TNPSC Thervupettagam

சென்னையின் நவீன அடையாளங்கள்!

August 22 , 2024 144 days 119 0

சென்னையின் நவீன அடையாளங்கள்!

  • சென்னையின் அடையாளங்களாக மாறிவிட்ட சில முக்கிய இடங்களுக்கு ‘சென்னை நாள்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலா சென்றபோது...

கார்ல் ஷ்மித் நினைவகம், எலியட்ஸ் கடற்கரை:

  • கடற்கரை என்பது எல்லாருக்குமான இடம். ஆனால், கடற்கரைக்குச் செல்பவர்களின் எண்ண ஓட்டம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் அமைதியாக உட்காரலாம், சிலர் ஓடியாடி விளையாடலாம், சிலர் புத்தக வாசிப்பில் ஈடுபடலாம், சிலர் சுற்றத்தை ரசிக்கலாம்.
  • அதனால்தானோ என்னவோ அண்மைக் காலத்தில் கடற்கரைகளில் ‘ஓபன்’ நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுகின்றன. அதாவது கடற்கரையோரம் நடத்தப் படும் வாசிப்பு, ஓவியம், இசை - நாடக நிகழ்ச்சிகள் இதில் அடங்கும். இதில் ஈடுபடு பவர்கள் ‘ஓபன் கம்யூனிட்டி’ என்றழைக்கப்படுகிறார்கள்.
  • எலியட்ஸ் கடற்கரையில் இந்த ‘ஓபன்’ நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்றுவருகின்றன. வாரம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட நாள்களில் திட்டமிட்டுக் கூடுபவர்கள், குழுவாகச் சேர்ந்து புத்தகம் படிப்பது, உரையாடுவது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். பெசன்ட் கடற்கரையின் கார்ல் ஷ்மித் நினைவகத்தை அடையாளமாகக்கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பலரும் உற்சாகமாகப் பங்குகொள்கின்றனர்.
  • அதுமட்டுமன்றி, நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக அடையாறில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை 8 கி.மீ. தொலைவுக்கு சென்னை மாநகராட்சியால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு கிலோமீட்டர் இடைவெளியிலும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களும் சிலைகளும் இருக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
  • நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அவ்வப்போது இளைப்பாறவும், சில ‘செல்ஃபி’களை கிளிக்கிக்கொண்டும் நடையைத் தொடரலாம். ஒவ்வொரு கிலோமீட்டர் முடிவிலும் வைக்கப்படிருக்கும் எல்லைக்கோடு பதாகைகள் உங்களை மேலும் முன்னேறிச் செல்லத் தூண்டும்.

கோபுரப் பூங்கா, அண்ணா நகர்:

  • அண்ணா நகர் பூங்காவில் உள்ள 138 அடி உயர கோபுரம் 50 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக வீற்றிருக்கிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்துசெல்லும் அண்ணா நகர் பூங்கா, அந்தப் பகுதிவாசிகளுக்கு மட்டுமல்லாது அமைந்தகரை, ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம் போன்ற அண்டைப்பகுதிவாசிகளுக்கும் முக்கியமான பொழுதுபோக்கு இடம்.
  • நகரின் மையப் பகுதியில் 15.5 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்தப் பூங்காவில் கலையரங்கம், சிறுவர் விளையாட்டுப் பூங்கா, நடைப்பயிற்சி செய்வதற்கான பாதைகள் ஆகியவை அமைக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுவருகிறது. இது நல்ல பொழுதுபோக்கு இடம் என்பதைத் தாண்டி, ‘ஃபிட்னெஸ்’ ஆர்வலர்களின் மையமாக மாறிவருகிறது.
  • சூரிய உதயத்துக்கு முன்பும், சூரியன் மறைந்த பிறகும் சிறுவர் முதல் பெரியவர் வரை நடைப்பயிற்சி, ஓட்டம், உடற்பயிற்சி செய்வதைப் பார்க்க முடியும். தனியாகவும் கூட்டமாகவும் கோபுரப் பூங்காவின்கீழ் கூடும் மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கெனத் தங்களது நேரத்தை ஒதுக்கி, ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அதே நேரம், பூங்கா வாசலில் விற்பனையாகும் துரித உணவு வகைகளைப் பார்க்கும்போது மட்டும் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கத்திபாரா சதுக்கம், கிண்டி:

  • சென்னை கிண்டியில் உள்ள கத்திபாரா மேம்பாலம் ஆசியா வின் மிகப் பெரிய ‘க்ளோவர்’ வடிவ மேம்பாலம். அதைத் தற்போது தென்சென்னையின் அடையாளமாக மாற்றியிருக்கிறது மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் கத்திபாரா நகர்ப்புறச் சதுக்கம்.
  • முன்பெல்லாம் உணவகங்களில் வாரஇறுதி நாள்களில் கூடிய கூட்டம் இப்போது வார நாள்களிலும், இரவு நேரங்களிலும்கூட அலைமோதுகிறது. கத்திபாரா நகர்ப்புறச் சதுக்கம் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவகங்கள் உள்படப் பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நெரிசல் மிகுந்த ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, உள்வளைவு சாலைகளின் சந்திப்பாகத் திகழும் கத்திபாரா இனி வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஓ.எம்.ஆர். போன்ற புறநகர்ப் பகுதிகளின் சென்னைவாசிகளுக்குமான பொழுதுபோக்கு இடம். கத்திபாரா சதுக்கத்தில் இருந்து மெட்ரோ ரயில் ஓடுவது, பேருந்துகள் ஊர்ந்து செல்வது, மீனம்பாக்கத்தில் இருந்து விமானங்கள் பறப்பது என சென்னையின் போக்குவரத்துச் சிறப்புகளை ஒரே இடத்திலிருந்து கண்டு ரசிக்கலாம்!

மெரினா கடற்கரை:

  • எத்தனை முறை சென்றாலும் அலுக்காத இடங்களில் ஒன்று சென்னை மெரினா கடற்கரை. நாள்தோறும் சூரியன் எட்டிப்பார்க்கும் தருணம், மெரினாவில் கூடும் புறாக்கள் கூட்டமாகப் பறப்பதைக் காண்பதே பலருக்குப் புத்துணர்வைத் தரலாம். தொடர்பியல், காட்சித் தொடர்பியல் மாணவர்களுக்கு ஒளிப்படப் பயிற்சி மெரினாவிலிருந்தே தொடங்கும்.
  • பறக்கும் புறாக்களையும் சூரிய உதயத்தையும் ஒளிப்படம் எடுக்க, காணொளி எடுக்க ஏராளமானோர் மெரினாவில் கூடுவது வழக்கம். அண்மைக் காலமாக யூடியூபர்கள், ‘இன்ஃப்ளூயன்சர்’ ஆகியோரின் ‘ஸ்பாட்’டாகவும் மாறியுள்ளது மெரினா. ‘ஃபிட்னெஸ் விளாகர்’, ‘டிராவல் விளாகர்’, ‘ஃபுட் விளாகர்’ என மொத்த இணையச் சமூகமும் சங்கமிக்கும் இடமாக இருக்கும் மெரினாவுக்கு அதன் அலைகளைப் போல ஓய்வே இருப்பதில்லை!!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories