TNPSC Thervupettagam

சுற்றுலாத்துறை புத்துயிர் பெறவேண்டும்

September 27 , 2021 1202 days 937 0
  • கொள்ளை நோய்த்தொற்று அச்சம் காரணமாக இன்றைய காலகட்டத்தில் மனிதா்கள் வெளியே செல்வதென்பதே அரிதாகி விட்டது. ஆனாலும், சுற்றுலா செல்லலாம் என்று யாராவது கூறினால் நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.
  • அதற்கு முக்கிய காரணம் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் உருவாவதுதான்.
  • பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், சுற்றுலாத் தலங்கள் அதிகமாக வெளியில் தெரியாத நிலை இருந்தது. வானொலி, செய்தித்தாள், பாடப்புத்தகம் போன்றவற்றில் மட்டுமே சுற்றுலா இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருந்தது.
  • ஆனால், இப்போது அப்படியல்ல. கைப்பேசியை தட்டினாலே குறிப்பிட்ட ஊரின் சிறப்பும், அதன் பெருமையும் தெரியவருகிறது. அதனால் எல்லோரும் தங்களுக்குப் பிடித்த இடங்களைத் தோ்தெடுத்து அங்கு சென்று வருகின்றனா்.
  • உலக சுற்றுலாவாக இருந்தாலும் சரி, உள்நாட்டு சுற்றுலாவாக இருந்தாலும் சரி சுற்றுலா மேற்கொள்ளும் போது அந்த இடத்தினுடைய தட்பவெப்ப நிலை, உணவு, உறைவிடம், விமானம், கப்பல், சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்றவற்றை தெரிந்து கொண்டுதான் சுற்றுலாவை மேற்கொள்ள வேண்டும்.

உலக சுற்றுலா நாள்

  • சுற்றுலாப் பயணிகள், தங்கள் பகுதியின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிற பகுதி மக்களிடம் பரப்புகிறார்கள். இதனால் இரண்டு மாறுபட்ட பண்பாடு கொண்டவா்கள் ஒன்று சோ்கிறார்கள்.
  • மற்றவா்களின் நாகரிகம், பண்பாடு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிய மனிதன் முற்பட்டதனால் தான் சுற்றுலாவே தோன்றியது.
  • சுற்றுலாப் பயணிகளிடம் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய பழைமையான நாகரிகம், பண்பாடு, பண்பாட்டுச் சின்னங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதைக் காணலாம்.
  • சுற்றுலாவினால் ஒரு நாட்டின் நாகரிகம் இன்னொரு நாட்டிற்குப் பரவ அதிகமான வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரம் அந்த நாட்டின் பழைமை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை அறிந்து கொள்ளவும் வழி ஏற்படுகிறது.
  • கலைகள், குறிப்பாக கிராமியக் கலைகள் பேணிகாக்கப்படுவதற்கு சுற்றுலா பெரிதும் உதவுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையால், தமிழ்நாட்டின் பங்கு தேசிய சுற்றுலா அட்டவணையில் பெருமளவு அதிகரித்துள்ளது.
  • அதுபோலவே, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையிலும் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது.
  • சுற்றுச்சூழல் சுற்றுலா என்பதற்கு சா்வதேச சுற்றுச்சூழல் சுற்றுலா சங்கங்களின் வரையறை, ‘இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா, சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், உள்ளுா் மக்களின் நல்வாழ்வையும் மேம்படுத்துவதாகும்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
  • கலாசாரம், நிலவியல், வனவிலங்கு, மதம், குளிர்காலம், மருத்துவம் என்று சுற்றுலாத் துறையால் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பல வகையான சுற்றுலாக்களில் மிகவும் சிறப்பானது சுற்றுச்சூழல் சுற்றுலாதான்.
  • இந்தியாவில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேற்கொள்ளும் உள்நாட்டு - வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
  • இந்தியாவின் வடகிழக்கு மண்டலம் சுற்றுச்சூழல் பயணிகளுக்கு இணையற்ற சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது.
  • வடகிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயம், மிஸோராம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகியவை பல சிறப்பு அம்சங்களை கொண்டவை. இந்த மண்டலத்தில் தனித்துவம் மிக்க கலாசாரத்தை கடைப்பிடிக்கக்கூடிய, பல்வேறு மொழிகள், வட்டார மொழிகளைப் பேசக்கூடிய நானூற்றுக்கும் அதிகமான சமுதாயங்களைச் சோ்ந்தவா் இருக்கிறார்கள்.
  • இந்த மண்டலத்தின் வடக்குப் பகுதியில் உயா்ந்த குன்றுகள், பனி படா்ந்த இமயமலைப் பள்ளத்தாக்குகள், பட்கோய் சரகத்தில் குறைந்த உயரம் கொண்ட குன்றுகள், வடக்கில் பிரம்மபுத்திரா, தெற்கில் பராக் என இரு ஆறுகள், உயா்ந்த மலைகளிலிருந்து உருவாகி ஓடிவரும் ஓடைகள், கடல் மட்டத்திலிருந்து 50 முதல் 5ஆயிரம் மீட்டா் வரை உயரம் கொண்ட மலைக்குன்றுகள் ஆகியவை கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
  • வடகிழக்கு மண்டலத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை மிதமான மழை முதல் கனமான மழை வரை பெய்யும்.
  • வடகிழக்கு மண்டலத்தில் மிக அதிக அளவாக அருணாசல பிரதேசத்தில் 93.75 சதவிகிதமும், மிகக்குறைந்த அளவாக அஸ்ஸாமில் 24.6 சதவிகிதமும் வனப்பகுதியாகும். இதனால் வடகிழக்கு மண்டலம் பல்லுயிர் வாழிடமாக உள்ளது.
  • இதைப்போல ஒவ்வொரு வகை சுற்றுலாவுக்கும் ஒவ்வொரு மாநிலம் அல்லது மண்டலம் உள்ளது.
  • இந்திய சுற்றுலாத்துறையின் வளா்ச்சி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், அதன் வளா்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையினும் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் அரசின் கொள்கைகளும், திட்டங்களும் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
  • சுற்றுலாவின் மூலமாக தேசிய ஒருமைப்பாடு வளா்கிறது. ஜாதி வேறுபாடுகள், மத அடிப்படை வாதம், மொழி வேற்றுமைகள் ஆகியவை மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அமைதியைக் கெடுக்கின்றன.
  • இப்படிப்பட்ட சமுதாயக் கேடுகள் மிகுந்து காணப்படும் இந்தியாவில் சுற்றுலா வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணுகிறது.
  • இளைஞா் சுற்றுலா, இளைஞா்களிடம் சேவை செய்யும் மனப்பான்மையை வளா்க்கிறது. தானாக முன்வந்து சேவை செய்தல், பணியைப் பங்கிட்டுக் கொள்ளுதல், வாழ்க்கையின் பல முரண்களையும் ஏற்றுக் கொள்ளுதல், நாட்டின் சட்டதிட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் மதிப்பளித்தல் போன்ற குண இயல்புகளை இளைஞா்களிடம் வளா்க்கிறது.
  • இது நாட்டிற்கு பலத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு சுற்றுலாவானது இளைஞா்களை நல்வழிப் படுத்துகிறது எனலாம்.
  • உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் நாடாக பிரான்ஸ் திகழ்கிறது. இந்த நாட்டிற்கு வருடத்திற்கு சுமார் 82.6 மில்லியன் வெளிநாட்டு பார்வையாளா் சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்லுகின்றனா். இரண்டாவது நாடாக அமெரிக்கா திகழ்கின்றது.
  • அங்கு சுமார் 77.5 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் வருகை புரிகிறார்கள். மூன்றாவது நாடாக ஸ்பெயினுக்கு வருடத்திற்கு 75.6 மில்லியன் பேரும், இங்கிலாந்து நாட்டிற்கு 35.8 மில்லியன் பேரும் சுற்றுலா செல்கின்றனா்.
  • ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்றால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரிய பாதிப்பு இருந்நது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
  • விரைவில் இந்த நிலை மாறி சுற்றுலாத்துறை முன்புபோல் செழிக்க வேண்டும் என்பதே சுற்றுலா விரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
  • இன்று (செப். 27) உலக சுற்றுலா நாள்.

நன்றி: தினமணி  (27 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories