TNPSC Thervupettagam

செந்நாய்கள் அரிய வேட்டையாடிகள்

November 11 , 2023 380 days 299 0
  • வியூகம் அமைத்து ஒற்றுமையாக வேட்டையாடக் கூடியவை செந்நாய்கள். கடமான் போன்ற பெரிய உருவமுள்ள மான்களைச் செந்நாய்கள் கூட்டமாக வேட்டையாடுகின்றன. நான்கைந்து செந்நாய்கள் கொண்ட குழுவானது, ஒரு புலியைக்கூட சுற்றி வளைத்துவிடும். ஆனால் யானை, காட்டுமாடு, காண்டாமிருகம் போன்ற விலங்குகளைச் செந்நாய்கள் தவிர்த்துவிடுகின்றன. அதேபோல், மனிதர்களைக் கண்டால் செந்நாய்கள் ஒதுங்கிப் போய்விடும்.
  • வேட்டையின்போது தேவையானால் பிற செந்நாய் குழுவுக்குச் சீழ்க்கை அடித்து அழைப்புவிடுக்கும். இரை உயிரினம் உயிருடன் இருக்கும்போதே ஏறத்தாழ அதன் உடலில் பாதி சதையைச் செந்நாய்கள் தின்றுவிடுகின்றன. மீதியையும்தின்று முடித்துவிட்டே செல்லும். எஞ்சியுள்ள எலும்புகள் இரவில் நடமாடும் கழுதைப்புலிகளுக்கு உணவாகின்றன.
  • சிறுத்தைகள் செந்நாய்களிடமிருந்து தப்பிவிடுகின்றன. செந்நாய்கள் சிறுத்தைகளை வளைக்க ஆரம்பிக்கும் போதே துள்ளிக்குதித்து ஓடி, அருகி லிருக்கும் மரத்தின் மீது தாவி ஏறி உச்சிக்குச் சென்றுவிடுகின்றன. நாய்கள் சிறிது நேரம் மரத்தினருகில் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு சென்றுவிடும். ஆனால், புலிகளுக்கு மரம் ஏறத் தெரியாததால், அவை செந்நாய்க் கும்பலுக்கு இரையாகிவிடுகின்றன.

அடிப்படை விவரங்கள்

  • டோல் (Dhole) என்று வட மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் செந்நாய், காட்டுநாய், வேட்டைக்காரன் எனவும் இது அழைக்கப்படுகிறது. செந்நாய்கள் மயன்மார், இந்தோ-சீனப் பகுதிகள், மங்கோலியா, மலேசியா, தாய்லாந்து, ஆப்ரிக்கா, வியட்நாம், ஜாவா, சுமத்ரா தீவுகள், சைபீரியா, இந்தியாவின் பல மாநிலங்களில் பரவியுள்ளன. இவை பசுமைமாறாக் காடுகள், முள்புதர்க் காடுகள், மிதவெப்ப மண்டலத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டருக்கும் மேல் உயர்ந்த புல்வெளிகளிலும் வாழ்கின்றன.
  • சுமார் 12 முதல் 20 கிலோ எடை கொண்டவை. 90 செ.மீ. நீளமும் 50 செ.மீ. வரை உயரமும் இருக்கும். வால் சுமார் 4 செ.மீ முதல் 14 செ.மீ. நீளத்துடன் முடி அடர்ந்து காணப்படும். கழுத்தும் தாடைகளும் சதைப்பற்றுடன் இருக்கும். சிவப்பும் பழுப்பும் கலந்த ரோமங்களுடன் அடிவயிற்றில் வெண்மையாகவும் முதுகு, காதுகளின் நுனியில் கருமையாகவும் இருக்கும். வேகமாக ஓடி இரை விலங்குகளைச் சுற்றிவளைக்கும் வகையில் உடல் அமைந்திருக்கும்.
  • நாட்டு நாய்களை ஒத்திருந்தாலும் செந்நாய்களின் கால்களின் அடிப் பாகத்திலும் பாதத்துக்கு அருகிலும் முடி அடர்ந்து வளர்ந்திருக்கும். கூர்மையான பார்வையும் கேட்கும் திறனும் அதிக மோப்பசக்தியும் கொண்ட செந்நாய்கள், நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்தவை.

குட்டி பராமரிப்பு

  • கோடைக் காலத்தில் தண்ணீரைத் தேடிக் கும்பலாக அலையும். குளிர்காலத்தின் தொடக்கத்தில் இணைசேரும்‌. கர்ப்பக் காலம் சுமார் இரண்டு மாதங்கள். தரையில் உள்ள பள்ளத்திலோ பாறைகளின் இடுக்குகளிலோ குகைகளிலோ ஆறு முதல் பத்து குட்டிகளை ஈணும். பிறந்தபோது இருந்த எடையைப் போல் இரண்டு மடங்கு எடைக்கு, பிறந்த பத்தே நாள்களில் குட்டிகள் வளர்ந்துவிடும். குட்டிகளுக்கு மூன்று வாரங்களுக்குத் தாய்ப்பாலுடன், மாமிசத்தை தாய் மென்று ஊட்டும். தானாக உண்ணும் வரை அதன் தாயோ அக்குழுவில் உள்ள ஏனைய செந்நாய்களோ குட்டிகளுக்கு உணவளித்துப் பராமரிக்கும். குட்டிகளாக இருக்கும்போது ரத்தத்தைப் பார்த்தாலோ ரத்தவாடையை உணர்ந்தாலோ பச்சை மாமிசத்தைக் கண்டாலோ அவை மூர்க்கமாக நடந்துகொள்ளும்.
  • காட்டு விலங்குகளுக்குச் செந்நாய்கள் பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றன என்கிற காரணத்தால், 1965 கால கட்டத்தில், செந்நாய்களைக் கொல்ல வனத்துறையினர் ஊக்குவித்ததுடன் கொல்லப்பட்ட ஆண் செந்நாயின் தலைக்கும் தோலுக்கும் ரூ.10, பெட்டை செந்நாயின் தலைக்கும் தோலுக்கும் ரூ.15 சன்மானம் அளிக்கப்பட்டது. ஆனால், செந்நாய்கள் தற்போது பாதுகாப்பு அட்டவணைக்குள் வந்துவிட்டதால் அவற்றை வேட்டையாடவோ கொல்லவோ கூடாது. மேலும், செந்நாய்கள் காட்டின் எல்லையைத் தாண்டி கிராமப் பகுதிகளுக்கு வருவதும் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (11 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories