TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு: நெருக்கடியா, நல்வாய்ப்பா?

February 20 , 2025 2 days 22 0

செயற்கை நுண்ணறிவு: நெருக்கடியா, நல்வாய்ப்பா?

  • புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் வேலையிழப்பு உண்டாகுமா? மனித உழைப்புக்கு நிகரான ஒன்றைத் தொழில்நுட்பம் மூலம் முழுமையாகச் சாத்தியப்படுத்திட முடியுமா? உழைப்புச் சக்தியின் முக்கியத்துவத்தைத் தொழில்நுட்பம் தகர்த்துவிடுமா? இதுபோன்ற கேள்விகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் எழுச்சி தற்போது எழுப்பிவருகிறது.

சர்​வ​தேசத் தாக்கம்:

  • செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டு​வரும் அதிவேக வளர்ச்சி, உலக அளவில் பிரம்​மாண்டமான அளவில் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில், இதர சேவைத் துறைகளில் இன்று மனிதர்​களால் மட்டுமே மேற்கொள்​ளப்​பட்டு​வரும் பெரும்​பாலான காரியங்​களைக் கச்சித​மாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட இயந்திரங்கள் (Intelligent Machines) இன்னும் சில ஆண்டு​களில் தயாரிக்​கப்​பட்டு​விடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
  • 2025இன் இறுதி​வாக்கில் ‘AI Workers’ என்னும் புதிய வகை இயந்திரங்கள் செயல்​பாட்டுக்கு வந்து​விடும் என்று ‘ஓபன் ஏ.ஐ.’ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்​துள்ளது. இந்தப் புதிய வகை இயந்திரங்கள், சிக்கல் நிறைந்த இலக்கு​களைக்​கூடப் புரிந்​து​கொண்டு, தரவுகள் - சூழலின் அடிப்​படையில் தாமே (மனிதர்​களின் தலையீடின்றி அல்லது குறைந்​தபட்ச மேற்பார்​வை​யுடன்) முடிவுகளை மேற்கொண்டு செயல்​படும் ஆற்றல் கொண்ட​வையாக இருக்​கும்.
  • தொழில்​நுட்ப வளர்ச்​சியின் பெரும் பாய்ச்சல் உலகப் பொருளா​தா​ரத்தில் அதிர்​வலைகளை ஏற்படுத்​திவரு​கிறது. 2021 - 2022ஆம் ஆண்டு நிலவரப்படி செயற்கை நுண்ணறிவு தொடர்​பாகக் கோரப்​பட்​டுள்ள காப்பு​ரிமை​களின் (Patents) எண்ணிக்கை சர்வதேச அளவில் ஏறத்தாழ 62,000. இனிவரும் காலத்​தில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான காப்பு​ரிமைக் கோரிக்கைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
  • 2022இல் ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ (Generative AI) துறையில் 3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த உலகத் தனியார் முதலீடு (Global Private Investment) 2023இன் இறுதி​வாக்​கில், 25.2 பில்லியன் டாலராக அதிகரித்​துள்ளது. 2021 முதல் 2023 வரையிலான இரண்டு ஆண்டு​களில், அனைத்து வகையான செயற்கை நுண்ணறிவுப் பிரிவு​களில் செய்யப்​பட்​டுள்ள கார்ப்​பரேட் முதலீடு 761 பில்லியன் அமெரிக்க டாலர்.

நடைமுறைச் சிக்கல்கள்:

  • தொழில் துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பம் பரவலாக ஏற்கப்​பட்டு, நடைமுறைக்கு வர வேண்டும் என்றால், அதற்கான முழுமையான உள்கட்​டமைப்பு வசதிகள் அவசியம். அதிலும் தரவுகள்தான் செயற்கை நுண்ணறிவுத் துறை உள்கட்​டமைப்பில் (AI Infrastructure) மிக முக்கியமான இடத்தில் உள்ளன. மிகத் துல்லியமான வெளியீடுகளை (Outputs) தரக்கூடிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை (AI Models) சாதாரணத் தரவுகள், தீர்வு​முறைகள் (Algorithm) கொண்டு உருவாக்கிட முடியாது. அதற்கு உயர்தரத் தரவுகள் (High Quality Data) அவசியத் தேவை. அவற்றுக்கான பயன்பாட்டுச் செலவு நிறுவனங்​களுக்குப் பெரும் சவாலாக இருக்​கிறது.

தடுமாறும் உழைப்புச் சந்தை:

  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்​பத்தின் காரணமாக வருங்காலத்தில் உழைப்புச் சந்தையில் பெரும் தடுமாற்றம் ஏற்படும் என்ற கருத்தைச் சர்வதேச அமைப்பு​களும், சமூகஅறி​விய​லா​ளர்​களும் தெரிவிக்​கின்​றனர். தொழில்​நுட்​பத்தைப் பயன்படுத்து​வதில் பின்தங்கி ​உள்ள வளரும் நாடுகளில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பம் காரணமாக வேலையிழப்பு ஏற்படக்​கூடிய அபாயம் மிக அதிகமாக இருப்​ப​தாகச் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) கூறுகிறது.
  • செயற்கை நுண்ணறிவு இயந்திரமயம் (Automation due to AI) மூலம் உலக அளவில் ஏறத்தாழ 7.5 கோடி வேலை பறிபோகும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளின் உழைப்புச் சந்தை​யிலும் நிலைமை மோசமாகும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்​றனர்.
  • இந்தியப் பொருளா​தா​ரத்தில் சேவைத் துறையின் பங்களிப்பு முதன்​மையாக இருப்​ப​தால், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த இருக்கும் விளைவுகள் கடுமையாக இருக்குமோ என்ற அச்ச உணர்வு நிலவு​கிறது. வங்கி, காப்பீடு, இதர நிதிச் சேவைகள், தகவல் தொழில்​நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பப் பயன்பாட்டின் தவிர்க்க இயலாத நிலையைப் பார்த்து ​வருகிறோம்.
  • தனியார் துறை, சந்தை சக்திகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பப் பயன்பாட்​டினைத் தொடர்ந்து அதிகரித்​தால், நாஸ்காம் அமைப்பின் மதிப்​பீட்​டின்படி, 2027இல் இந்திய செயற்கை நுண்ணறிவுச் சந்தையின் சராசரி ஆண்டு வருவாய் வளர்ச்சி விகிதம் (CAGR) 25 முதல் 35% வளர்ச்சியை அடையும்.
  • அதேநேரத்​தில், அபரிமிதமான உழைப்புச் சக்தி கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில், நீடித்த வேலையிழப்பு என்னும் நிலை பெரும் நெருக்​கடியை உருவாக்கும் அபாயமும் இருக்​கிறது. இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024இல் குறிப்​பிட்​டிருப்​பது​போல், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 78.5 லட்சம் வேலைகளை விவசாயம் அல்லாத துறைகளில் இந்திய அரசாங்கம் உருவாக்​கினால் மட்டுமே, அதிகரித்து​வரும் உழைப்புச் சக்தியைத் திறம்படச் சமாளித்திட முடியும்.

பொருளாதார ஏற்றத்​தாழ்வு:

  • தொழில் புரட்சி தொடங்கி நம் காலத்துத் தொழில்​நுட்ப வளர்ச்சி வரை, அனைத்து மாற்றங்​களும் பொருளாதார ஏற்றத்​தாழ்வை ஓர் உள்ளார்ந்த அம்சமாகவே கொண்டுள்ளன. தொழில்​நுட்ப முன்னேற்​றத்தால் உற்பத்​தித்​திறன், லாபம் அதிகரித்​தாலும் அவற்றி​லிருந்து தொழிலா​ளர்கள் உடனடியாக எந்தவிதப் பலனையும் பெற முடிவ​தில்லை. புதிய தொழில்​நுட்​பத்தின் வருகை காரணமாக வேலையிழப்பைச் சந்திக்கும் தொழிலா​ளர்கள், தங்களின் வாழ்வா​தா​ரத்​துக்கான மாற்று வேலையைப் பெறுவதற்கு மிக நீண்ட காலம் ஆகிறது.
  • இடைப்பட்ட காலத்தில் அந்தத் தொழிலா​ளர்கள் பெரும் பொருளா​தாரச் சிக்கலில் சிக்கித் துன்பத்​துக்கு உள்ளாகிறார்கள். இந்த இயங்கு​முறையை முதல் தொழிற்​புரட்​சிக்குப் பிந்தைய காலக்​கட்​டத்தில் (1790 - 1840) உலகம் உணர்ந்தது. இந்தத் தேக்கநிலைக் காலக்​கட்​டத்தை ஏங்கல்ஸ் பாஸ் (‘Engel’s Pause’) என்று குறிப்​பிடு​கிறோம். இத்தகையதொரு தேக்கநிலையைச் சமாளித்திட உரிய நிறுவனக் கட்டமைப்புகள் மூலம் உழைப்பு, உற்பத்​தித்​திறன், மூலதனம் ஆகியவற்றை மிகக் கவனமாகக் கையாளுதல் வேண்டும்.
  • பிரிட்​டனில் ஏற்பட்ட தொழிற்​புரட்​சிக்குப் பிந்தைய காலக்​கட்​டத்​தில், மனித உழைப்பின் மீது இயந்திரமய​மாக்கல் (Automation) என்னும் தொழில்​நுட்பம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரெடரிக் ஏங்கல்ஸ் தெரிவித்த கருத்துகள் இன்றைய கேள்வி​களுக்குப் பதில்​களைப் பெற உதவிகரமாக உள்ளன.
  • காலாவ​தியான தொழில்​நுட்​பத்தைப் பயன்படுத்தும் தொழிலா​ளர்​களுக்குப் புதிய தொழில்​நுட்பம் அல்லது இயந்திரமய​மாக்கம் வேலையிழப்பையே உருவாக்​கும். அதேநேரம், புதிய தொழில்​துறை​களும், தொழில்​நுட்​பங்​களும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று ஏங்கல்ஸ் கூறினார்.

முன்னோக்கிய பயணம்:

  • செயற்கைத் தொழில்​நுட்ப ஆராய்ச்சி - மேம்பாடு என்பது தற்போது வெகு சில தனியார் நிறுவனங்​களிடையே குவிந்​துள்ளது. இத்தகைய நிலை தொடர்ந்து அதிகரித்​தால், தொழில்​நுட்பப் பயன்பாட்டின் பலன்களும் தனியார் நிறுவனங்​களின் நோக்கங்களை நிறைவேற்றிக்​கொள்ள மட்டுமே பயன்படும்.
  • வளரும் நாடுகளின் சமூகப் பொருளாதார இலக்குகளை அடைந்திட அவை பயன்படாத நிலை ஏற்படலாம். எனவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பப் பயன்பாடு குறித்த கொள்கைகளை உலக நாடுகள் சமூகப் பொருளா​தாரக் கண்ணோட்​டத்​துடன் வகுத்​துக்​கொள்வது அவசியம்.
  • இந்தியா போன்றதொரு நாட்டில், தொழில்​நுட்ப ஆராய்ச்​சிக்கு ஏற்ற கல்விக் கட்டமைப்புகள், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முதலீடு, நிதி ஒதுக்கீடு அதிகரித்திட வேண்டும். தொலைநோக்குச் சிந்தனை கொண்ட கொள்கை அறிக்கைகள் தயாரிக்​கப்பட வேண்டும். உரிய நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்​கிக்​கொள்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்​பத்தை வெற்றிகரமாக நடைமுறைப்​படுத்தி, முன்னோக்கிய பயணத்தைத் தொடர முடியும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories