நிறுவனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக, இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொள்வது அவசியம். 
  • பெண்களின் பாதுகாப்பு, ஆபத்து இல்லாமை, நம்பகத்தன்மை ஆகியவற்றினாலேயே இந்திய சுற்றுலாத் தலங்களைத் தேடி வெளிநாட்டினர் வருகிறார்கள். எப்போதும் இதில் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
  • மேலும், இந்தத் துறை பல நிலைகளில், பலதரப்பட்ட திறன் படைத்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது. எனவே, தனி மனித அறிவு, நட்புறவு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி என வளர்ந்து வரும் சுற்றுலாத் துறை இனி நாட்டின் வளர்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினமணி (25-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories