சென்னை அதிர்ச்சி சம்பவம்: பெண் காவலருக்கே பாதுகாப்பில்லையா?
- சென்னை காவல்துறை ஆணையரக அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், பணி முடிந்து தனது வீட்டுக்கு செல்ல பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றபோது, அவரது நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண் காவலருக்கே இந்த நிலைமையா? அப்படியென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை? என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்தது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், இச்சம்பவம் நகைபறிப்பு மட்டுமல்ல, பாலியல் பலாத்கார முயற்சி என்பதும் தெரிய வந்துள்ளது.
- பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் நடந்த விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இருட்டான பகுதியில் அவர் தனியாக நடந்து சென்றபோது, அங்கு மறைந்திருந்த நபர் இத்தகைய மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் காவலர் துணிச்சலாக கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்ததால் பொதுமக்கள் ஓடிவந்து குற்றவாளியைப் பிடித்து ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
- பெண் காவலர் என்ற பதவியில் இருப்பவர்கூட இரவில் தனியாக நடந்து செல்ல முடியவில்லை என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு காவல்துறை மீதான பயம் இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
- தமிழகம் முழுக்க உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளை பெண்களுக்கான பாதுகாப்பு கண்ணோட்டத்துடன் மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இச்சம்பவம் அமைந்துள்ளது. பழவந்தாங்கலில் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள பல ரயில் நிலையங்கள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், ரயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பாதைகள் புதர் மண்டி, இருட்டடைந்த நிலையில் இருக்கின்றன. பெண்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு இந்தப் பாதைகளின் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- இதுபோன்ற பகுதிகளை சமூகவிரோதிகள் அடையாளம் கண்டு வைத்துக் கொண்டு, பணி முடித்து தாமதமாக, தனியாக வரும் பெண்களை குறிவைத்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கும் நடக்காதவண்ணம் முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குவது அவசியம்.
- அதேநேரம், பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன்’ செயலியை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை சம்பந்தப்பட்ட பெண் காவலர் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளாரா? சம்பவம் நடந்தபோது அதைப் பயன்படுத்தினாரா? என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் காவலன் செயலியை பயன்படுத்த முடிகிறதா? என்பதும் சந்தேகத்துக்குரியதே.
- அப்படி இக்கட்டான நிலையில் உள்ள பெண்களுக்கு உதவும் நிலையில் செயலி இல்லை என்றால், அந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டதன் நோக்கமே பொருளற்றதாகி விடுகிறது. எனவே, செயலியின் பயன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பாதுகாப்பு அம்சங்களை புதிதாக உருவாக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)