சென்னையில் மினி பஸ் சேவை: நடைமுறை சார்ந்த நடவடிக்கை!
- சென்னை புறநகர்ப் பகுதிகளில் மினி பஸ் (சிற்றுந்து) சேவையில் தனியாரை ஈடுபடுத்த முடிவெடுத்திருக்கும் தமிழக அரசு, ‘பசுமை வாகனம்’ எனப்படும் மின்வாகனச் சேவையைத் தனியாருக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறது. சென்னை புறநகரின் உள்பகுதிகளில் மக்களுக்குப் பேருந்து சேவையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அரசின் இந்த முடிவை நடைமுறை சார்ந்து அணுக வேண்டும்.
- பிற மாவட்டங்களில் தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டபோதும், சென்னையில் வருவாயைக் கருத்தில்கொண்டு தனியாருக்கு அரசு அனுமதி அளிக்காமலிருந்தது. 2013இல் அதிமுக ஆட்சியின்போது, சென்னையில் முதல் முறையாக மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- உள்ளடங்கிய பகுதிகளை நகரத்துடனும் புறநகரின் முக்கியச் சாலைகளுடனும் இணைக்கும் நோக்கில் இந்த மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மக்களிடையே இவற்றுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இவற்றின் எண்ணிக்கையும் வழித்தடங்களும் அதிகரிக்கப்பட்டன.
- மேலும், மெட்ரோ ரயிலுடன் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் நோக்குடன் சில மினி பஸ்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள்வரை இயக்கப்படுகின்றன. மக்களின் தேவை கருதி இவற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அரசு சார்பில் ஏற்கெனவே மினி பஸ்கள் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி, திருவொற்றியூர், மாதவரம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் மினி பஸ்களை இயக்க, தனியாருக்கு அனுமதியளிக்கும் முடிவைத் தமிழக அரசு எடுத்திருக்கிறது.
- இதேபோல மத்திய அரசின் நிதிப் பங்கீட்டுடன் பசுமைப் பேருந்துகள் எனப்படும் மின்வாகனங்களை இயக்கும் திட்டத்தையும் தனியாருக்கு வழங்க தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. சென்னையில் மினி பஸ் சேவையைத் தனியாருக்கு ஒப்படைப்பதைப் போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் சில அரசியல் கட்சிகளும் எதிர்த்துள்ளன. ஏற்கெனவே, 1997இல் சென்னைக்கு வெளியே தமிழகத்தில் மினி பஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- அந்த வகையில் சென்னையிலும் தனியாருக்கு அனுமதி அளிக்கும் அரசின் முடிவைக் குறை சொல்ல முடியாது. மேலும், மக்களின் அடிப்படைத் தேவையான கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் தனியார் அனுமதிக்கப்படும் நிலையில், போக்குவரத்துத் துறையில் மட்டும் தனியாரை ஒதுக்கிவைப்பதில் முகாந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை.
- மினி பஸ் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், டிக்கெட் கட்டண நிர்ணயம் அரசின் வசமே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அதேநேரத்தில், சென்னைப் பெருநகர போக்குவரத்துக் கழக சேவை உள்ள பகுதிகளில் மினி பஸ் சேவையை அனுமதிக்காமல் இருப்பதில் அரசு உறுதியுடன் இருக்க வேண்டும்.
- மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகம் வாயிலாகப் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம், மாற்றுத்திறனாளிகளுக்கும் மூத்த குடிமக்களுக்கும் கட்டணச் சலுகை போன்ற மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
- பேருந்து சேவை இல்லாத புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்கள் தனியார் மினி பஸ்களைப் பயன்படுத்தும்போது, அவர்களுக்குச் சலுகைகள் வழங்குவது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும். அப்போதுதான் இப்படியான முடிவுகள் வெறுமனே வணிக நோக்கம் கொண்டவை என்று கருதப்படுவதைத் தவிர்க்க முடியும். மக்களுக்கான சேவையையும் தொய்வின்றித் தொடர முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 02 – 2025)