TNPSC Thervupettagam

செங்கோல் முன் கண்ணகி

June 22 , 2023 381 days 325 0
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் பொற்பனைக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரத்தின் மாளிகை மேடு என அகழாய்வு நடக்கும் இடங்களில் எல்லாம் பேரதிசயங்கள் விரிகின்றன. ஒரே ஆண்டில் எட்டு இடங்களில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்டுவருகிறது. பண்டைய தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம், விழுமியங்கள் போன்றவை இந்த ஆய்வுகள் மூலம் வெளிப்படுகின்றன.
  • தமிழ்நாட்டின் வரலாறு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொள்கிறார். எனினும், இந்த அகழாய்வுகளில் அவரது தந்தை மு.கருணாநிதி விரும்பியதை முதல்வர் கவனத்தில் கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. ‘ரோமாபுரி பாண்டியன்’ என்கிற நாவலை எழுதிய மு.கருணாநிதி, தாம் முதல்வர் பொறுப்பேற்ற பிற்காலத்தில், அதைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:
  • “இளமைக் காலந்தொட்டு எழுதுவதில் எனக்குத் தனி ஆசை. 1939இல் என் கைப்பட எழுதிய கதை. அதன் பெயர் ‘செல்வ சந்திரா’. எங்கேயோ அழுக்கேறிக் கிடந்த அந்தக் கையெழுத்துப் பிரதி அண்மையில் கிடைத்தது. கடலில் மூழ்கிவிட்ட காவிரிப்பூம்பட்டினத்தின் மேல் எனக்கு இளமைப் பருவத்திலேயே நெஞ்சில் ஒரு இடம் உண்டு. இன்று தமிழகத்தை ஆட்சி புரியும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, அதற்குப் பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் ‘பூம்புகார்’ உருவாக்க வேண்டுமென்று நான் புதிதாகக் கருதியதாக யாரும் நினைக்கக் கூடாது”.

பூம்புகாரின் பெருமை:

  • பூம்புகார் பொ.ஆ.மு. (கி.மு.) 2-3ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது என்பதை அறிஞர் தாலமி, ரோமானிய சபையில் பிளினி ஆகியோர் கூறினர். சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை; பிராகிருத நூலான மிலிந்த பனா, புத்த ஜாதகக் கதைகள், அபிதம்மாவதாரம், புத்தவம்சத்தகதா, பெரிபுளுசின் எரித்திரியக் கடல் ஆகியவை பூம்புகாரின் பெருமையையும் அது கடலில் மூழ்கிச் சந்தித்த பேரழிவையும் இயம்பின.
  • தேம்ஸ் நதிக்கரையில் 19ஆம் நூற்றாண்டில் லண்டன் பெற்ற சிறப்பைவிட ஆயிரம் மடங்கு சிறப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம் பெற்றிருந்ததாக தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதியிருக்கிறார். சதாசிவ பண்டாரத்தார் எழுதிய ‘காவிரிப்பூம்பட்டினம்’ (1959) என்ற நூலை,நா.தியாகராஜன் என்பவர் வழிமொழிந்தார். காவிரிப்பூம்பட்டினம் மட்டும் அகழாய்வில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அரசாங்கம் சரிவர ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மு.கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம் உள்ளிட்டவற்றை அமைத்தார்.

பூம்புகாரின் தொன்மை:

  • காவிரிப்பூம்பட்டினத்தில் 1981இல் முதல் கட்ட ஆய்வைத் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையும்; 1991இல், இரண்டாம் கட்ட ஆய்வைக் கோவாவில் உள்ள தேசியக் கடலியல் நிறுவனமும் (CSIR-NIO) நடத்தின. அப்போது தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த நடன.காசிநாதன், பூம்புகாரில் மேலும் கடல் அகழாய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • இப்போது இன்னொரு ஆய்வு வெளிவந்திருக்கிறது; மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறையும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. கடல் கொண்ட பூம்புகார் நகரம் 15,000 ஆண்டுகள் பழமையானது என அவை தெரிவிக்கின்றன. இந்த ஆய்வின்படி பூம்புகாரின் வயது, குஜராத்தின் துவாரகையைவிட அதிகம். பூம்புகார் ஒன்றல்ல, மொத்தம் ஏழு எனவும் கடற்கோளில் அழிந்ததாகக் கூறி டெல்டாக்களின் எண்ணிக்கை மூன்று என்றும் அவற்றிலும் இடமாற்றம் நடந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வு பல சர்ச்சைகளை எழும்பியுள்ளது. கடலுள் புதையுண்ட கட்டிடங்கள், குடியிருப்புகள், துறைமுகம், கப்பல்கள் இருந்ததாகக் கூறும் இந்த ஆய்வு உள்ளடக்கத்தில் எஸ்.ஆர்.ராவ், காந்தத் துறையின் ஆய்வாளர் எஸ்.பரமசிவம், ராதா குமுத் முகர்ஜி கூறுவதுடன் ஒத்துப்போகிறது.
  • தமிழக நதிகளிலேயே அதிக நீளமும் பயன்பாடும் கொண்டதாக இருப்பது காவிரி. இதன் நீளம் 413 கி.மீ. நதிக்கரை ஓரம்தான் நாகரிகம் வளர்ந்தது என்றால், மிக நீண்ட காவிரியில் நடைபெற்ற ஆய்வுகள் மிகக் குறைவு. மறுபுறம் இந்தியக் கடற்கரைகளின் மொத்த நீளம் சுமார் 6,000 கி.மீ. இதில் குஜராத் முதல் இடத்திலும் (1,214 கி.மீ.), தமிழகம் இரண்டாம் இடத்திலும் (1,076 கி.மீ.) உள்ளன.
  • இந்தியக் கடற்கரைகளின் தொன்மை குறித்த ஆய்வில் குஜராத்தைவிடத் தமிழகம் சில கூடுதல் தரவுகளைப் பெற்றுள்ளது. உதாரணமாக, ரூலெடட் வேர் (rulated ware) எனப்படுவது மண் பாண்டங்கள் ஆய்வுக்கான ஒரு தரவாகும். ஒரு வகையான பல்ச்சக்கரம் பயன்படுத்தி உருவான ரூலெடட் வட்ட வடிவமைப்பு என அறிஞர்கள் கூறினாலும், இவை சோழ மண்டலக் கடற்கரை எண்ணிக்கை அளவுக்குக் குஜராத்தில் கிடைக்கவில்லை.

அகழாய்வின் தேவை:

  • தமிழகத்தில் கடல் அகழாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. தேசியக் கடலியல் நிறுவனம் கூறும் தகவல்களின்படி, இதுவரை 15 இடங்களில் நீர் அகழாய்வு நடைபெற்றுள்ளது. இவற்றில் குஜராத்தில் மட்டும் எட்டு இடங்களிலும்; கோவா, தமிழகத்தில் தலா இரண்டும்; லட்சத்தீவு, மகராஷ்டிரம், ஒடிஷா ஆகியவற்றில் தலா ஒரு ஆய்வும் நடைபெற்றுள்ளன. குஜராத்தில் இந்த ஆய்வு 2001இல் தொடங்கி 2010 வரை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பூம்புகாரில் 1997இல் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது; அத்தோடு சரி, (அதற்குப் பின் ஒரே ஒரு ஆய்வு 2017இல் மாமல்லபுரத்தில் நடைபெற்றுள்ளது). குஜராத்தில் ரூ.63.2 லட்சமும் தமிழகத்தில் ரூ.54.74 லட்சமும் ஆய்வுப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளன.
  • உலகின் தொன்மையான கப்பல் கட்டும் பகுதி குஜராத்தில் சபர்மதி நதிக் கரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் கடல் வணிகத்தில், கடல் போர்களில் தமிழ்நாடு, அதிலும் குறிப்பாகச் சோழர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள் என்பது வரலாறு. அதற்கு ஏதுவான கப்பல் வடிவமைப்பு இங்கு இருந்ததாக மார்கோ போலோ உள்ளிட்ட பல ஐரோப்பியர்கள் புகழ்கின்றனர். நாவாய் என அழைக்கப்பட்ட இவற்றுக்குத் தமிழில் 23 பெயர்கள் உண்டு.
  • மத்திய அரசு புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. ‘தமிழ் மொழி இந்தியர்களின் மொழி, தமிழ் மொழி நம்முடைய மொழி, உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவருகிறார். சூடானில் நடந்த உள்நாட்டுப் போரில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு, ‘ஆபரேஷன் காவிரி’ எனப் பெயரிடப்பட்டது. வானொலியில் ஒலிபரப்பாகும் பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் பெயர் அடிக்கடி போற்றப்படுகிறது. மத்திய அரசின் சார்பில் உத்தரப் பிரதேசத்தில் ‘காசி தமிழ்ச் சங்க’மும் குஜராத்தில் தமிழகத்தை இணைத்து ‘சௌராஷ்டிரா சங்கம’மும் நடத்தப்பட்டன.
  • தமிழ் நிலத்தின் இதயத்தில் பதிந்த பெயர் கண்ணகி ஆகும். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் அமைக்கும் நிகழ்விலும் முத்துப் பரல்களா, மாணிக்கப் பரல்களா எனக் கண்ணகி கேட்டது நினைவூட்டப்பட்டது. தான் பிறந்த மண்ணுக்குக் கண்ணகி நீதி கேட்கிறார். தந்தை வழியில் தனயனாக மாநில அரசும் தமிழ் நிலத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசும் கடல் அகழாய்வை நடத்த வேண்டும். மனிதகுல நாகரிகத்தின் நெற்றியில் தமிழ் மண்ணின் பெருமையைத் திலகமாக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (22  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories