TNPSC Thervupettagam

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் நாச்சியார் திருமொழி

January 9 , 2025 9 days 50 0

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் நாச்சியார் திருமொழி

  • பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள், ஸ்ரீ வைணவ பாரம்பரியத்தையும், இறைவனை அடைய தான் கண்ட கனவையும் உலகம் அறியச் செய்யும் வண்ணம், 143 ஸ்லோகங்களைக் கொண்ட நாச்சியார் திருமொழியை இயற்றியுள்ளார். திருமொழிகளில் ‘வாரணமாயிரம்’ எனத் தொடங்கும் பாசுரம் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
  • இதில் ஆண்டாள் தனது அவதாரத்தின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறார். தான் கண்ட கனவை தனது தோழிகளிடம் பகிர்ந்து கொள்கிறார். திருமாலை அடைய முயற்சிக்கும் ஆண்டாள், தன் மனதில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அமைதியின்மை குறித்து 143 பாசுரங்களில் விளக்கியுள்ளார்.
  • நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த 143 பாசுரங்கள் 14 தசாப்தங்களாக (திருமொழிகள்) வகைப்படுத்தப்பட்டுள்ளன. திருமாலை அடைவதற்காக காமதேவரிடம் பிரார்த்தனை, தான்கட்டிய மணல் கோட்டையை அழிக்காமல் இருக்க திருமாலிடம் பிரார்த்தனை, திருமால் தனது கிருஷ்ணாவ தாரத்தில் கோபிகளின் ஆடைகளை எடுத்துக் கொண்டு திருப்பித் தருதல், ஆண்டாள் திருமாலுடன் இணைவது, திருமாலை அழைக்க குயில்களிடம் கோரிக்கை வைப்பது, ஆண்டாளின் திருமணக் கனவு, திருமாலின் பாஞ்சசன்யம், சுதர்சன சக்கரத்தின் பெருமைகள், திருமாலை அழைக்க மேகங்களை தூதாக அனுப்புவது, திருமாலை பிரிந்த சோகம், திருமாலை அடைய பிறரது உதவியை நாடுதல், ஸ்ரீரங்கநாதர், ரங்கநாயகி புகழ்மாலை ஆகியன இப்பாசுரங்களில் விளக்கப்படுகின்றன.
  • நாச்சியார் என்றால் பெண். திருமொழி என்றால் புனித மொழிகள் என்று பொருள் கொள்ளலாம். செம்மொழியான தமிழ் கவிதை மரபுகளையும், வேதங்கள், புராணக்கருத்துகள் ஆகியவற்றில் இருந்து முக்கிய சாரம்சங்களையும் தொகுத்து, கவிதை நடையில் திருமால் மீதான தனது அன்பை, ஆண்டாள் இப்பாசுரங்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
  • முதல் தசாப்தத்தில் (தையொரு திங்கள்) திருமாலை தனது மணாளனாக அடைய கோதை காமதேவனை பிரார்த்திக்கிறார். திருமாலை அடைய முடியாவிட்டால், தன்னுயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிவதாக குறிப்பிடுகிறார். இரண்டாவது தசாப்தத்தில் (நாமமாயிரம்) வைப்பாறு நதியில் தான் கட்டிய மணல் கோட்டையை திருமால் பாதுகாக்க வேண்டும் என்று அவரது திருநாமங்களைக் கூறி வேண்டுகிறார்.
  • மூன்றாவது தசாப்தத்தில் (கோழியழைப்பதன்) கிருஷ்ணரின் இளவயது குறும்புகளையும், கோபியரின் ஆடைகளை அபகரித்து பின்னர் கொடுத்ததற்கான உட்கருத்தையும் விளக்குகிறாள். நான்காவது தசாப்தத்தில் (தெள்ளியார் பலர்) திருமாலுடனான தனது ஐக்கியத்தை வெளிப்படுத்துகிறார்.
  • ஐந்தாவது தசாப்தத்தில் (மன்னு பெரும்புகழ்) குயில்களை அழைத்து, திருமாலின் புகழ் பாடச் சொல்கிறாள். குயில்களும் அவ்வாறே திருமால் புகழ் பாடுகின்றன. குயில்மொழிகளில் பாஞ்சராத்ர ஆகமக் கருத்துகள் நிறைந்திருப்பதாக வல்லுநர்கள் உரைக்கின்றனர்.
  • ஆறாவது தசாப்தம் (வாரணமாயிரம்), ஆண்டாள் - திருமால் திருமணத்தில் இடம்பெற வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் குறித்த ஆண்டாளின் கனவை உரைக்கிறது. ஏழாம் தசாப்தத்தில் (கற்பூரம் நாறுமோ) திருமால் கையில் இருக்கும் பாஞ்சசன்யம் சங்கு, சக்கரம் ஆகியவை பெற்ற பெரும்பேறு குறித்து கூறுகிறார்.
  • அந்தப் பேற்றைதானும் பெற வேண்டும் என்று விரும்புகிறார். எட்டாம் திருமொழி விண்ணீல மேலாப்பு என்று தொடங்குகிறது. இதில் ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேகங்களை அழைத்து, திருமலை சென்று அங்கு உறையும் திருமால் மீதுள்ள தனது அன்பை அவரிடம் விளக்குவதற்கு தூது அனுப்புகிறார்.
  • மீதமுள்ள 9, 10, 11, 12, 13-ம் (சிந்தூரச் செம்பொடி, கார்க்கோடல் பூக்காள், தாமுகக்கும், மற்றிருந்தீர், கண்ணனென்னும்) திருமொழிகள் திருமாலுடனான தனது ஐக்கியத்தை விரைவுப்படுத்த, கோதை செய்த முயற்சிகளை விளக்குகின்றன. நிறைவாக உள்ள 14-ம் (பட்டி மெய்ந்தோர் காரேறு) திருமொழியில் லட்சுமி தேவியின் அவதாரமாக விளங்கும் கோதை திருமாலை மணக்கும் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து வீடுகளிலும் ஆண்டாளின் திருப்பாவை, நாச்சி யார் திருமொழி பாடப்படுகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories