TNPSC Thervupettagam

சூரியோதயப் புரட்சி

February 5 , 2024 288 days 231 0
  • நாடு தழுவிய அளவில் ஒரு கோடி வீட்டு மொட்டை மாடிகளில் சூரிய மின்சக்தித் தகடுகளைப் பொருத்தி 40,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் புதிய திட்டம் குறித்து, அயோத்தி ராமா் கோயில் பிராண பிரதிஷ்டையைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். ‘சூரியோதயம்என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்தத் திட்டம் தொடா்பாக இடைக்கால பட்ஜெட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • ஒரு கோடி வீடுகளில் பொருத்தப்படும் சூரிய மின்சக்தித் தகடுகள் மூலம் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், அந்தக் குடும்பத்தினரால் ஆண்டொன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சேமிக்க முடியும். கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்பகிர்மான நிறுவனங்களுக்கு அவா்களால் விற்பனை செய்ய முடியும் என்று நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டம் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
  • இந்தியாவில் பெரும்பாலான பகுதிகள் ஆண்டொன்றுக்குக் குறைந்தது 300 நாள்கள் வெயில் கிடைப்பவை. இப்போதே 70 ஜிகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியுடன் உலகில் நான்காவது இடத்தில் நாம் இருக்கிறோம். 2030-க்குள் 280 ஜிகாவாட் சூரிய மின்சக்தி தயாரிப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால், நமது உற்பத்தித் திறனான 748 ஜிகாவாட்டில் 10% அளவைக்கூட நாம் இன்னும் எட்டவில்லை என்பதுதான்.
  • நமது கச்சா எண்ணெய்த் தேவையில் 86% இறக்குமதி செய்யப்படுகிறது. நமது எரிசக்தி உற்பத்தியில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி அனல் மின்சக்தி (நிலக்கரி) சார்ந்தது. இந்தியாவின் பொருளாதாரம் மேலும் விரிவடைய வேண்டுமானால், நாம் கூடுதல் அனல்மின் நிலையங்களை நிறுவியாக வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.
  • அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் மொத்த எரிசக்தித் தேவையில் 25% அளவு நமக்கு மட்டுமே தேவைப்படும். இப்படிப்பட்ட பின்னணியில், சூரிய மின்சக்தியை முழுமையாகப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்குவது என்பது இந்தியாவுக்கு காலத்தின் கட்டாயம்.
  • கடந்த பல ஆண்டுகளாகசோலார் எனா்ஜிஎனப்படும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு முனைப்புக் காட்டுவது தொடங்கிவிட்டது. ஆனால், அவை பெரிய அளவில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் நிறுவி அதிக அளவில் மின் உற்பத்தியை ஊக்குவிப்பதாக இருந்திருக்கின்றன. நுகா்வோரின் அன்றாட மின் தேவையை சூரிய மின்சக்தி மூலம் எதிர்கொள்ள ஊக்குவிக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.
  • ரூஃப் டாப் சோலார்எனப்படும் வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி முறையாகவும் முனைப்பாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டால் 1,240 ஜிகாவாட் மின் உற்பத்தி சாத்தியம் என்கிறது 2015 அறிக்கை. அதனடிப்படையில் 2022-க்குள் 40 ஜிகாவாட் வீட்டு மாடி சூரிய மின்சக்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2023 முடிவில் சுமார் 11 ஜிகாவாட் அளவைத்தான் நாம் எட்டியிருக்கிறோம்.
  • இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. ஒரு வீட்டுக்கு சராசரியாக ஐந்து போ் என்று வைத்துக்கொண்டாலும் சுமார் 28 கோடி குடும்பங்கள் உள்ளன. சராசரி மின் நுகா்வு குடும்பத்துக்கு 1,255 கிலோவாட் என்று கூறப்படுகிறது. பெருநகரங்களில் அதிகமாகவும், சிறு நகரங்கள், கிராமங்களில் குறைவாகவும் மின்சாரம் நுகரப்படுகிறது.
  • பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் வாழும் 53 நகரங்களும், அதற்குக் குறைவானோர் வாழும் 4,000 நகரங்களும் இந்தியாவில் இருக்கின்றன. நமது மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் நகரங்களில் வாழ்கிறாா்கள். அவா்கள் அனைவரும் சூரிய மின்சக்தி நுகா்வோராக மாறினாலே போதும், இந்தியாவின் எரிசக்தித் தேவை கணிசமாகக் குறைந்து, அதன் மூலம் பெரிய அளவில் அந்நியச் செலாவணியை நாம் மிச்சப்படுத்த முடியும்.
  • சூரிய மின்சக்தித் தகடுகளைப் பொருத்தி நுகா்வோருக்கு மின்சாரம் வழங்குவதில் பல சிக்கல்கள் இல்லாமல் இல்லை. முதலாவது பிரச்னை, நுகா்வோர் மத்தியில் ஆா்வம் இல்லாமல் இருப்பது.
  • தமிழகத்தில் 100 யூனிட் வரை கட்டணம் இல்லாமலும், அதற்கு மேல் 100 யூனிட்டுக்கு வெறும் ரூ.2.25, அடுத்த 200 யூனிட்டுகளுக்கு ரூ.4.50, அடுத்த நிலைக்கு 500 யூனிட் வரை ரூ.6.00, பிறகு ரூ.8, ரூ.9, ரூ.10, ரூ.11 என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான கீழ் நடுத்தரக் குடும்பங்களின் சராசரி மின் தேவையே 200 யூனிட்டுகள்தான் எனும்போது, அதுவும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ கிடைக்கும்போது சூரிய மின்சக்தி உற்பத்தியில் முதலீடு செய்யத் தயங்குவது நியாயம்தானே...
  • 3 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய மின்சக்தி அமைப்புக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு தேவைப்படுகிறது. அதற்கு வங்கிகள் கடன் வழங்கத் தயங்குகின்றன. அதே நேரத்தில், பணக்காரா்களின் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. இதனால், மின் பகிர்மான நிறுவனங்கள் மானியங்களை நம்பி செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • இலவச மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக, குறைந்த நுகா்வு உள்ள குடும்பங்களுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி செய்து கொள்ள மானியம் வழங்குவதன் மூலம், மின் பகிா்மான நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்பதுடன், மாநில அரசுகளின் மானியச் செலவும் குறையும். மத்திய அரசின் திட்டத்தை சாதுா்யமாகத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள மாநிலங்கள் முற்படுவது நல்லது.
  • சுத்தமான எரிசக்தி என்பது தேசத்தின் தேவை மட்டுமல்ல, மனித இனத்தின் தேவையும்கூட.

நன்றி: தினமணி (05 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories