- இது செயற்கை நுண்ணறிவின் காலம். OpenAI என்ற நிறுவனத்தின் ChatGPT (GPT – GUIDE Partition Table) மற்றும் கூகுள் நிறுவனத்தின் Google Bard AI போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். இவை தம் மாயக்கரங்களால் எல்லாத் துறைகளையும் புரட்டிப்போடுகின்றன. ஆகா அருமையான வாய்ப்பு. மனித உழைப்பு வெகுவாகக் குறைந்துவிடும் என்று மகிழ்வோர் சிலர். ஐயோ, இது ஆபத்து. வேலைகள் பறிபோய்விடும். வாழ்க்கையே ஆட்டம் கண்டுவிடும் என்று பதறுவோர் பலர். இந்தச் செயற்கை நுண்ணறிவு அப்படி என்னதான் செய்கிறது?
- இதுவரை, நாம் ஒரு கேள்வி கேட்டால் பதில் தரக்கூடிய பல வலைத்தளங்களை தேடுபொறி நம் கண்முன்னே காட்டும். அவற்றிலிருந்து நமக்குத் தேவையான, ஆதாரப்பூர்வமான பதில் இருக்கும் தளத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு அச்சிரமத்தையும் போக்கியுள்ளது. கேள்வி கேட்டால் அதற்கேற்ற பதிலை மட்டும் தந்துவிடும். அது மட்டுமா?
- ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதும். போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெறும். நொடியிடையில் வீட்டுப்பாடங்கள் செய்து முடிக்கும். கவிதை எழுதும். கதாபாத்திரங்களை முடிவு செய்து கூறினால் அவற்றை வைத்துக் கதையெழுதித் தரும். ஒரு பத்தி எழுதினால் அதைக் குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் மாற்றும்.வழக்குக்கேற்ற தீர்ப்பை வழங்கும்.நோய்க்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரைக்கும். பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பரிந்துரைக் கடிதம் எழுதும். நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்கும். ஒரே வாரத்தில் லாபம் ஈட்டித்தரும்.
இவ்வளவு ஏன்?
- தொடர்ந்து சில நாட்கள் இந்த செயலிகளை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் விருப்பு வெறுப்புகள் என்னென்ன? உங்கள் குணம் எத்தகையது? உங்கள் கேள்வியின் மறைபொருள் என்ன? போன்றவற்றைப் புரிந்துகொண்டு உங்கள் உணர்வோடு விளையாடவும் அவற்றால் முடியும்.
தொடர்ந்து கற்கும் நுண்ணறிவு
- செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் நாள்தோறும் கற்றுக் கொண்டே இருக்கின்றன. தினம் தினம் தம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. அவ்வப்போது சில குழப்பங்கள், பிரச்சினைகள்தலைகாட்டுகிறது. அவற்றை நிபுணர்கள் கவனிக்கிறார்கள். தேவையான மாற்றங்களைச் செய்கிறார்கள். புதுப்புது தகவல்களை இணைக்கிறார்கள். பதிப்பு (Version) ஒன்று, இரண்டு, மூன்று என்றுவளர்ந்து இப்போது நான்காவது பதிப்பை எட்டியுள்ளது.
கல்வி நிறுவனங்களின் எதிர்வினை
- பல பல்கலைக்கழகங்கள் இந்தச் செயலிக்குத் தடைவிதித்தன. காரணம்பல புத்தகங்களைப் படித்து, கருத்துகளை உள்வாங்கி, அவற்றை ஒப்பிட்டுதன்னுடைய கருத்தையும் இணைத்துஎன மாதக்கணக்கில் உழைத்து உருவாக்க வேண்டிய ஓர் ஆய்வுக்கட்டுரையை ஓரிரு நிமிடங்களுக்குள் உங்கள் முன்னே ஒளிரவிடும் இச்செயற்கை நுண்ணறிவு மாணவர்களின் கற்றல் திறனை மழுங்கடித்துவிடும் என்று நினைப்பதே காரணம்.
- என்ன வீட்டுப்பாடம் கொடுப்பது? செயற்கை நுண்ணறிவைத் தோற்கடிக்கும் கேள்விகள் இருக்கின்றனவா? மாணவர்களின் சுயசிந்தனையை வளர்க்க உதவும் செயல்பாடுகள் எவையெவை? போன்றவினாக்களுக்கு விடை காண ஆசிரியர்கள் திணறுகிறார்கள்.
நிபுணர்களின் கருத்து
- பல்துறை நிபுணர்கள் இச்செயலிகளின் ஆற்றலால் இருபெரும் பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள்.
- இது நல்லது. மனிதர்களின் உழைப்பைக் குறைக்கிறது. நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மனிதர்களின் கவனக்குறைவால் ஏற்படும் பெரும் நட்டம் ஏற்படாமல் தடுத்து பாதுகாக்கிறது. இவ்வளவு நாள்சொல்லிச் சொல்லியும் மாறாத பள்ளிக்கூடங்களின் செயல்பாடுகளை இவை புரட்டிப்போடும். கற்பித்தல் முறை மாறும். குழந்தைகளின் கற்றல்முறை மாறுபடும் என குதூகலிப்போர் ஒரு பக்கம்.
- இல்லையில்லை. இவைமனிதர்களின் சிந்தனையாற்றலைக் குறைக்கும். சோம்பேறிகளாக்கும். வேலைகள் இல்லாமலாகும் என்று கவலைப்படுவோர் ஒரு பக்கம்.
- யார் வெற்றி பெறுவார்கள்? காலத்தின் பதிலுக்காகக் காத்திருப்போம்.
நன்றி: தி இந்து (24 – 06 – 2023)