TNPSC Thervupettagam

செழிக்கட்டும் இந்திய ஜனநாயகம்

November 26 , 2024 51 days 136 0
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம். டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி நடந்துவந்த நிலையில், 1949 நவம்பர் 26 அன்று, அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்துக்கு அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை முழு ஒப்புதல் அளித்தது. இந்த 75 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாதனைகள் அளவில்லாதவை.
  • தேச விடுதலைக்கு முன்பே அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. தேச விடுதலைக்காகப் போராடியவர்களே, அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தனர் என்பதால், இந்தியாவின் ஜனநாயகத்தன்மையைக் காக்கும் வகையில் அதை வலிமையாகக் கட்டமைத்தனர். தேர்தலில் வாக்களிப்பவர்கள், இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி, வேறு எந்த நிபந்தனையையும் விதிக்காத நாடு இந்தியா.
  • பன்மைத்துவம் கொண்ட இந்தியாவில், எல்லாத் தரப்பு மக்களின் விருப்பங்களுக்கும் செவிமடுக்கும் வகையிலேயே அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. சம உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலை எதிர்க்கும் உரிமை, சமயத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, பண்பாடு - கல்வி உரிமை, அரசமைப்பைச் சீர்மைப்படுத்தும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை நமது அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்திருக்கிறது.
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைதான் நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்கள். கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா அடைந்திருக்கும் உயரம், மலைப்பூட்டக்கூடியது. குடிமக்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் அரசுகளுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் வழிகாட்டுதல்களும் நெறிமுறைகளும், ஜனநாயகபூர்வமாக நமது அரசுகள் அவற்றைச் செயல்படுத்திய விதமும் எந்தக் காலத்திலும் தொய்வடைந்ததில்லை.
  • ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் இந்தியர்கள், ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் தமது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஆர்வத்துடன் முன்வருகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் தொடங்கி, எல்லாத் தேர்தல்களிலும் சராசரியாக 60% பேர் வாக்களித்துவிடுகிறார்கள். அதேபோல், என்னதான் தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தத்தமது கொள்கைகளை முன்வைத்துக் கடும் போட்டியில் இறங்கினாலும், தேர்தல் களம் பெரும்பாலும் ஜனநாயகபூர்வமாகவே இருந்திருக்கிறது.
  • ஒருசில வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவில் தேர்தல்கள் மிகவும் அமைதியான முறையில் வெற்றிகரமாகவே நடத்தப்பட்டுவருகின்றன. சில நாடுகளில் அவ்வப்போது வன்முறை மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ சதி என நிகழும் அசம்பாவிதங்கள் இந்தியாவில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெற அரசியல் கட்சிகளும் முழு ஒத்துழைப்பை நல்குகின்றன. இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • வெவ்வேறு வரலாற்றுப் பின்னணி கொண்ட மாநிலங்களின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அவற்றுக்குப் பல சிறப்புரிமைகளையும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வழிமுறைகளையும் அரசமைப்புச் சட்டம் வலுவாகக் கட்டமைத்திருக்கிறது.
  • அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் இந்திய ஜனநாயகத்துக்குச் செழுமை சேர்க்கவும், குடிமக்களின் உரிமைகளையும் அடிப்படைத் தேவைகளையும் பாதுகாக்கவும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. மத்திய அரசு, மாநில அரசுகள் ஆகியவற்றின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முக்கியக் கண்ணியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் வழிவகுத்திருக்கின்றன.
  • நாட்டின் நீதி அமைப்புகளுக்கு அதிகபட்ச அதிகாரத்தையும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அரசு கொண்டுவரும் திட்டங்களைக்கூடச் சாமானிய மக்கள் நினைத்தால் நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்தும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. பொன்னான இந்தத் தருணத்தில், அரசமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையிலான முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய வரலாற்றுத் தருணம் இது!

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories