செயற்கை நுண்ணறிவின் ரகசியக் கதை
- இரண்டாம் உலகப் போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரம். ஜெர்மானியர்களின் இடைவிடாத தாக்குதல்களால் பிரிட்டனும் அதன் தலைநகர் லண்டனும் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில், எங்கள் மெய்நிகர் கால இயந்திரம் அந்நகரைக் கடந்து அதன் அருகில் உள்ள பக்கிங்ஹாமுக்குச் சென்றது.
- அந்த நகரத்தில் உள்ள பிளெட்ச்லீ பார்க் என்ற பழம்பெருமை மிக்க கட்டிடத்தின் முன்பு நாங்கள் இறங்கினோம். போரின் தலைவிதியை மாற்றிய அந்தக் கட்டிடத்தில், விஞ்ஞானிகள் ரகசியமான பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அங்கே ஒரு முக்கியப் புள்ளியைச் சந்திக்க வந்திருக்கிறோம்.
- இப்படியொரு கொடூரமான போர் நடைபெறும் நேரத்தில் நாங்கள் ஏன் அங்கே போக வேண்டும்? தொழில்நுட்ப வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் உண்மை உண்டு - பெரும்பாலான தொழில்நுட்பங்கள் போர்த் தேவைகளுக்காகத்தான் உருவாக்கப்பட்டன; ஏஐ-யும் அப்படித்தான்!
ரகசியத் தகவல்கள்:
- நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த விஷயத்திலிருந்து தொடங்குவோம்: ராணுவத் தலைமையகத்திலிருந்து அதன் படைப் பிரிவினருக்கு ரகசியத் தகவலை அனுப்ப வேண்டும்என்றால் என்ன செய்வார்கள்? அதை ஒரு ரகசியக் குறியீடாக மாற்றி அனுப்புவார்கள். அந்தத் தகவலைப் பெறும் படைப் பிரிவினர், அவர்களிடம் இருக்கும் ஒரு விடுவிப்பி (key) மூலம் அந்தத் தகவலை உடைத்துப் புரிந்துகொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ‘கிழக்குப் பக்கம் சென்று குண்டுபோடவும்’ என்று ஓர் உத்தரவு வருகிறதென்றால், அது, 9384e 8n 43o4 என்பதுபோல ரகசியத் தகவலாக மாற்றி அனுப்பப்படும்.
- அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கான விடுவிப்பி, தகவலைப் பெறும் படைப் பிரிவில் உள்ள ஓர் அதிகாரியிடம் இருக்கும். அந்தத் தகவலை எதிரிகள் இடைமறித்துப் பார்த்தாலும், அவர்களுக்கு அது விளங்காது. ஏனென்றால், விடுவிப்பி அவர்களிடம் இருக்காது. காலங்காலமாக ராணுவங்களில் பயன்படுத்தப்படும் இந்த வகைத் தகவல் தொடர்புக்கு ‘மறைத்தெழுதுதல்’ (Cryptography) என்று பெயர்.
- தொடக்கக் காலத்தில் எழுத்துகளைக் குறிப்பிட்ட முறையில் இடம் மாற்றியும் அல்லது எழுதப்படும் ஊடகத்தில் சில மாற்றங்கள் செய்தும் தகவல்கள் அனுப்பப்பட்டன. காலப்போக்கில் கணித சூத்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இப்படி, ஒரு தகவலை ரகசியக் குறியீடாக மாற்றுவதை மறையேற்றம் (encryption) என்றும், அதை உடைத்துத் தெரிந்துகொள்வதை மறைநீக்கம் (decryption) என்றும் கூறுவார்கள்.
சுதாரித்துக் கொண்ட ஹிட்லர்:
- முதல் உலகப் போரில் அடிவாங்கித் தோற்றுப்போன ஜெர்மனியில், பிறகு புதிதாக ஆட்சிக்கு வந்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரைத் தொடங்குவதற்கு முன்பு, தங்கள் நாட்டின் தோல்விகளுக்குக் காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்தார். அதில் ஜெர்மனியின் ராணுவ ரகசியங்கள் எதிரிகளால் எப்படியோ அறிந்துகொள்ளும் வகையில் மோசமான மறைத்தெழுதுதல் நுட்பங்களால் உருவாக்கப்படுகின்றன என்று தெரியவந்தது.
- நீங்கள் எவ்வளவு வலுவான கடற்படையை வைத்திருந்தால்கூட என்ன, உங்கள் வருகையை எதிரிகள் முன்பே அறிந்துகொண்டுவிட்டால், உங்கள் கப்பல் ஒரு காகிதக் கப்பல்தான்!1920களிலேயே எனிக்மா என்கிற மறைத்தெழுதுதல் இயந்திரத்தை ஜெர்மனி பயன்படுத்திவந்தது. அது எதிரிகளுக்குத் தண்ணிகாட்டியது என்றாலும், பல வேளைகளில் எதிரிகள் அதன் தகவல்களை உடைத்துத் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. ஆக, எனிக்மாவைப் பலப்படுத்த வேண்டும்.
எனிக்மா எப்படி இயங்கியது?
- எனிக்மா பார்ப்பதற்குத் தட்டச்சு இயந்திரம் போலக் காணப்பட்டது. அந்த மின்-இயந்திரவியல் கருவியில் விசைப்பலகை இருந்தது. அதற்கருகில் தட்டச்சு செய்யும்போது எழுத்துகள் ஒளிரும் விதமாக விளக்குப்பலகையும் இருந்தது. இந்த இரண்டுக்கும் இடையில் மூன்று சுழல் சக்கரங்கள் அடுத்தடுத்து இணைக்கப்பட்டிருந்தன.
- அத்துடன் ஒரு ரிப்ளக்டர் இணைந்திருந்தது. சுழல்சக்கரங்களில் 26 எழுத்துகள் தனித்தனி மின் இணைப்புகளாக இருந்தன. ஒரு எண்ணுக்கு ஒரு எழுத்து. ஒவ்வொரு நாளும் இந்தச் சுழல்சக்கரங்கள் தொடர்புகொள்ளும் முதல் எழுத்து எது என்பது மாற்றி மாற்றி அமைக்கப்பட்டது. பிளக்போர்டு ஒன்று இவற்றோடு இணைக்கப்பட்டிருந்தது.
- இப்போது நீங்கள் N என்ற எழுத்தை விசைப்பலகையில் அழுத்தினால், ஒரு மின்சமிக்ஞை முதல் சுழல் சக்கரத்துக்குச் சென்று, அதில் I என்ற எழுத்தைத் தொடர்பு கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். பிறகு, அது இரண்டாம் சுழல் சக்கரத்தில் S என்கிற எழுத்துடனும் மூன்றாம் சுழல் சக்கரத்தில் G என்ற எழுத்துடனும் தொடர்பு கொள்கிறது. இந்தச் சுழல் சக்கரங்கள் சுழலும் வேகமும் படிப்படியாகக் குறையும். பிறகு, அந்த மின்தொடர்புகள் ரிப்ளக்டர் மூலம் எதிர்த்திசையிலும் செல்கின்றன.
- இப்போது L, B, O ஆகிய எழுத்துகளாக அவை உருமாறுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அவை அடுத்துச் செல்லும் பிளக்போர்டில் மீண்டும் மாறி, கடைசியில் மின்தொடர்புள்ள அந்த விளக்குப் பலகையில், P என்ற எழுத்தை ஒளிரவைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இறுதியில் தோன்றும் எழுத்துதான் மறையேற்ற வடிவம். அதாவது, மேற்சொன்ன எடுத்துக்காட்டில், N என்ற சொல்லின் மறையேற்ற வடிவம் P ஆகும், இப்படியே N,O,R,T,H என்கிற எழுத்துகள் P,H,I,L,S என்று உருமாறுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
எதிரிகள் இதை இடைமறித்தால் என்ன ஆகும்?
- எவ்வளவு மண்டையை உடைத்துக்கொண்டாலும், PHILS-இலிருந்து NORTH-ஐ அவர்களால் மீட்டெடுக்க முடியாது. சில வேளை சுழல் சக்கரங்களின் எண்ணிக்கையை எட்டு வரைகூட நாஸிக்கள் கூட்டிக்கொண்டார்கள். சுழல் சக்கரங்கள், பிளக்போர்டு என இரண்டின் தொடக்க மதிப்புகள் தகவல் அனுப்பும் இடத்திலும் பெறும் இடத்திலும் மட்டும் முன்கூட்டியே தெரிந்திருக்கும்.
- அதற்கு கோடுபுக் (Codebook) ஒன்று பயன்படுத்தப்பட்டது. கோடுபுக் இல்லாமல் அந்தத் தகவலை உடைக்க முடியாது. உளவுப் பிரிவின் ஜாம்பவான்களால்கூட எனிக்மா தகவல்களை விடுவிக்க முடியவில்லை. இந்தப் புதிரை விடுவிக்கும் வல்லமை வாய்ந்த இயந்திரம் ஒன்றை உருவாக்கக்கூடிய விஞ்ஞானியைப் பிரிட்டனே தேடிக்கொண்டிருந்தது. அவரும் கிடைத்தார்.
ஆலன் டூரிங்!
- பிரிட்டனின் இளம் கணிதமேதை ஆலன் டூரிங், பிளெட்ச்லீ பார்க்குக்கு வந்தார். ராணுவத் தகவல்களின் ரகசிய உடைப்பு வேலைகள் அங்கேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழுவில் ஆலன் இணைந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. அங்கே அவர் உருவாக்கிய இயந்திரம், நாஸிக்களிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றியதோடு, செயற்கை நுண்ணறிவுக்கான அடித்தளத்தையும் அமைத்தது. அவரைப் பார்க்கத்தான் நாங்களும் அங்கே சென்றிருக்கிறோம். இதோ சில நொடிகளில் அவரோடு உரையாடவும் போகிறோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 12 – 2024)