- சூரியனின் நிறம் என்ன என்று கேட்டால் மஞ்சள் என்று சொல்லிவிடுவீர்கள். நாம் சிறுவயதில் இருந்தே ஓவியங்கள், கார்ட்டூன்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் சூரியனை மஞ்சள் நிறத்திலேயே பார்த்துப் பழகிவிட்டோம். ஆனால், அதன் உண்மையான நிறம் மஞ்சள் அல்ல. சூரியனை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியாது. காரணம், அதன் பிரகாசம் மிக அதிகமாக இருப்பதால் கண்களின் திறனை மழுங்கடித்துவிடும். அதனால் சூரியனின் நிறத்தை நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்வது கடினம். சில ஆண்டுகளுக்கு முன் சூரியனின் நிறம் குறித்த கேள்விக்கு, பச்சை நிறம் என்று பதிலளித்தார் உலகப் பணக்காரர்களில் ஒருவரும், அறிவியல், தொழில்நுட்ப வல்லுநருமான எலான் மஸ்க்.
- உடனே அவரை இணைய உலகமே கிண்டல் செய்தது. ஆனால், விஞ்ஞானிகள் சூரியனுக்கும் பச்சை நிறத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்கின்றனர். இதைத் தெரிந்துகொள்வதற்கு நாம் சூரியனின் பண்பைப் பற்றி முதலில் அறிய வேண்டும். சூரியன் தொடர்ந்து மின்காந்த அலைகளை வெளியிடுகிறது. இந்த மின்காந்த அலைகள்தாம் சூரியக் கதிர்களாகப் பயணிக்கின்றன. சூரியக் கதிர்களில் பல்வேறு அலைநீளங்கள் இடம்பெறுகின்றன. இவற்றுள் நாம் மனிதக் கண்களால் பார்க்க முடியும் அலைநீளங்களைத்தாம் கண்ணுறு ஒளி (Visible Light) என்கிறோம். கண்ணூறு ஒளிக்கும் அதிகமான அலைநீளங்களை அகச்சிவப்பு கதிர்கள், மைக்ரோ கதிர்கள், ரேடியோ கதிர்கள் என்று வகைப்படுத்துகிறோம்.
- கண்ணுறு ஒளிக்குக் குறைவான அலைநீளங்களைப் புறஊதாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் என வகைப்படுத்துகிறோம். இவற்றை சூரிய நிறமாலை (Spectrum) எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு பல்வேறு அலைநீளங்களில் மின்காந்த அலைகள் வெளியாகும்போது அதில் ஆற்றலும் இடம்பெறுகிறது. இதில் அதிகபட்ச ஆற்றல் வெளிப்படும் இடமே அதன் வெப்பநிலையாக அறியப்படுகிறது. சூரியனின் அதிகபட்ச ஆற்றல் வெளிப்படும்போது அதன் வெப்பநிலை 5700 கெல்வின். அதேபோல இந்த அதிகபட்ச ஆற்றல் வெளியாகும் நேரத்தில்தான் ஒரு பொருளின் நிறத்தையும் நாம் அறியமுடியும்.
- இதன்படி பார்க்கும்போது நட்சத்திரங்கள் பல்வேறு நிலையில் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. குறைந்த ஆற்றலை வெளிப்படுத்தும் குளுமையான நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்திலும், மிகவும் வெப்பம் வாய்ந்த நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் காட்சி தருகின்றன. இடைப்பட்ட நட்சத்திரங்கள் ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் தோற்றமளிக்கின்றன.
- இந்த வகையில் நமது சூரியனும் ஒரு நட்சத்திரம் அல்லவா? சூரியன் அதன் உட்சபட்ச ஆற்றல் நிறமாலையின் கண்ணுறு ஒளியில்தான் வெளிப்படுகிறது. அதனால் சூரியனின் நிறம் கண்ணுறு ஒளியின் ஊதா, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என எல்லா நிறங்களையும் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஆற்றல் வெளிப்படும் அதிகபட்ச ஆற்றல் 500nm அலைநீளத்தில் நிகழ்கிறது. இது பச்சையும் நீலமும் கலந்த நிறம். சூரியனில் இந்த நிறம் வெளிப்படுவதை மனிதக் கண்களால் பார்க்க முடியாது. இதற்காக நிறமாலைமானி (Spectrometer) போன்ற சில கருவிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.
- இந்தக் கருவிகள் அவற்றின் அலைநீளம், வெப்பம் உள்ளிட்டவற்றை அறியப் பயன்படுகின்றன. இதன்படி பார்த்தால் சூரியனிலிருந்து அதிகம் வெளியாவது நீலம்-பச்சை நிறம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சூரியன் 5600 கெல்வினில் எரியும்போது அதன் நிறம் நீலம்-பச்சையில்தான் தோன்றும். இதனால்தான் எலான் மஸ்க் சூரியனின் நிறம் பச்சை என்று தெரிவித்தார்.
- பிறகு ஏன் சூரியனை நாம் மஞ்சள் நிறம் என்கிறோம்? இதற்குக் காரணம் பூமியில் உள்ள வளிமண்டலம். சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளியில் ஏழு நிறங்கள் அடங்கியிருப்பது நமக்குத் தெரியும். இதில் குறுகிய அலைநீளமான நீல நிறம் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படுவதால் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. அதேநேரம் சூரியன் அதற்கு எதிரான நீண்ட அலைவரிசை ஒளியான மஞ்சள் நிறத்தில் நமக்குக் காட்சியளிக்கிறது.
- இதுவே அதிகாலையிலும் மாலையிலும் சூரியன் சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும். காரணம், சூரியன் பூமியின் அடிவானத்திற்கு மிக அருகில் இருக்கும்போது அதன் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தில் அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் குறுகிய அலைநீளம் கொண்ட பச்சை, நீலம், ஊதா நிறங்கள் முற்றிலுமாகச் சிதறடிக்கப்பட்டு விடுவதால் சிவப்பு, ஆரஞ்சு நிறமே அடர்த்தியான வளிமண்டலத்துக்குள் ஊடுருவி நம் கண்களுக்குத் தெரிகிறது. அதனால் சூரியனும் அந்த நிறத்தில் காட்சியளிக்கிறது.
- அப்படி என்றால் சூரியனின் உண்மையான நிறம்தான் என்ன? சூரியனின் நிறம் வெள்ளைதான். சூரியன் கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களையும் கொண்டிருக்கிறது அல்லவா? அந்த நிறங்கள் கலக்கும்போது தோன்றும் நிறம் வெள்ளை. அதனால் சூரியனும் வெள்ளை நிறம்தான். இதனால்தான் சூரிய ஒளியை நாம் முப்பட்டகத்தில் பாய்ச்சும்போது அது ஏழு நிறங்களாகப் பிரிகிறது.
- நாம் விண்வெளியிலிருந்து சூரியனைப் படம் பிடிக்க முயன்றால் அதன் நிறம் வெண்மையாகத்தான் இருக்கும். ஆனால், இணையத்தில் நாம் சூரியனின் படங்களைத் தேடினால் அது மஞ்சள் நிறத்தில் இருப்பதுண்டு. இவை கிராபிக் படங்கள். நாம் சூரியனை மஞ்சள் நிறமாகவே கருதிக்கொண் டிருக்கோம் என்பதால் ஊடகங்களும் அவற்றுக்கு மஞ்சள் நிறத்தையே கொடுத்துவிடுகின்றன.
நன்றி: தி இந்து (06 – 12 – 2023)