TNPSC Thervupettagam

செய்வதை மகிழ்ந்து செய்யுங்கள்!

September 6 , 2024 11 hrs 0 min 10 0

செய்வதை மகிழ்ந்து செய்யுங்கள்!

  • இரண்டு வாரங்களாக, சச்சுவின் உறக்கமும் உணவும் குறைந்து போயிருந்தன. அலுவலகக் குழுவோடு சேர்ந்து ஒரு போட்டிக்காகச் செயலியை உருவாக்கிக் கொண்டிந்தார். பல நிறுவனங்கள் அந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். செயற்கை நுண்ணறிவை வைத்துப் புதுமையான முயற்சி என்று சொல்லி இருந்தார்.
  • வேலையை ஆரம்பித்து முதல் வாரம் இருந்த அந்தப் புத்துணர்ச்சி இப்போது அவரிடம் இல்லை.
  • “என்ன சச்சு இவ்வளோ சீரியஸ் ஆயிட்ட?”
  • “நாங்க நினைச்ச மாதிரி அவுட் புட் வரணும் நஸீ, இல்லனா எல்லாம் வீணாகிப் போகும். எங்க கம்பெனி எல்லாரையும் விட்டுட்டு எங்க டீமைத் தேர்வு செய்திருக்காங்க“ என்று சொல்லும் போதே அவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
  • “கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்குப் போய் நடந்துட்டு வரலாம் வா” என்று அவரை அழைத்துக் கொண்டு சென்றேன்.
  • ஒரு செயலில் ஈடுபடும் போது அந்தச் செயலில் மட்டும் கவனம் வைத்தால் போதுமானது. அப்படிச் செய்வதால் செய்யும் வேலையைச் சந்தோஷமாக, உற்சாகமாகச் செய்ய முடியும். அந்த வேலையை ஆரம்பித்த போது இருந்த அதே உற்சாகமும் ஈடுபாடும் முடியும் வரை இருக்கும். முடிவு நாம் நினைத்ததைவிடப் பல மடங்கு சிறப்பானதாக வர வழிசெய்யும்.
  • அதே செயலை, முடிவை முன்னிறுத்திச் செய்தால் பலன் இல்லை. ஒரே செயல்தான், ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் மனநிலை வெவ்வேறு முடிவுகளைத் தரும். இந்த வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டால் போதும். செய்யும் செயலை முழுக் கவனத்தோடு செய்தால், பலன் என்னவாக வரும் என்று கவலைப்பட அவசியமில்லை. என்னவாக வரும் என்று கவலை கொண்டால், வேலை சரியாக நடக்காது. இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கிறோம்?
  • ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்றார். அவர் மட்டுமன்றி பல ஞானிகளும் அறிஞர்களும் பலனை எதிர்பார்த்து வேலை செய்யவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவரவர் பாணியில் சொல்லி இருக்கிறார்கள்.
  • இந்த முடிவை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணும் போது, செய்யும் செயலில் பாரம் கூடும். மன அழுத்தம் வரும். அதுவே நம் வெற்றிக்கு முட்டுக்கட்டையாகிவிடும்.
  • உதாரணத்திற்கு, மருத்துவராக வேண்டும் என்கிற கனவோடு படிக்கும் மாணவர், தேர்வை மட்டுமே யோசித்துப் படித்தால் அவர் தோல்விக்கு அருகில் போகிறார் என்று அர்த்தம். அதுவே முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும், அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு விதங்களில் முயற்சி செய்து படித்து, எழுதிப் பார்த்தால் வெற்றி பெறுவார்.
  • அந்த மனநிலையை எப்படி அடையலாம் என்பதற்குச் சில வழிகள் இருக்கின்றன.
  • எடுத்துக் கொண்ட வேலையைப் புரிந்து கொள்ள வேண்டும். தெரியாத, அனுபவம் இல்லாத வேலையாக இருந்தாலும் ஆரம்பிக்கும் முன்பு சில முன் ஆய்வுகள் செய்வது சிறப்பு. பிடிக்காத வேலையைச் செய்ய நினைப்பது பாதித் தோல்விக்குச் சமம்.
  • எதை நோக்கி நாம் செல்லப் போகிறோம் என்று தெரிந்த பின்னர், செயலில் முழுதாகக் கவனம் செலுத்துவது அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.
  • செயலைத் திறம்படச் செய்ய என்ன வழிகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான கற்றல் அவசியம்.
  • மன அழுத்தம் வருகிறதென்றால், உங்கள் செயல் முறையை மாற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  • செயல்களைப் பிரித்துக் கொண்டு செய்வதால் கவனம் சிதறாமல் செய்ய முடியும்.
  • சின்ன சின்ன முன்னேற்றங்களைக் கொண்டாட வேண்டும். அது உங்களுக்குப் பிடித்த தித்திப்பைச் சாப்பிடுவதாகக்கூட இருக்கலாம். அப்படிச் செய்வது, அடுத்த நகர்வுக்குத் தேவையான உற்சாகத்தை நீங்களே உற்பத்தி செய்து கொள்வதற்குச் சமம்.
  • எந்தக் காரணம் கொண்டும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். அது தேவையில்லாத மன உளைச்சலைத் தரும்.
  • உங்கள் வேலையில் நடக்கும் முன்னேற்றத்தையும் பின்னடைவையும் அவ்வப்போது உட்கார்ந்து அலச வேண்டும்.
  • தவறுகள் செய்யாமல் கற்றுக் கொள்ள முடியாதல்லவா? தவறு நடந்தால், அதுவும் வெற்றி பெற அவசியம் என்பதை உணர வேண்டும்.
  • உங்கள் திட்டத்தின் மீது, ஆற்றல் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும். இலக்கை அடைய அவ்வப்போது திட்டங்களை மாற்றுவதால் பயனில்லை.
  • எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட சச்சுவின் மனம் இப்போது செயலில் மட்டும் இருந்தது. உற்சாகமாக அவர் வேலையில் கவனம் செலுத்திவந்தார்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories