TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு VS இயற்கை நுண்ணறிவு

January 13 , 2025 2 days 27 0
  • இன்றைய வகுப்பறையின் மிகப்பெரிய சிக்கல் இயற்கை நுண்ணறிவு என்னும் ஆசிரியருக்கும் செயற்கை நுண்ணறிவு என்னும் டிஜிட்டல் செயலிகளுக்கும் இடையிலான கடும் போராட்டத்தில் யார் வெல்வார்கள் என்பது குறித்தது. – நோம் சாம்ஸ்கி. செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் பேசுவது அதிநவீனத்தின் அடையாளமாகிவிட்டது.
  • விரைவில் காகிதத்தில் எழுதும் தேர்வுகளே இருக்காது என்று செயற்கை நுண்ணறிவுவாதிகள் பெரிய தீர்க்க தரிசனம்போல் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 2030-க்குள் இணையம் முழுமையாகக் கல்வியைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் எனவும் சொல்லப்படுகிறது.
  • கல்விப் புலத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த சிறப்பான புத்தகம் ‘சேவிங் கே 12’. ‘காப்பாற்றுவோம் கல்வியை’ எனும் தலைப்பில் கல்வியாளர் புரூஸ் டைட்ரிக் பிரைஸ் எழுதி வெளிவந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வழியைக் கல்விக்குப் பயன்படுத்துதல் தொடர்பாக நாம் கேட்கத் தயங்கும் கேள்விகளைத் துணிந்து இந்நூல் எழுப்புகிறது. நாவலாசிரியர், ஓவியர், கவிஞர் மற்றும் கல்வியாளரான இந்நூலின் ஆசிரியர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.

அல்லாடும் ‘ஆல்ஃபா’ சந்ததி:

  • சாட் ஜீபிடி பயன்படுத்தி வீட்டுப் பாடம் எழுதுவதும், செயல்திட்டங்களைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கேள்வியாகக் கொடுத்து பதில் பெற்று அதையே வகுப்பறையில் சமர்ப்பித்து விடுவதும் இன்று பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தயாரித்து பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் கூட பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் வந்துவிட்டன.
  • அதேநேரம், ‘ஆல்ஃபா’ சந்ததி என்று அழைக்கப்படும் 21-ம் நூற்றாண்டு குழந்தைகள் மட்டும் திறனில் மேம்பட்டவர்களாகவும் புதியதோர் உலகத்தைச் சேர்ந்த அறிவுஜீவி களாகவும் உருப்பெருக்கிக் காட்டுவது என்பது இந்தச் செயற்கை நுண்ணறிவுவாதிகளின் ஒரு வகையான வியாபார உத்தியோ என்கிற சந்தேகம் எழுகிறது.
  • இந்தச் சந்ததியைச் சற்று உற்றுப் பார்த்தால் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் என்கின்ற அடிப்படை கல்வி கைவிடப்பட்டு ஏனைய நவீன அம்சங்கள் நுழைக்கப்படுவதால் கற்றலின் அடிப்படைகள் மறக்கப்படுகின்றன என்று கல்வியாளர்கள் உலகெங்கும் கவலைப்படுகின்றனர்.
  • நான் இடும் குரல் கட்டளைகளைக் கேட்டு செயற்கை நுண்ணறிவு அதை அப்படியே செய்துவிடுமே, பிறகு நான் எதற்காக வாசிக்க வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எதற்காகக் கணக்கிட வேண்டும்? செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தேவையான திறன்களை வளர்த்தால் போதுமே என்பதாகக் கல்வி திசை மாறிக் கொண்டிருக்கிறது.

கருவி நேயம்!

  • செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தெரிந்த இவர்கள்தாம் திறன்பேசிகள் வழி காட்சியாக்கங்களைக் காட்டி உணவு ஊட்டி வளர்க்கப்பட்ட சந்ததி. மனிதர் களைவிட, நிஜங்களைவிட திரைக் காட்சிகளிடம் அதிகமான ஈர்ப்பு கொண்ட சந்ததி.
  • உரையாடல்கள், நேரடிப் பேச்சு, கலகலப்பான குடும்பத்தைவிட ‘டெக்ஸ்டிங்’ மூலம் உணர்வுகளைப் பகிரும் சந்ததி. வீதிகளில் சென்று விழுந்து புரண்டு புழுதியில் விளையாடுவதை விட்டுவிட்டு இன்ஸ்டாவிலும் இணையத்திலும் நட்புகளை வளர்த்து, வீடியோ விளையாட்டுகளில் மூழ்கிவிட்ட சந்ததி. வீட்டில் சமைக்கும்போதே தனக்குப் பிடித்த உணவை இணையத்தில் ஆர்டர் செய்யும் சந்ததி.
  • இந்தச் சந்ததிக்குப் புத்தகமோ நாளிதழோ வாசிக்கும் பழக்கம் இல்லை. அவற்றையெல்லாம் தொகுத்து செயற்கை நுண்ணறிவே வழங்கிவிடும் என்று நம்புகிறார்கள். சுயமாகச் சிந்தித்து எழுதுகின்ற திறன் இல்லை. எனக்காகச் செயற்கை நுண்ணறிவே சிந்தித்து விடும் என்று நம்புகிறார்கள்.
  • வகுப்பறையின் இயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட உயிருள்ள ஆசிரியர்களைவிட செயற்கை நுண்ணறிவு உயர்ந்தது என்று கருதும் ஒரு சந்ததியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மனிதநேயமற்ற கருவி நேயம் கொண்ட ஒரு சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற பெரும் கவலை கல்வியாளர்களைச் சூழ்ந்துள்ளது என்று இந்தப் புத்தகம் பேசுகிறது.
  • இயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்த் தெடுத்து அதேசமயம் செயற்கை நுண்ணறிவைத் தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்கின்ற நாளைய மனிதனை உருவாக்குகின்ற மிகப்பெரிய சவால் நம் இன்றைய வகுப்பறைக்கு உள்ளது என்பதே உண்மை.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories