TNPSC Thervupettagam

சென்னையில் வெள்ளத்தைத் தவிர்க்க ஒரு செயல்திட்டம்

November 18 , 2021 982 days 596 0
  • கடந்த சனிக்கிழமை (13.11.21) ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்த தலைப்புச் செய்தி இது: "மழை விட்டுவிட்டது; வெள்ளம் வடியவில்லை." எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது - 'மழை விட்டும் தூவானம் விடவில்லை'. தூவானம் என்கிற சொல்லே, பூமாரியின் சிலிர்ப்பைக் கொண்டு வரும்.
  • அந்தப் பழமொழியில் இயங்குவது ஒரு தமிழ்க் கவிதை மனம். 'நீரின்றி அமையாது உலகு' என்பது தமிழ்ச் சமூகத்திற்குத் தெரியும். ஆகவேதான் அது மாமழையைப் போற்றியது.
  • வண்ணநிலவன் ஒரு கதையில் இப்படி எழுதுகிறார்: "கோமதி மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழைக்குள் பேச எதுவுமே இல்லை. யாரும் மழை பெய்கிறபோது பேசுகிறதே இல்லை."
  • ஏனெனில் மழை பேசுகிறது. அது கோமதிக்குக் கேட்கிறது. சென்னைவாசிகளிடமும் மழை பேசியது. அவர்கள் கேட்டார்கள். முன்னொரு காலத்தில் அது அவர்களுக்குச் சங்கீதமாக இருந்தது. ஆனால் இடையில் எப்போதே அது அவர்களுக்கு இரைச்சலாக மாறிவிட்டது.
  • இப்போது தொலைக்காட்சிச் செய்தியாளர் முழங்கால் தண்ணீரில் நின்றபடி சொல்லிக் கொண்டிருக்கிறார்:  "நல்ல காலம். மழை நின்றுவிட்டது." மழை பெய்தால் நல்ல காலம் என்பது போய், இப்போது மழை நின்றால் நல்ல காலம் என்றாகிவிட்டது. மழை ஏன் சென்னைக்கு வேண்டாத விருந்தாளி ஆனது?
  • நவம்பர் 7 முதல் 12 வரை ஆறு நாட்களில் சென்னை நகரில் பெய்த மழை 46 சென்டி மீட்டர் (செமீ). இதே காலகட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளின் சராசரிப் பொழிவு 8 செமீதான்.
  • ஆகவே சராசரிப் பொழிவைவிட  ஐந்து மடங்கிற்கும் அதிகமான மழை என்று சொல்லியிருக்கிறது வானிலை மையம். ஆனால் இதே நவம்பர் மாதத்தில் 1976ம் ஆண்டு நுங்கம்பாக்கம் மழைமானி பதிவு செய்த மழையளவு 46 செமீ. 
  • இதே மழைமானி 1984, 1985 ஆண்டுகளில் முறையே 25 செமீ, 30 செமீ மழையைப் பதிவு செய்தது. 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி ஒரே நாளில் பெய்த மழை - 49 செமீ. ஆகவே புள்ளி விவரங்களை நமக்குச் சாதகமாக வளைத்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதால் யாதொரு பயனுமில்லை.
  • இது வழக்கத்தைவிட அதிகமான மழைதான்; ஆனால் பெருமழையன்று. எனினும் இதை நேரிடுகிற உள்கட்டமைப்பு நம்மிடம் இல்லை. நாம் பிரச்சனைக்கு நேரடியாக முகம் கொடுப்போம். என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கான பதிலை நான்கு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1. ஆக்கிரமிப்பு அகற்றல்

  • சமூக ஊடகங்களில் பலரும் முன் வைக்கிற குற்றச்சாட்டு நீர்பிடிப்புப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள்.
  • இந்தக் குற்றச்சாட்டு சரியானது. ஆனால் இந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 25-30 ஆண்டுகளில் நிகழ்ந்தவை என்று சிலர் நேரடியாகவும், சிலர் அந்தக் கண்ணோட்டத்திலும் சொல்லி வருகிறார்கள். இது சரிதானா?
  • 1909ஆம் வருடத்திய சென்னை வரைபடத்தில் ஒரு பெரும் ஏரி காணப்படுகிறது. அது 'Long Tank' என்று குறிக்கப்பட்டு இருக்கிறது.
  • இப்போது அந்த இடம் தியாகராய நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் முதலிய பகுதிகளின் நீட்சியாக மாறிவிட்டது. மாம்பலம் ஏரியின் நினைவாக அதன் வரத்துக் கால்வாயான மாம்பலம் கால்வாய் எஞ்சி நிற்கிறது.காட்டேரியை அடையாறு நகர்ப்பகுதி செரித்துவிட்டது. கொன்னூர் ஏரியை வில்லிவாக்கம் விழுங்கிவிட்டது.
  • வடசென்னையில் வியாசர்பாடி, கொடுங்கையூர் ஏரிகளும் நிலப்பகுதிகளின் நீட்சியாகிவிட்டன. சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட படம் வேளச்சேரி. அந்த ஏரி படிப்படியாயாகச் சுருங்கி வருவதை ஒரு சித்திரக் கதை போல் அவை விவரித்தன.
  • அனைத்து ஏரி - குளங்களும் ஆற்றுப் படுகைகளும் வாய்க்கால்களும் வருவாய்த்துறை ஆவணங்களில், அரசுப் புறம்போக்கு நிலங்கள் என்பதாகத்தான் குறிக்கப்பட்டிருக்கும்.
  • ஆனால் அவை எப்படியோ பட்டா நிலங்களாக மாறி தனியார்களின் கைகளுக்குப் போயிருக்கின்றன. பல அரசுக் கட்டிடங்களும் உருவாகியிருக்கின்றன.
  • இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுவது நடைமுறை சாத்தியமில்லை. ஆனால் நடப்பு ஆவணங்களின்படி, எங்கெல்லாம் நீர் பிடிப்புப் பகுதிகளும் அருகாமைக் கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றனவோ, எவையெல்லாம் சட்டவிரோதமோ, அவையெல்லாம் நிர்தாட்சண்யமாகக் கையகப்படுத்தப்பட வேண்டும்.

2. தூர் வாருதல், ஆழப்படுத்தல்

  • அடுத்து, சென்னையின் சிறப்பம்சம் மூன்று நதிகள். கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு ஆகிய நதிகள் கிழக்கு நோக்கிப் பாய்ந்து முறையே எண்ணூர், நேப்பியர் பூங்கா, அடையாறு முகத்துவாரம் ஆகிய இடங்களில் கடலில் கலக்கின்றன.
  • இதைத் தவிர ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பக்கிங்ஹாம் கால்வாய், இந்த நதிகளுக்குச் செங்குத்தாக, வடக்கே பழவேற்காடிலிருந்து தெற்கே முட்டுக்காடில் வந்து கலக்கிறது.
  • சென்னையின் பெரிய ஏரிகள் நான்கு- செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், செங்குன்றம். நகரையும் நகரைச் சுற்றிலுமுள்ள பிற ஏரி - குளங்களின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் மேல்.
  • இந்த ஆறுகளுக்கும் ஏரி - குளங்களுக்கும் உள்ள வரத்து வாய்க்கால்கள் பல. இவை எல்லாவற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஒரு கட்டம் என்றால், இவை எல்லாவற்றையும் தூர் வாரவும் ஆழப்படுத்தவும் வேண்டும், அது இன்னொரு கட்டமாக இருக்கும்.

3. வடிகால் வடிவமைத்தல்

  • அடுத்த கட்டம், மழை நீர் வடிகால்களை வடிவமைப்பது. இப்போது சென்னையின் சாலைகளின் நீளம் சுமார் 6000 கிலோமீட்டர் என்றும் அதில் சரி பாதி நீளத்திற்குக்கூட  வடிகால்கள் இல்லையென்றும் சொல்கிறது ஒரு புள்ளி விவரம். வடிகால்கள் தொடர்ந்து நகருக்குள் அமைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால்  அவற்றில்  பிரச்சனை இருக்கிறது. மூன்று செய்திகளைப் பார்ப்போம்.
  • இப்போது கொசஸ்தலையாறு பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியோடு வடிகால் அமைத்து வருகிறார்கள்.  திட்ட மதிப்பு: ரூ.1866 கோடி.
  • 2018-ல் சென்னைப் பெருநகர வளர்ச்சி நிதியில் மடிப்பாக்கம், திருவான்மியூர், கோடம்பாக்கம் முதலான பகுதிகளில் வடிகால்கள் அமைக்கப்பட்டன. இந்தப் பணிகள் 78 சிறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டன.
  • அப்படியான தொகுதி ஒன்றை மேற்பார்த்த ஒரு பொறியாளரை நாளிதழ் ஒன்று நேர் கண்டிருந்தது. அவர் ஒரு வார்டுக்குப் பொறுப்பானவர். அவர் சொல்லியிருந்தார்: 'எங்களுக்கு வடிகால்களின் அகலமும் ஆழமும் தரப்பட்டது.
  • ஆனால் அதன் வாட்டம், அதை எந்த வாய்க்காலில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் போன்ற விவரங்கள் தரப்படவில்லை. எங்களுக்குத் தெரிந்த மாதிரி பணிகளைச் செய்து முடித்தோம்'. மதிப்பீடு: ரூ.440 கோடி.
  • 2019-2021 காலகட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியராய நகரில் வடிகால்கள் அமைக்கப்பட்டன, மாம்பலம் கால்வாய் புனரமைக்கப்பட்டது. மதிப்பீடு: ரூ.200 கோடி.
  • இந்த மூன்று செய்திகள் சுட்டுவதென்ன? நகரில் வெவ்வேறு பகுதிகளுக்கான வடிகால்கள் தனித்தனியாக அமைக்கப்படுகின்றன. அவை பிரதான வாய்க்காலோடும் நதியோடும் இணைக்கப்படுவதில்லை. 
  • நகரத்திடம் ஒட்டு மொத்தமான ஒரு வடிகால் திட்டம் இல்லை. வளர்ந்த நகரங்கள் வடிகால் வடிவமைப்பை எங்ஙனம் எதிர்கொள்கின்றன? எனக்குத் தெரிந்த ஹாங்காங் உதாரணம் சொல்கிறேன்.
  • அடுத்தடுத்து வந்த வெள்ளப் பிரச்சினைகளைத் தொடர்ந்து எண்பதுகளில் ஹாங்காங்கின் மழைநீருக்கும் கழிவுநீருக்குமான பிரதானத் திட்டம் வகுக்கப்பட்டது. 1989-ல் இதற்கான தனித்துறை ஏற்படுத்தப்பட்டது.
  • அப்போதிருந்த சாலை வடிகால்களின் கொள்ளளவு பரிசோதிக்கப்பட்டு, அவை ஐம்பதாண்டு-வெள்ளத்தைக் கடத்தி விடும்படியாக மேம்படுத்தப்பட்டது. நகரம் வெகுவாக விரிவாகிவிட்ட பகுதிகளில் அப்படி மேம்படுத்துவதில் சிரமம் இருந்தது. அவ்வாறான பகுதிகளில் சில நவீன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
  • ஹாங்காங்கில் மலைப்பாங்கான பகுதிகளும் சரிவுகளும் அதிகம். இவற்றில் பெய்கிற மழை தாழ்வான சாலைகளுக்கு விரைவாக வந்துவிடும். அவை நகரின் பிரதான சாலைகளாகவும் அமைந்துவிடும்போது பெரிய அளவிலான மேம்பாட்டுப் பணிகள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்று கருதப்பட்டது.
  • அதனால், இப்படியான சாலைகளை வந்தடைவதற்கு முன்னரே மழைநீர் 43 இடங்களில் மறிக்கப்பட்டு (intercept), அவை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப் பாதைக்குள் கடத்தி விடப்பட்டது. இந்தச் சுரங்கங்கள் நீரை நேராகத் தென்சீனக் கடலில் கொண்டுபோய்க் கொட்டிவிடும்.
  • லை-சீ-காக், சுன்-வான், நகர் மேற்கு ஆகிய மூன்று பகுதிகளில் சுமார் 20 கிலோமீட்டர் நீளத்தில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. இவை மெட்ரோ ரயில் சுரங்கங்களைப் போன்றவை. சாலைப் போக்குவரத்தைப் பாதிக்காமல் நிலத்தடியில் தோண்டப்பட்டன.
  • ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு வருவோம். சாலையோரத்தில் ப-வடிவில் வடிகால்களைக் கட்டுவது ஒரு மரபான திட்டம். நாம் அதை மட்டுமே கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வளர்ந்த நகரங்களில் வடிகால்கள் அமைக்கும்போது மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.
  • ஹாங்காங் அதைத்தான் செய்தது. மரபான வடிவமைப்பு செல்லுபடியாகிற இடங்களில் அதைச் செலுத்தலாம். மற்ற இடங்களில் நிலத்திற்கு அடியிலோ வேறு வழிகளிலோ மழைநீரைக் கடத்த முடியுமா என்று பார்க்க வேண்டும்.
  • ஹாங்காங்-மாதிரி நமக்கு ஒத்துவராமல் போகலாம். வல்லுநர்களின் துணையோடு நாம் நமது நகரத்திற்கான மாதிரியைக் கண்டறிய வேண்டும்.
  • அடுத்து, நகரத்தின் சாலை வடிகால்கள் எந்த அளவிற்கான மழையைக் கடத்த வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கேற்ற வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • அந்த அளவைக் காட்டிலும் கூடுதல் மழை பெய்தால் அவை சாலையில் தேங்கும். குற்றமில்லை. ஆனால் சில மணி நேரங்களில் அவை வடிகால் வழியோடி, அளவில் பெரிய பிரதான வாய்க்காலிலும் பின்னர் ஆற்றிலும் சேர்ந்துவிட வேண்டும். அப்படியான வடிகால் வலைப்பின்னல்  வடிவமைக்கப்பட வேண்டும்.

4. பொறுப்பு ஓரிடம்

  • ஹாங்காங்கில் 1989-ல் அமைக்கப்பட்ட வடிகால் சேவைத் துறைதான் (Drainage Services Department) நகரின் அனைத்து வடிகால் வடிவமைப்புப் பணிகளுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும் பொறுப்பு வகிக்கிறது.
  • அது மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலளிக்கவும் கடமைப்பட்டது. வெளிநாட்டார் பயன்படுத்துவது திறமான நடைமுறையெனில் அதை நாம் பரிசீலிக்கலாம்.
  • இப்போது மழைநீர் வடிகால் தொடர்பான பணிகள் சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் வழங்கல்-கழிவுநீரகற்றல் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, வீட்டு வசதித் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் போன்ற பல அமைப்புகளிடம் பிரிந்து கிடக்கின்றன.
  • நகரம் முழுமைக்குமான மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ஒரு புதிய வாரியத்தை ஏற்படுத்தலாம்.
  • பல்லாண்டுகளாக நாம்  நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், நீர்வழிப் பாதைகளையும் மழைநீர் வடிகால்களையும் அலட்சியம் செய்து விட்டோம். பரவாயில்லை. இனியாவது தவறைத் திருத்துவோம்.
  • நீர்வழிப்பாதையில் சட்டத்திற்குப் புறம்பான ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளை தூர் வாரி ஆழப்படுத்துவது, ஒட்டு மொத்த நகருக்குமான நவீன வடிகால் வடிவமைப்பு ஒன்றை உருவாக்குவது, அனைத்து வடிகால் பணிகளுக்கும் பொறுப்பான அமைப்பின் மூலம் அதை நிறைவேற்றுவது ஆகிய நான்கு கட்டங்களைப் பரிசீலிப்பது பலன் தரும்.
  • சென்னை, தமிழகத்தின் நுழைவாயில்; முகவரி; எம் முன்னோர் சிறுகச் சிறுக வளர்த்த பயிர். அது கருகத் திருவுளமோ? மழையிடம் அதைத் தோற்போமோ?

நன்றி: அருஞ்சொல் (18 - 11 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories