TNPSC Thervupettagam

செய்யறிவு யாரை என்ன செய்யக் காத்திருக்கிறது

November 13 , 2023 378 days 289 0
  • செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) என்ற சொல் தற்போது பரவலாக கேள்விப்படும் ஒன்றாக உள்ளது. செய்யறிவு என்றாலே நமக்கு தானியங்கி வாகனங்கள், செய்யறிவு ரோபோக்கள் மற்றும் செய்யறிவினால் உருவாக்கப்படும் புகைப்படங்கள் ஆகியவை நினைவுக்கு வரும். செய்யறிவு குறித்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான பல விஷயங்கள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. செய்யறிவு என்றால் என்ன? செய்யறிவினால் மனித குலத்துக்குக் கிடைப்பதெல்லாம் நன்மைகள்தானா? அல்லது தீமைகளா?

செய்யறிவு

  • செய்யறிவு 1950-களில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. மனிதர்களின் அறிவினைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளை இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படுவதை செய்யறிவு எனலாம். ஒரு வேலையைச் செய்து முடிக்க முன்பு தேவைப்பட்ட மனிதர்களின் உதவி தற்போது செய்யறிவின் வரவால் அவசியம் குறைவானதாக மாறிவிட்டது. செய்யறிவின் மூலம்  இயந்திரங்கள் ஒரு விஷயத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வது, பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவது, திட்டமிடுவது, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது  என பல்வேறு வேலைகளை மனிதர்களைப் போன்றே செய்து முடிக்கின்றன. உண்மையில், மனிதர்களைவிட வேகமாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்கின்றன.

செய்யறிவை எப்படி பயன்படுத்துவது

  • தினசரி வாழ்க்கையில் செய்யறிவின் பயன்பாடு பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு, நாம் தொலைபேசியில் பயன்படுத்தும் கூகுள் குரல் உதவி (கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட்) மற்றும் அலெக்ஸா ஸ்பீக்கர் போன்றவற்றைக் கூறலாம். அதேபோல சாட் ஜிபிடி, கூகுள் பார்டு போன்ற செய்யறிவைப் பயன்படுத்தி இயங்கும் பயன்பாடுகளை நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும்  சாட் ஜிபிடியில் நீங்கள் ஒரு நாட்டின் தலைநகர் என்னவென்று கேட்டால் உங்களுக்கு சரியான விடையை அவை உடனடியாகத் தருகின்றன. ஒரு நாட்டின் தலைநகர் மட்டுமின்றி, வானிலை, முக்கியச் செய்திகள், கட்டுரைகள் போன்ற பலவற்றையும் நாம் அவற்றிலிருந்து பெற முடியும். மனிதர்களின் நுண்ணறிவை அப்படியே முழுமையாக பிரதிபலிக்க முடியாவிட்டாலும் அவற்றுக்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளீடுகளை வைத்து அவை பல தகவல்களை வழங்குகின்றன.

செய்யறிவின்  வகைகள்

  • செய்யறிவை  பலரும்  குறுகிய செய்யறிவு, பொதுவான செய்யறிவு, சூப்பர் செய்யறிவு என மூன்று வகைகளாக வகைப்படுத்துகின்றனர்.

குறுகிய செய்யறிவு

  • ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க இந்த குறுகிய செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது. இதனை வலிமை குறைந்த செய்யறிவு என்றும் அழைக்கின்றனர். குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்கும் விதமாகவே இந்த குறுகிய செய்யறிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரி, அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற பயன்பாடுகள் இந்த குறுகிய செய்யறிவின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. இந்த குறுகிய செய்யறிவைப் பயன்படுத்தி மேற்கண்ட விஷயங்கள் மட்டுமல்லாது சில வாடிக்கையாளர் சேவைகளையும் மேற்கொள்ளலாம். இந்த குறுகிய செய்யறிவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு சாட் ஜிபிடி. சாட் ஜிபிடி ஒரு குறிப்பிட்ட வேலையை  செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். சாட் ஜிபிடியில் நாம் கொடுக்கும் உள்ளீடுகளுக்கு சாட் ஜிபிடி நாம் கேட்பது தொடர்பான தகவல்களை நமக்கு திரட்டிக் கொடுக்கும். இந்த குறிப்பிட்ட சேவையை மட்டுமே சாட் ஜிபிடியின் மூலம் பெற முடியும். அதற்கான உள்ளீடுகளும் குறிப்பிட்ட சேவையை அளிப்பதற்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவான செய்யறிவு

  • பொதுவான செய்யறிவு வலிமையான செய்யறிவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பொதுவான செய்யறிவின் மூலம் பல்வேறு வெவ்வேறு விதமான வேலைகளை செய்து முடிக்க முடியும். இந்த பொதுவான செய்யறிவு மனித நுண்ணறிவைக் காட்டிலும் திறன் மிகுந்தது. இந்த பொதுவான செய்யறிவு மனிதர்களைப் போலவே சிந்திக்கக் கூடிய திறன் கொண்டது. தனக்குள் இருக்கும் அதிகப்படியான அனுபவங்களை வைத்து பிரச்னைகளுக்கான தீர்வு காணும் திறன் கொண்டது பொதுவான செய்யறிவு. இந்த பொதுவான செய்யறிவு குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சூப்பர் செய்யறிவு

  • சூப்பர் செய்யறிவு மனித குலத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாது மனிதகுலத்துக்கு பேராபத்தாகவும் அமையலாம். இந்த சூப்பர் செய்யறிவு மனிதனின் நுண்ணறிவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக சிந்திக்கக் கூடியது. மனிதனின் நுண்ணறிவை மிஞ்சும் அளவுக்கு வல்லமை படைத்தது. மனிதனால் தீர்க்க முடியாத பல சிக்கலான விஷயங்களையும் இந்த சூப்பர் செய்யறிவு தனது தொடர்ச்சியான கற்றலினால் தீர்க்க இயலும். இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் நம்பமுடியாத உச்சத்தை அடையாலம்.

செய்யறிவின் பயன்பாடுகள்

  • சாட் ஜிபிடியில் இந்த செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மொழிப்பெயர்த்தல், கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்ற சேவைகளை இதன்மூலம் பெற முடியும். இதனை மக்கள் தற்போது பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தானியங்கி கார்கள்

  • தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்த போதிலும், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் தானியங்கி கார்களில் பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலையுணர் கருவிகள் (சென்சார்கள்)  மூலம் விபத்துகளற்ற பயணம்  சாத்தியமாகிறது. மேலும், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாகனம் சரியான பாதையில் பயணிக்க உதவுகிறது. கூகுள், டெஸ்லா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த தானியங்கி வாகனங்களை சோதனை முயற்சியில் இயக்கி வருகின்றன.

ரோபாட்டிக்ஸ்

  • ரோபாட்டிக்ஸ் துறையிலும் செய்யறிவு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் துறையில் பல முன்னேற்றங்கள் தேவைப்பட்டாலும் தற்போது ரோபோக்கள் செய்யறிவைப் பயன்படுத்தி மனிதர்கள் செய்யக்கூடிய வேலைகளை செய்து வருகின்றன.

செய்யறிவு உரையாடல்

  • செய்யறிவு உரையாடலில் பயனாளர் தங்களது கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலைப் பெறலாம். இந்த தொழில்நுட்பத்தில் உள்ளீடுகளை கேட்டுக் கொள்ளவும், அதற்கான தகவலை வழங்கவும் இயந்திரங்கள் தயாராக இருக்கும். இதனால்  இரு நபர்கள் உரையாடுவது போன்ற உணர்வு கிடைக்கும். இந்த செய்யறிவு உரையாடல்களுக்கு கூகுள் பார்டு, அலெக்ஸா, வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை உதாரணமாகக் கூறலாம்.

பயன்பாட்டில் உள்ள செய்யறிவு சேவைகள்

  • பொதுப் பயனாளர்களும், தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் பயன்படும் வகையிலான பல செய்யறிவு சேவைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்த செய்யறிவு சேவைகள் மூலம் நமது தினசரி வேலைகளை நம்மால் எளிதில் செய்து முடிக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் சிரி, கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட், சாட்பாட்ஸ், மெய்நிகர் உதவியாளர்கள், கூகுள் மொழிப்பெயர்ப்பான், மைக்ரோசாஃப்ட் மொழிப்பெயர்ப்பான், அமேசான் மொழிபெயர்ப்பான் மற்றும் சாட் ஜிபிடி போன்ற மொழிப்பெயர்த்தல் பயன்பாடுகள், புகைப்படம் மற்றும் விடியோ அடையாளம் காணுதல், மென்பொருள் வளர்ச்சித் துறைகளில் செய்யறிவு பயன்பாடு போன்றன பயன்பாட்டில் உள்ள சேவைகள்.

செய்யறிவில் முன்னணி நிறுவனங்கள்

  • ஓபன்ஏஐ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயல்படும் பல்வேறு சேவைகளை அதன் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. ஏஐ சாட்பாட் சாட்ஜிபிடி மற்றும் டால்-இ 2 ஆகியன அதற்கு உதாரணங்களாகும். சாட்ஜிபிடியில் உள்ளீடுகளைக் கொடுத்து நமக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். டால்-இ 2 என்பது  புகைப்படத்தை உருவாக்கும் தொழில்நுட்பமாகும்.

ஆல்ஃபபெட்

  • கூகுளின்  ஆல்ஃபபெட் நிறுவனமும் இந்த செய்யறிவுத் தொழில்நுட்பத்தை பயனாளர்களுக்கு வழங்குவதில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

மைக்ரோசாஃப்ட்

  • மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல சேவைகளை வழங்குகிறது. இயந்திரக் கற்றல், தகவல் பகுப்பாய்வுகள், செய்யறிவு உரையாடல் போன்ற சேவைகள் செய்யறிவின் மூலம் வழங்கப்படுகின்றன.
  • செய்யறிவு தொழில்நுட்பத்தில் மேற்கண்ட நிறுவனங்கள் முன்னணியில் இருப்பினும், உலகின் பல நிறுவனங்களும் செய்யறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பெய்டு, அலிபாபா, லெனோவா மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் செய்யறிவு தொழில்நுட்பத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

உலகை மாற்றும் செய்யறிவு

  • நாம் வேலை செய்யும் விதம், நமது உடல்நலம், ஊடகங்களை நாம் பார்க்கும், நமது தனிப்பட்ட சுதந்திரம் என அனைத்திலுமே செய்யறிவு தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் தனது அலுவலகத்துக்கு தானியங்கி வாகனங்களின் மூலம் பயணிக்கலாம். நமது கட்டளைகளுக்கு ஏற்ப செய்யறிவு செயல்பட்டு நமது வேலையை மிக எளிதாக்கும். இந்த செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த இயலும். செய்யறிவின் வளர்ச்சி மருத்துவத் துறையில் எண்ணற்ற பலன்களை தரவல்லது. இதன்மூலம் மனித உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.
  • செய்யறிவில் தீமைகளே இல்லை எனவும் கூறிவிட முடியாது. செய்யறிவில் பல ஆபத்துகளும் உள்ளன. செய்யறிவைப் பயன்படுத்தி போலியான புகைப்படம், விடியோ மற்றும் ஆடியோக்களை எளிதில் உருவாக்கிவிட முடியும். இவ்வாறு செய்யறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் உண்மையானதைப் போன்று மிகத் துல்லியமாக இருக்கும். இதனால் பல சிக்கல்கள் எழும் வாய்ப்புள்ளது. தனிநபரின் சுதந்திரம் என்பது பறிபோகும் அபாயம் இந்த செய்யறிவு தொழில்நுட்பத்தில் இருப்பதால் பலரும் இந்த தொழில்நுட்பத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

செய்யறிவால் வேலைகள் பறிபோகுமா

  • செய்யறிவு தொழில்நுட்பம் நம் வேலைகளை எளிதாக்குவதுடன் எதிர்காலத்தில் நம் வேலைகளை அழிக்கும் வல்லமையும் படைத்தது. இந்த தொழில்நுட்பத்தினால் பலர் வேலையிழக்கக் கூடும் அபாயம் உள்ளது. செய்யறிவு முழுமையாக அனைத்து வேலைகளையும் நம்மிடமிருந்து எடுத்துவிடாது என்றாலும், வேலையின் தன்மையில் பெரிய அளவிலான பாதிப்பு இருக்கும். நிறுவனங்களில்  செய்யறிவு தானாக அனைத்து வேலைகளையும் செய்துவிட முடியாது. மாறாக, செய்யறிவைப் பயன்படுத்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களது வேலையை மேலும் எளிதாக்க முடியும். இதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
  • செய்யறிவு தொழில்நுட்பம் மனித ஆற்றலை மிஞ்சி செயல்பட்டு மனிதகுலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். செய்யறிவைப் பயன்படுத்தி இயங்கும் தானியங்கி வாகனங்கள் முழுமையாக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தானியங்கி டிரக்குகள் சந்தைக்கு வந்துவிட்டால் அமெரிக்காவில் மட்டும் 5 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அந்த 5 லட்சம் பேரின் நிலை என்ன? ஒரு துறையில் மட்டுமே 5 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்படுமானால் ஒவ்வொரு துறையில் ஏற்படும் வேலையிழப்புகளையும், அவர்களின் எதிர்காலத்தையும் நினைத்தால் தலை சுற்றுகிறது.
  • செய்யறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒவ்வொருவரும் மனித குலத்தின் நன்மைகள் பற்றியும் சிந்தித்துச் செயல்பட்டால்  தொழில்நுட்பமும் மனிதகுலமும் என இரண்டுமே இணக்கமாகப் பயணித்து சாதிக்கலாம்!

நன்றி: தினமணி (13 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories