- இந்தியாவின் மின் நுகர்வு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி சூர்யோதய் யோஜனா’ திட்டம் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது. மக்கள்தொகையில் சீனாவை விஞ்சியிருக்கும் நிலையில், இந்திய நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவைகளையும் உறுதிசெய்யும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில், எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.
- ஏழை-நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு கோடி குடும்பங்களுக்கு சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் வழங்குவதற்காக வீட்டின் மேற்கூரையில் சூரிய சக்திப் பலகைகளைப் பொருத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ஏழை-நடுத்தர வர்க்க மக்களின் மின் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆற்றல் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- 356 ஜிகாவாட் நிறுவப்பட்ட அலகுடன், உலகின் மூன்றாவது பெரிய மின் உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது. இதில் சுமார் 64% அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது; காற்று, சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் சுமார் 22% வரை பங்களிக்கின்றன.
- இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் அளவை எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; இதில், குறைந்தபட்சம் 280 ஜிகாவாட் அளவானது சூரிய மின்சக்தியிலிருந்து பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- 2010இல் 10 மெகாவாட் அளவிலிருந்த இந்தியாவின் சூரிய மின்சக்தித் திறன், 2023இல் 70 ஜிகாவாட் அளவைத் தாண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ‘பிரதான் மந்திரி சூர்யோதய் யோஜனா’ திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. 2014இல், மேற்கூரை சூரிய சக்தித் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
- 2022ஆம் ஆண்டுக்குள் 40,000 மெகாவாட் (40 ஜிகாவாட்) என்ற ஒட்டுமொத்த நிறுவப்பட்ட திறனை அடைவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது. எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த இலக்கு எட்டப்படவில்லை என்பதால், இதற்கான காலம் 2026 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம், 2019 மார்ச் மாதம் 1.8 ஜிகாவாட் அளவில் இருந்த இந்தியாவின் மேற்கூரை சூரிய சக்தி அளவு, 2023 நவம்பரில் 10.4 ஜிகாவாட் அளவை எட்டியிருக்கிறது.
- 2023 டிசம்பர் நிலவரப்படி, இந்தியாவில் நிறுவப்பட்டிருக்கும் சூரிய சக்தியின் திறன் 73.31 ஜிகாவாட் அளவாகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியைப் பொறுத்தவரை, 2018 மார்ச் மாதம் 115.94 ஜிகாவாட் அளவிலிருந்து 2023 ஜூன் மாதம் 176.49 ஜிகாவாட் அளவாக உயர்ந்திருக்கிறது.
- புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மனிதகுலம் நகர வேண்டும் என்கிற குரல் உலகளவில் வலுவாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 2070ஆம் ஆண்டு இந்தியா கார்பன் சமநிலையை எட்டும் என காப்-26 காலநிலை மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். அத்தகைய இலக்கை எட்டுவதற்கான வழிகளில் ஒன்றாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய இந்தியாவின் முன்னெடுப்புகள் கைகொடுக்கும் என நம்புவோம்!
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 02 – 2024)