- கல்விக்கு எப்படி ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் அத்தியாவசியமோ, அதேபோல மருத்துவத்தில் செவிலியர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. செவிலியர்கள் பங்களிப்பின் அடிப்படையில்தான் மருத்துவக் கட்டமைப்பே செயல்படுகிறது எனலாம். மத்திய அரசு ஒவ்வொன்றிலும் 100 இடங்களுடன், 157 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க முடிவெடுத்திருப்பது வரவேற்புக்குரியது.
- மருத்துவப் படிப்புக்கும், மருத்துவக் கல்லூரிகளுக்கும் தரப்படும் முக்கியத்துவம் பெரும்பாலும் செவிலியர், துணை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றுக்குத் தரப்படுவதில்லை. உயர்கல்விக்கு தரப்படும் முக்கியத்துவம், ஆரம்பக் கல்விக்கு தரப்படாமல் இருப்பது போன்ற அதே அணுகுமுறைதான் இங்கேயும் கடைப்பிடிக்கப்படுகிறது. புதிதாகத் தொடங்கப்படும் செவிலியர் கல்லூரிகளும், ஏற்கெனவே செயல்படும் கல்லூரிகளும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய நிலையில் காணப்படும் செவிலியர் பற்றாக்குறையை எதிர்கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி 10,000 பேருக்கு 34.5 செவிலியர்கள் காணப்பட வேண்டும். 2020 கணக்கின்படி, இந்தியாவில் 10,000 பேருக்கு 24.5 செவிலியர்கள்தான் காணப்படுகிறார்கள். உலக சுகாதார நிறுவன அளவுகோலை எட்ட இந்தியாவுக்கு 13.7 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், புதிய செவிலியர் கல்லூரிகள் அந்தக் குறைபாட்டை ஈடுகட்ட உதவக்கூடும்.
- இந்தியாவில் போதுமான செவிலியர்கள் காணப்படாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தேவைக்கேற்ற அளவில் செவிலியர்கள் கிடைப்பதில்லை என்பது மட்டுமே அல்ல காரணம். செவிலியர் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் செவிலியர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதும், அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் போதுமான ஊதியம் இல்லாததும், உறைவிட வசதிகள் போன்றவை முறையாக வழங்கப்படாததும் காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
- தங்களது சொந்த ஊரிலோ, சொந்த மாவட்டத்திலோ, சொந்த மாநிலத்திலோ பணியாற்றும்போது தகுந்த ஊதியம் தரப்படுவதில்லை என்கிற செவிலியர்களின் குறைபாடு நியாயமானது. தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்றால், அதேபோல அவர்களுக்கான திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருப்பதும் மிகப்பெரிய குறைபாடு.
- பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் தங்களுக்கென்று செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஆனால், தேர்ச்சி பெற்ற மாணவிகள் பலர் அந்த மருத்துவமனைகளில் பணியாற்ற முன்வருவதில்லை. அதிக ஊதியம் கிடைக்கும் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளி மருத்துவமனைகளுக்கும் சென்று விடுகிறார்கள்.
- இந்தியாவில் ஒருபுறம் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் அதேவேளையில், உலகிலேயே மிக அதிகமாக வெளிநாடுகளில் பணிபுரியும் செவிலியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் வேடிக்கை. இஸ்ரேலில் பணிபுரியும் செவிலியர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் உண்மை.
- 2020 புள்ளிவிவரப்படி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 61,000 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய ஆறு நாடுகளுக்கு கேரள மாநிலத்திலிருந்து வேலைக்குச் செல்லும் செவிலியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளம், தெற்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் அங்குள்ள மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.
- அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் முன்புபோல அதிக அளவில் செவிலியர்களை பணிக்கு அமர்த்துவது குறைந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு தரப்படும் ஊக்குவிப்பின் காரணமாக செவிலியர்களுக்கு அரசுத் துறை வேலைவாய்ப்பு குறைந்து வருவதால் முன்புபோல போதுமான அளவிலான ஊதியம் கிடைப்பதில்லை.
- தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. சிறிய மருத்துவமனைகளில் ஊதியம் குறைவாக இருப்பதால் செவிலியர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் மருத்துவமனைகளையும், வெளிநாட்டு வாய்ப்புகளையும் நாடுவதில் தவறு காணமுடியவில்லை.
- உலகளாவிய நிலையில் முதல்நிலை மருத்துவத்துக்கு நோயாளிகள் நாடுவது செவிலியர்களைத்தான். அதனால் செவிலியர்கள் மருத்துவம் குறித்த அடிப்படை புரிதல்களுடன் இருப்பது அவசியம். குறிப்பாக, மருத்துவமனை இல்லாத பகுதிகளில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கிராமப்புறங்களில்கூட மருத்துவமனை பிரசவங்கள் நடைமுறையாகிவிட்ட இன்றைய நிலையில், கிராமப்புற செவிலியர்களின் தேவையும் பங்களிப்பும் அதிகரித்திருக்கின்றன.
- செவிலியர் கல்லூரிகளை அதிக அளவில் தொடங்கும்போது, அதில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த செவிலியர்களுக்கான வாய்ப்பு வசதிகள் குறித்த புரிதலை பரவலாக ஏற்படுத்துவது அவசியம். அவர்களுடைய தகுதிக்கும், திறமைக்கும், படிப்புக்குமான வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை வழங்காவிட்டால் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எதிர்பார்த்ததுபோல இருக்காது. வெளிநாடுகளில் இந்திய செவிலியர்களுக்கு வரவேற்பும் வேலைவாய்ப்பும் கிடைப்பதில் மகிழ்ச்சிதான். அதேநேரத்தில், இந்தியாவின் தேவைக்கு போதுமான செவிலியர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை.
நன்றி: தினமணி (04 – 05 – 2023)