TNPSC Thervupettagam

சென்னைக்குத் தேவை : புதிய வடிகால் திட்டம்

November 25 , 2021 975 days 508 0
  • கடந்த திங்கட்கிழமை (22.11.21) தலைநகரில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதல் சம்பவம்: தியாகராய நகரில் மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்தது.
  • ஜி.என்.செட்டி, பசுல்லா, பிரகாசம், உஸ்மான், பர்கிட் முதலான நகரின் புகழ்பெற்ற சாலைகளில் நாள் முழுதும் தண்ணீர் தேங்கி நின்றது. இயந்திரங்கள் நீரை இறைத்தன.
  • இரண்டாவது சம்பவம்: மாநகராட்சி, நகரின் பல மண்டலங்களின் மழைநீர் வடிகால் வரைபடங்களை இணையத்தில் ஏற்றிவைத்தது.
  • முதல் சம்பவம் கவலை அளிக்கிறது. இரண்டாவது சம்பவம் நம்பிக்கை அளிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.
  • சமீபத்தில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகர் சாலைகளின் மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டன. ஆனால், அவற்றில் நீர் வடியவில்லை.
  • சிலர் அவை குப்பைக்கூளங்களால் அடைபட்டுக் கிடக்கின்றன என்றார்கள். சிலர் அவற்றின் அகலமும் ஆழமும் வாட்டமும் போதுமானவையாக இல்லை என்றார்கள். சிலர் அவற்றின் தரம் தாழ்வானது என்றார்கள்.
  • இந்தக் காரணங்களை வல்லுநர்கள் ஆராய வேண்டும். இது தியாகராய நகருக்கு மட்டுமல்ல, சென்னை நகர் முழுமைக்கும் பொருந்தும்.
  • மாநகராட்சி இணையத்தில் வெளியிட்டிருக்கிற வடிகால் வரைபடங்கள் இந்த ஆய்வுக்கு உதவும்.
  • 2015 வெள்ளத்துக்கான காரணங்களாகப் பலரும் சொன்னதில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை விழுங்கி நிற்கும் ஆக்கிரமிப்புகளும், வடிகால்களைக் குப்பைக்கூளங்களால் அடைத்துவிடும் நகரவாசிகளின் பொறுப்பின்மையும் இடம்பெற்றன.
  • இந்த முறை மழைநீர் வடிகால்களின் போதாமையும் சேர்ந்துகொண்டது. இதற்குக் காரணம், இரண்டு வெள்ளங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கணிசமான பொருட்செலவில் உருவான வடிகால்களால் மழைநீரைக் கடத்த முடியவில்லை என்கிற கசப்பான உண்மை.
  • இந்தச் சூழலில்தான் மாநகராட்சி வடிகால் வரைபடங்களைப் பொது வெளியில் வைக்கிறது. நகரின் வடிகால்கள் குறைபாடு உடையவை என்பது தெரிந்தும் அரசு இதைச் செய்ய முன்வந்திருக்கிறது.
  • இது அரசின் வெளிப்படைத்தன்மையையும் வடிகால்களைச் சீரமைப்பதில் அதற்கு உள்ள அக்கறையையும் காட்டுகிறது.
  • இந்த வரைபடங்களைப் பார்வையிட்டபோது, பொதுவான சில குறைகள் கண்ணில்பட்டன. முதலாவதாக, 2,057 கிமீ நீளத்துக்கான மழைநீர் வடிகால்களைப் பராமரிப்பதாகச் சொல்கிறது மாநகராட்சி.
  • நகரில் சாலைகளின் நீளம் 5,750 கிமீ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதன்படி சுமார் 60% சாலைகளில் வடிகால்கள் இல்லை. ஆனால், இந்த வரைபடங்களைப் பார்த்தால் அந்த விகிதம் அதிகமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
  • மேலும், பல சாலைகளில் ஒரு புறம்தான் வடிகால் இருக்கிறது. அப்படியானால், நீர் வழிந்தோட ஏதுவாக இந்தச் சாலைகள் அனைத்தும் ஒரு புறம் உயரமாகவும் மறுபுறம் தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
  • அடுத்து, இந்த வடிகால்களின் இடையிடையே ஆள்-துளைகள் (manholes) இருக்கும். அடுத்தடுத்த ஆள்-துளைகளின் அடிமட்டம் கீழ் நோக்கிப் போக வேண்டும். அப்போதுதான் வெள்ளம் பாயும்.
  • ஆனால், கணிசமான இடங்களில் அப்படி இல்லை. எடுத்துக்காட்டாக, அபிராமபுரம் 3-ம் தெருவில் (மண்டலம் 9, வார்டு 123) ஆள்-துளை A17-லிருந்து A16-க்கு நீர் செல்ல வேண்டும்.
  • ஆனால் A16-ன் அடிமட்டம் A17-ஐவிட இரண்டடி மேலே இருக்கிறது. இதனால், வடிகாலுக்குள் நீர் தேங்கும். பெருமழையில் எதிர்த் திசையில் பாயும். இது பிழையான வடிவமைப்பு.
  • மூன்றாவதாக, வடிகால்களின் அகலமும் ஆழமும் அந்த வடிகால்களுக்கு வரக்கூடிய நீரின் அளவை வைத்துக் கணக்கிடப்பட வேண்டும். பிரதான வாய்க்காலை நோக்கிப் போகுந்தோறும் வடிகாலின் கொள்ளளவு கூடிக்கொண்டே போக வேண்டும்.
  • ஆனால், பல இடங்களில் அப்படி அமையவில்லை. எடுத்துக்காட்டாக, சைதாப்பேட்டை அப்துல் ரசாக் சாலையில் (மண்டலம்-10, வார்டு-142) அமைந்துள்ள ஆள்-துளைகள் A4, A3, A2 வழியாக நீர் A1-ல் சேர்ந்து அடையாற்றில் கலக்கிறது. ஆகவே ஆள்-துளைகள் A4, A3, A2-வைவிட A1-இன் கொள்ளளவு பெரியதாக இருக்க வேண்டும். ஆனால் ஆள்-துளை A2-இன் அகலம் 2', ஆழம் 2-1/4'. ஆனால் A1 அதைவிடச் சிறியது-அகலம் 2', ஆழம் 11".
  • நான்காவதாக, பல இடங்களில் வடிகால்கள் பிரதான வாய்க்காலோடு அல்லது ஆற்றோடு எப்படி இணைகின்றன என்பது தெரியவில்லை. வரைபடத்தில் அவை இடைநின்று போயுள்ளன.(எ-டு. மண்டலம் -5 ராயபுரம், வார்டு-52).

புதிய வடிகால் திட்டம் தேவை

  • பொதுவாக, வடிகால்கள் சாலையின் நடைபாதைகளுக்குக் கீழ் அமைக்கப்படுகின்றன. ஆதலால், இவற்றின் அகலத்தை நடைபாதையின் அகலம் தீர்மானிக்கிறது.
  • கடைசி ஆள்-துளை, அருகாமை வாய்க்காலோடு இணைக்கப்படுவதால், அதன் ஆழம் அதற்கு இசைவாகவும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆள்-துளைகளின் ஆழம் அதை அனுசரித்தும் நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். அதாவது, இந்த வடிகால்கள் மழை வரத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படவில்லை.
  • ஆக, வடிகால்கள் போதுமானவை அல்ல. அவற்றின் கொள்ளளவு குறைவானது. பல இடங்களில் வாட்டம் பிழையானது.
  • சென்னையில் அமைக்கப்பட்டிருப்பவை பாரம்பரியமான செவ்வக வடிவிலான வடிகால்கள், ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு இயங்குபவை (gravitational).
  • சென்னையின் நிலமட்டம் கடலின் நீர்மட்டத்தைவிட அதிக உயரத்தில் இல்லை. ஆகவே, வடிகாலின் அடிமட்டத்தைக் கடலின் நீர்மட்டத்துக்கு மேலே அமைத்துக்கொள்வதால், வடிகால்களுக்குப் போதிய ஆழம் கிடைப்பதில்லை.
  • ஆகவே, நவீன வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆழ்குழாய்கள், நீரேற்று இயந்திரங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற புதிய திட்டங்களை ஆலோசிக்க வேண்டும்.
  • வங்காள விரிகுடா அலைகள் மிகுந்தது. ஒரே நாளில் அலைகள் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். உயரமான அலைகளின்போது ஆற்று நீர் கடலில் கலப்பதில் தாமதம் ஏற்படும்.
  • நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அலைகள் பத்தடி வரைகூட உயரும். அப்போதெல்லாம் வெள்ளம் வடியாமல் ஆற்றிலும் கால்வாயிலும் சாலையிலும் தேங்கி நிற்கும். ஆகவே, கடைப் பகுதிகளில் சுரங்கங்களை அமைத்து வெள்ளத்தை நேரடியாக ஆழ்கடலில் கடத்திவிட முடியுமா என்று ஆலோசிக்கலாம்.
  • தமிழ்நாடு அரசு வடிகால் வரைபடங்களைப் பொது வெளியில் வைத்திருப்பது நல்ல முன்னெடுப்பு. அடுத்து, அரசு ஒரு புதிய வடிகால் நிறுவனத்தை அமைக்கலாம்.
  • இந்த நிறுவனம் துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளையும் பெறலாம். சென்னை நகரின் மழையளவு குறித்து விரிவாக ஆராய்ந்து நாம் கடத்த வேண்டிய மழை அளவைத் தீர்மானிக்க வேண்டும். இப்போதைய வடிகால்களின் கொள்ளளவு பரிசோதிக்கப்பட்டு, இயன்ற இடங்களில் அவை மேம்படுத்தப்பட வேண்டும்.
  • பல இடங்களில் புதிய வடிகால்களும் ஆழ்குழாய்களும் தேவைப்படலாம். சுரங்கப் பாதைகளையும் பரிசீலிக்கலாம். என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து, ஒவ்வொரு பணிக்குமான கால அளவையும் நிர்ணயித்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories