சூழல் காப்போம்
_______________
அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்
அண்மையில் உச்சநீதிமன்றம், வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையினால் ஏற்படும் மாசுபாட்டினைக் குறைப்பதற்காக, மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு காப்பீடு அளிப்பதினைத் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தினை அமைத்திடவும் ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு சற்றே குறைக்கப்படும் என்றே நம்பலாம்.
இப்பொழுதெல்லாம் உலக வெப்பமயமாதல் (Global Warming) என்பதனை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்று சொல்லலாம்.
உலக வெப்பமயமாதலில் வாகனங்கள் வெளியிடும் புகை குறிப்பிடத்தக்க இடத்தினைப் பிடிக்கின்றது. 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் அன்று கணக்கெடுப்பின்படி புது டெல்லியில் 8.8 மில்லியன் வாகனங்களும், பெங்களூரில் 6.1 மில்லியன் வாகனங்களும், சென்னையில் 4.47 மில்லியன் வாகனங்களும், கொல்கத்தாவில் 3.86 மில்லியன் வாகனங்களும் மும்பையில் 2.7 மில்லியன் வாகனங்களும் உள்ளன.
சூறையாடப்படும் சுற்றுச்சூழல்
மோட்டார் வாகனங்களிலிருந்து ஹைட்ரோ கார்பன்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள், கார்பன் மோனாக்சைடு, சல்ஃபர் டை ஆக்சைடு, ஆபத்து விளைவிக்கும் காற்று மாசுபடுத்திகள், பசுமை இல்ல வாயுக்கள் ஆகியன வெளிவந்து சுற்றுச்சூழலைச் சூறையாடுகின்றது என்பதினைச் சொல்லவும் வேண்டுமோ? இதில் பயணிகள் வாகனங்களே காற்றினை மாசுபடுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன. அவ்வாறெனில் சுற்றுச்சூழல் மாசடையாத மிதிவண்டி பயணத்தினை முடிந்த அளவு மேற்கொள்வது நன்மை பயக்கும் அல்லவா! மிதிவண்டிப் பயணமா என்று மனத்தில் சலிப்பு ஏற்பட்டால், காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களைப் பற்றி சிந்தித்தால் அந்த சலிப்புணர்வு போய்விடும். மேலும் விழிப்புணர்வும் பெருகும்.
வேதனையின் காரணிகள்
காற்று மாசுபாட்டினால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் மிகவும் தீவிரம் வாய்ந்தவை. ஆஸ்துமா, மார்புச் சளி நோய், புற்றுநோய் போன்ற எண்ணிலடங்கா நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், ஒவ்வொரு வருடமும் காற்று மாசு துகள்களினால் 30000 பேர் இறக்கின்றனர் என்பது எத்தனை வேதனைக்குரிய செய்தி.
டீசல் வாகனமே காற்று மாசு துகளுக்கு முதன்மை காரணியாகின்றது. இது புகைக்கரியுடன் இணைந்து புகைப்பனியாக இருண்ட நிறத்தில் தோற்றம் அளிக்கின்றது. இதிலுள்ள நுண்துகள்கள் முடியின் விட்டத்தில் பனிரெண்டில் ஒரு பங்கு அளவிற்கும் குறைவாக இருக்கின்றது . அதனால் எளிதில் நுரையீரலில் நுழைந்து விடுகின்றன. மேலும் காற்று மாசு துகளானது ஹைட்ரோ கார்பன்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்ஃபர் டை ஆக்சைடுகள் ஆகியவற்றின் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாக விளங்குகின்றன.
ஹைட்ரோ கார்பன்கள் சூரிய ஒளி முன்னிலையில் நைட்ரஜன் ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து பூமியின் தரைத்தளத்தில் அமையும் புகைப்பனியின் முதன்மை பகுதிப் பொருளாய் அமைகின்றது. இந்தப் புகையானது சுவாச மண்டலத்தினைப் பாதித்து இருமல், மூச்சுத்திணறல் , நுரையீரல் செயல்பாட்டில் குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.
நைட்ரஜன் ஆக்சைடுகள் மிக உயர் வெப்பத்தில் வெளியிடப்படுகின்றது. மேலும் இடி இடிக்கும் பொழுது ஏற்படும் மின்னிறக்கத்தாலும் இயற்கையிலேயே வெளியிடப்படுகின்றது. இது பழுப்பு நிறத்தில் தூசு மற்றும் புகையுடன் கலந்து காற்று மண்டலத்தில் காணப்படும். மேலும் இது நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்துகின்றது. சுவாச மண்டலத் தொற்றுகளான நிமோனியா, இன்ஃபுளூயன்சா ஆகியவற்றைத் தடுக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைதனை குறைக்கின்றது. மேலும் புவியின் மேற்பரப்பில் புகைத் துகளினையும் உருவாக்குகின்றது.
கார்பன் மோனாக்சைடு நிறமற்ற மற்றும் மணமற்ற வாயு. மேலும் விஷத்தன்மை கொண்ட இந்த வாயு , கார் மற்றும் பாரம் ஏற்றிச் செல்லும் வண்டிகள் மூலம் அதிகளவில் வெளியிடப்படுகின்றது. இயற்கை வாயு, நிலக்கரி போன்ற எரிபொருள்கள் முழுமையாக எரிக்கப்படாத பொழுது அதிக அளவில் இது வெளியிடப்படுகின்றது. சுவாசிக்கும் பொழுது மூளை, இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளிலிருந்து வரும் ஆக்சிஜனைத் தடை செய்கின்றது. மேலும் கருவிலிருக்கும் சிசு, புதிதாக பிறந்த குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.
கந்தக டை ஆக்சைடு, மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும் கந்தகம் அடங்கிய எரிபொருள்கள் குறிப்பாக டீசல் மூலம் வெளியேற்றப்படும். கந்தக –டை- ஆக்சைடு வளிமண்டலத்தில் வினைபுரிந்து மிக நுண்துகள்களை உருவாக்குகின்றது. அது சிறு குழந்தைகளுக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
விஷமுள்ள காற்று மாசுபடுத்திகள் பிறப்புக் குறைபாடுகள், புற்றுநோய் மற்றும் மிக ஆபத்தான நோய்களை வரவழைக்கின்றன. காற்று மாசுபடுத்திகளால் உருவாகக்கூடிய புற்றுநோய்களுள் பாதிக்குமேல் பென்சீன், அசிட்டால்டிகைடு, 1,3 பியூட்டைடின் ஆகியவற்றால் உருவாகின்றன.
பசுமை இல்ல வாயுக்கள் உலக காலநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றன. அதில் மிக முக்கியமான கார்பன்-டை-ஆக்சைடு மோட்டார் வாகனங்களால் வெளியிடப்படுகின்றது. உண்மையில் கார் மற்றும் பாரம் ஏற்றும் வாகனங்கள் வெளியிடும் கார்பன் – டை- ஆக்சைடு உலக வெப்பமயமாதலில் ஐந்தில் ஒரு பங்கிற்குக் காரணமாகின்றன. மேலும், எரிபொருளில் கலப்படமும் கலந்து விட்டால் மாசுபாட்டினைக் கேட்கவே வேண்டாம்!
ஆவியாகக்கூடிய கரிம வேதிப்பொருட்கள், மீத்தேன் மற்றும் மீத்தேன் அல்லாத வேதிப்பொருள்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. மீத்தேன் உலக வெப்பமயமாதலில் மிக முக்கிய காரணியாகும். பென்சீன், டொலுவீன், சைலீன் ஆகிய மீத்தேன் அல்லாத வேதிபொருள்கள் இரத்தப்புற்று நோயினை உருவாக்கும். மேலும், குளிர்பதனப்பெட்டி மற்றும் குளிர் சாதனப் பெட்டியில் இருந்து உருவாகும் குளோரோ ஃபுளோரோ கார்பன்கள் ஓசோன் அடுக்கிற்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இதனால் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமியை அடைந்து தாவரங்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் தோல் புற்று நோய், கண் நோய் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், ஆகாய விமானங்களும் தங்கள் பங்கிற்குக் காற்றினை மாசுபடுத்துகின்றன.
செயற்கையாக மட்டும் காற்று மாசுபடுவதில்லை. இயற்கையாகவும் அது மாசுபடுகின்றது. எப்படி தெரியுமா? உதாரணமாக எரிமலை வெடிப்பின் போது ஏற்படும் சாம்பல் காற்றில் கலத்தல் நிகழ்வுதனைக் கூறலாம். காற்று மாசுபடுத்திகள் பூமியின் தரைத்தளத்தில் வினைபுரிந்து உருவாக்கும் ஓசோனையும் கூறலாம்.
2014 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் காற்று மாசுபாட்டினால் உலகளவில் 7 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்று தெரிவித்தது. இதில் அதிக இறப்பு விகிதம் இந்தியாவில் நடக்கின்றது என்று கணக்கிட்டமை வேதனையான விஷயம் ஆகும். காற்று மாசுபாட்டினால் மாரடைப்பு ஏற்படுவது வளரும் நாடுகளில் அதிகமாய் இருப்பதும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசுபாடு புகைபிடிக்காதவர்களிடமும் நுரையீரல் புற்றுநோயைத் தோற்றுவிக்கின்றது என்பது வேதனைக்குரியது.
குழந்தைகளுக்கு காற்று மாசுபாட்டினால் உருவாகும் மிக நுண்ணிய துகள்களால் இரத்த அழுத்தத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. மேலும் காற்று மாசுபாடு குறைப் பிரசவம் ஏற்படுவதற்கும், குறைந்த எடையில் குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றது. தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் கர்ப்பிணிப் பெண்கள் விறகினைப் பயன்படுத்தி அடுப்பு எரிப்பதினால் 80% காற்று மாசுபாடு ஏற்பட்டு பாதிப்படைகின்றார்கள். மேலும் நிலக்கரி அடுப்புகளும் 97% காற்று மாசுபாட்டிற்குக் காரணமாகின்றன.
காற்று மாசுபாடானது மத்திய நரம்பு மண்டலத்தினைப் பாதிக்கின்றது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி ஆட்டிசம், ஸ்கிசோபெர்னியா என்னும் மனநல பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது. மேலும், கற்றல் குறைபாடு, மறதி போன்ற நோய்களையும் ஏற்படுத்துகின்றது.
- தரைத்தள ஓசோன், பயிர் வளர்ச்சியினைப் பாதிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- மண்ணெண்ணெய்யினை எரிப்பது பெட்ரோலினை எரிப்பதினை விடக் கடுமையானது. இதனால் அதிகமான ஹைட்ரோ கார்பன், கந்தகம், நுண் துகள் ஆகியவை வெளியிடப் படுகின்றன.
- காற்று ஆற்றல், சூரிய ஆற்றல், நீரிலிருந்து கிடைக்கும் ஆற்றல் ஆகியன காற்று மாசுபாட்டினைக் கட்டுப்படுத்த உதவும்.
- புற ஊதாக்கதிர்களிலிருந்து வரும் எலக்ட்ரான்கள் எளிதில் ஆவியாகக்கூடிய கரிம வேதிப்பொருட்களையும் , நைட்ரஜன் ஆக்சைடுகளையும் சிதைக்கின்றது.
- காற்று மாசுபாட்டினைக் குறைப்பதற்காக டைட்டானியம் ஆக்சைடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் (Central Pollution Control Board), மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் காற்று மாசுபாட்டினைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
- காற்று மாசுபாட்டினைத் தடுப்பதற்கான சட்டம் இந்தியாவில் 1981 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அது மீண்டும் 1987 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.
- ஓசோன் அடுக்கினைப் பாதுகாப்பதற்காக மாண்ட்ரியல் நெறிமுறைகள் (Montreal Protocol) இயற்றப்பட்டன. 1987 ஆம் ஆண்டு கையெழுத்தாகி 1989 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது.
- 1997 ஆம் ஆண்டு கியோட்டோ நெறிமுறைகள் (Kyoto Protocol) பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பது சார்ந்தது. 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.
- பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டினைத் தணித்தலுக்காக பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) நிறைவேற்றப்பட்டது. அதனை 159 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
- 2016 ஆம் ஆண்டு கிகாலி ஒப்பந்தம் (Kigali Agreement) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்னும் அமலுக்கு வரவில்லை.
- 2016 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீடு அறிக்கை வெளியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 141வது இடத்தினைப் பிடித்துள்ளது வருத்தத்திற்குரியது.
|
காற்றுத் தர உடல்நல குறியீட்டு எண் (Air Quality Health Index) 1-3 குறைவான காற்று மாசுபாடு கொண்டதாகும். காற்றுத் தர உடல்நல குறியீட்டு எண் 4-6 மிதமான காற்று மாசுபாடு கொண்டதாகும். அதுவே 7-10 எனில் அதிக காற்று மாசுபாடு கொண்டதாகும். 10 ஐ விட அதிகம் எனில் மிக அதிக காற்று மாசுபாடு கொண்டதாகும். மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும், மாசுக் கட்டுப்பாடு திட்டங்கள் இல்லாத இடங்களிலும் அதிக காற்று மாசுபாடு காணப்படுகின்றது.
மகத்தான வாழ்வுக்கு
உலக வெப்பமயமாதல் நம் உடல்நிலைச் சீர்கேட்டிற்குக் காரணமாவது மட்டுமல்லாமல் கடல் மட்டம் உயர்வு, கடுமையான வறட்சி மற்றும் வெள்ளம் , வெப்பநிலை உயர்வு ஆகியவற்றிற்கும் காரணமாகின்றன. வீட்டுக்கொரு வாகனம் என்ற நிலை மாறி ஆளுக்கொரு வாகனம் என்ற நிலையே இன்று உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கு முதன்மையான காரணம்.
உச்சநீதிமன்ற உத்தரவிற்காகவும், காப்பீட்டிற்காகவும் மட்டுமல்லாமல் நமக்காகவும் மாசு கட்டுப்பாடு உள்ள வாகனங்களைப் பயன்படுத்துவோம். மாசற்றச் சூழ்நிலையை உருவாக்குவோம். மகத்தான வாழ்வு வாழ்வோம்.
---------------