TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு: வரமும் சாபமும்

July 19 , 2023 414 days 688 0
  • இன்றைய இளைஞர்கள் அறிவியல் புலங்களில் உலகின் தலைசிறந்த பொறுப்புகளை வகிக்கின்றனர். பாரதத்தின் தொடர்ந்து வரும் அறிவுப் பாரம்பரியத்திற்கு இவை சான்றுகளாக இருக்கின்றன. பாரதம் நுண்ணறிவுக்குப் புகழ் பெற்றது. நமது வேதங்களில் ரிக் மற்றும் அதர்வண வேதங்கள் பல்துறை அறிவியல் பற்றித் தெளிவாகவும் விரிவாகவும் நுட்பமாகவும் பேசுகின்றன. இன்றளவும் வானவியல் முதல் மனித உளவியல் வரை அனைத்து ஆராய்ச்சிகளிலும் ஆய்வாளர்கள் வேதங்கள் சொல்லும் நுட்பத்தைக் கருத்தில் கொள்கின்றனர்.
  • தற்போதைய காலமானது தொழில்நுட்பங்களின் காலம். அதிலும் "செயற்கை நுண்ணறிவு' என்ற சொற்றொடர் மிகுந்த பேசுபொருளாக இருக்கிறது. மனிதர்களின் நுண்ணறிவு மற்ற உயிரினங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்தி தலைமை கொள்ளச் செய்துள்ளது. மனிதர்களோ தொழில்நுட்பத்தின் அடுத்த பரிமாணமாகவும் படிநிலையாகவும் செயற்கை நுண்ணறிவு என்ற நுட்பத்தைக் கூறுகின்றனர்.
  • ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956-இல் "செயற்கை நுண்ணறிவு' என்ற சொல்லை முதலில் அறிமுகப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு ஆகும். இத்தகைய நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவு. இதில் செயற்கை நுண்ணறிவுக் கருவி என்பது, தன் சூழ்நிலையை உணர்ந்து அதிக வெற்றி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஓர் அமைப்பாகும். அதாவது மனிதர்களைப் போலவே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மேற்கொள்ளும் இயந்திரங்களாகும்.
  • இனி வரும் பத்தாண்டுகளில் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பல துறைகளுக்கும் ஏற்ற செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்குவது தொழில்நுட்ப உலகின் நோக்கமாக இருக்கும் என்றும் உலக அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
  • அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளது. வாழ்க்கை எளிதாகியுள்ளது என்ற கருத்து ஒருபுறம் வைக்கப்படும்போதே, சுற்றுச்சூழல் சீர்கேடு முதல் உளவியல் சுகாதாரச் சிக்கல்கள் வரை பல கேடுகளையும் தருவதாக மறுபுறம் பேசப்படுகிறது.
  • அதுபோலவே இந்த செயற்கை நுண்ணறிவு பற்றியும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அதிலும் அறிவியல் அறிஞர்களே இத்தகைய இருவேறுபட்ட கருத்துகளையும் முன்வைப்பதே உலகை சிந்திக்கச் செய்துள்ளது.
  • மருத்துவத் துறையில் நோயைக் கண்டறியும் சோதனைகளில் இந்தத் தொழில்நுட்பம் மிகத்துல்லியமான முடிவுகளைக் காட்டுகிறது. இதனால் உயிர் காக்கும் சேவையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. அறுவை சிகிச்சையின்போதும் துல்லியமான மற்றும் அதிநுட்பமான சேவைகளை வழங்க அவசியமானதாகவும் இருக்கிறது.
  • புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான கதிரியக்க அறுவை சிகிச்சைகளில் பின்விளைவுகளைக் குறைக்கும் அளவில் நோய் பாதித்த பகுதிகளில் மட்டும் சிகிச்சை மேற்கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவு வரப்பிரசாதமாக உள்ளது என்று மருத்துவ உலகம் கொண்டாடுகிறது.
  • முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செயல்பட உதவுவது, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடிப்பது போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் உதவி அளப்பரிய அளவில் இருப்பதை மறுக்கமுடியாது. மருத்துவத் துறை மட்டுமல்லாது விவசாயம், கட்டடப் பணி, பொறியியல் துறைகள் என்று நாம் இதன் பயன்களை விரிவுபடுத்த முடியும்.
  • விண்வெளி ஆய்வு போன்ற அதிக செலவினம் கொண்ட ஆராய்ச்சிகளில் வெற்றியின் சாத்தியத்தை விரிவுபடுத்த இந்த நுண்ணறிவு பெரிய அளவில் பயன்படும். அதோடு சில துறைகளில் மனிதத் தவறுகளை முற்றிலும் தவிர்க்கும் வகையிலும் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.
  • இப்போது நாம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல தொழில்நுட்ப சாதனங்களை நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். ஆனாலும் இது ஆரம்ப நிலைதான். பாதைகளில் போக்குவரத்து நெரிசல் எந்தப் பகுதிகளில் உள்ளது என்பதைச் சொல்லும் கருவிகள் மற்றும் செயலிகள், நாம் சொல்வதைக் கேட்டு அதனை செயல்படுத்தும் "அலெக்சா' போன்ற கருவிகள், இன்னும் மொழி அடிப்படையில் சில செயலிகள் என நம்முடைய அன்றாடங்களில் இந்தத் தொழில்நுட்பம் இடம் பிடித்துவிட்டது.
  • ஆனால், பல செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், மனிதர்களின் எண்ண ஓட்டங்களை கணித்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றன. அவற்றின் உள்ளடக்கம், கலை மற்றும் இசைக்கான முன்னுரிமைகள் என அனைத்தும் இக்கருவிகளைப் பயன்படுத்தி வருபவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒட்டி உருவாக்கப்படுகின்றன. அதனால் அவை செயல்படும் விதமும் அதன் அடிப்படையிலேயே இருக்கும்.
  • இதில் பயன்கள் இருப்பதைப் போல தீமைகளும் பன்மடங்கு இருப்பதாக அறிவியலாளர்கள் எடுத்துச் சொல்கின்றனர். அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என கடந்த மார்ச் மாதம் "டெஸ்லா' நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உள்ளிட்ட வல்லுநர்கள் கூட்டாகக் கையொப்பமிட்டு ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டனர்.
  • அந்தக் கடிதத்தில், "செயற்கையாக உருவாக்கப்படும் மனங்கள் ஒரு கட்டத்தில் மனிதர்களை விட திறமை மிக்கவையாக மாறி, அதிக எண்ணிக்கையில் பெருகி, மனித இனத்தையே அழித்துவிடும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும்' என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் தந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஊடகங்கள் இது பற்றிய விவாதங்களைத் தொடங்கின.
  •  "செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என "ஓபன் ஏஐ' தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், கூகுள் "டீப்மைண்ட்' நிறுவன தலைமை செயல் அதிகாரி டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவு என்பது பொதுமக்களின் பெரும் அளவிலான செல்வங்களை சொற்ப எண்ணிக்கையிலான தனியார் நிறுவனங்களுக்கு மாற்றும் செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறிப்பாக சொல்லப்படுகிறது.
  • செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனிதகுல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கரோனா, அணு ஆயுதப் போர் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்ற கருத்தும் தற்போது தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய அச்சம் மிகைப்படுத்தப்பட்டது என்று அதற்கு எதிர்வினையாற்றுவோரும் இருக்கின்றனர்.
  • செயற்கை நுண்ணறிவினால் எத்தகைய பேரிடர்கள் ஏற்படக் கூடும் என்பது பற்றி செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றுள் தலையாயது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பல மென்பொருட்கள் மற்றும் மின்னணு கருவிகளைப் பெரும் ஆயுதங்களாக சமூக விரோத கும்பல்கள் மற்றும் சில நாடுகளின் அரசுகள் பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும் தவறான தகவல்கள் சமூகத்தை சீர்குலைத்து எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
  • இவையெல்லாம் அணு ஆயுதம் வரையிலான அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் நாம் ஏற்கெனவே சந்தித்த சிக்கல்கள்தான். இணையப் பயன்பாடு கூட இதே விதமான சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும் என்று சொல்வது தான் அதிக அச்சுறுத்தலாக இருக்கிறது.
  • மனித மனம் ஒன்றைப் பற்றி நில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கக்கூடியது. அதன் செயல்பாடுகள் அதீதமானவை. அத்தகைய மனதை ஒரு கருவி ஆட்டிப் படைக்க முடியும் என்பதெல்லாம் மனிதன் தன்னையே தான் உருவாக்கிய இயந்திரத்தின் கையில் ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
  • தன்னை அறிதலும் மனதை வெல்வதுமே நமது சித்தாந்தங்கள் நமக்குக் கற்றுத் தந்திருப்பவை. வேதங்களும் தன்னை அறிவதே சிறந்த தவம் என்று போதிக்கின்றன. வேதங்கள் சொன்ன இதே கருத்தையே சிந்தனாவாதிகளும் கற்றுக்கொடுத்தனர். சாக்ரடீஸ், "உன்னையே நீ அறிவாய்" என்கிற தன்னுடைய சித்தாந்தத்தை உலகுக்குத் தந்தார்.
  • தன்னுடைய மனதை வெல்வதற்கான உபாயத்தைக் கண்டு அதன் வழி நடப்பதே நாம் இன்பமாய் வாழ்வதற்கான அடிப்படை என்று இருக்க நாம் ஒரு செயற்கையான நுண்ணறிவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது அடிமைத்தனத்தை விரும்பி வரவேற்பதாகும். நமது மனமோ அறிவோ நம்மால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவோ எதுவானாலும் நாம் அதனை அடக்கி ஆள்வதே வெற்றி.
  • இதையே மகாகவி பாரதியார்,

"பேயாய் உழலும் சிறுமனமே!

பேணாய் என்சொல்; இன்று முதல்

நீயாய் ஒன்றும் நாடாதே!

நினது தலைவன் யானே காண்;

தாயாம் சக்தி தாளினிலும்

தருமம் என யான் குறிப்பதிலும்

ஓயாதே நின்று உழைத்திடுவாய்

உரைத்தேன் அடங்கி உய்யுதியால்'

  • என்று மனதுக்குக் கட்டளை இடுகிறார்.
  • எத்தகைய அறிவியல் கண்டுபிடிப்பாயினும் அது நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டுமே அல்லாது நம்மை சோம்பேறிகளாக்குவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் பயன்படக் கூடாது. எளிமையான வாழ்க்கைக்கு நாம் பழகிக் கொண்டு விட்டால் இது போன்ற செயலிகள், தொழில்நுட்பங்கள் நம் அன்றாடங்களைப் பாதிக்க முடியாது.
  • வேதங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளை நுட்பமாக முன்வைத்தாலும் அவை ஒழுக்கக் கோட்பாட்டில் மெய்யியல் தத்துவங்களில் கவனம் செலுத்தியிருப்பதை நாம் நுணுக்கமாக உற்று நோக்கக் கற்றுக்கொண்டால் அவை கற்றுத்தரும் வாழ்வியல் நமக்கு வசப்பட்டுவிடும்.
  • அறிவியல் கண்டுபிடிப்புகள் எப்போதும் வரத்தோடு சாபத்தையும் கொண்டு வருவனவே. செயற்கையின் கைகளில் நம்மை ஒப்புக்கொடுப்பதை விட இயற்கையின் கைகளில் பாதுகாப்பாக இருக்க மீண்டும் பழகிக் கொண்டால் இயற்கை நம்மை, நமது உடல், மன நலன்களைப் பாதுகாத்து நோயற்ற வாழ்வளிக்கும். அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பும் உறுதிப்படும்.

நன்றி: தினமணி (19  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories