TNPSC Thervupettagam

செவிலியர் பல்கலைக்கழகம்: தமிழ்நாட்டின் அடுத்த எதிர்பார்ப்பு

March 27 , 2024 301 days 356 0
  • தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி தேசிய அளவில் கவனம் பெற்றது. மருத்துவக் கல்வியிலும் நமது சாதனைகள் பெருமிதத்துக்குரியவை. நாட்டிலேயே அதிகமாக தமிழ்நாட்டில்தான் 69 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இதன் அடுத்த மைல்கல்லாக, செவிலியர் பல்கலைக்கழகமும் தமிழ்நாட்டில் அமைக்கப்படுமா என்னும் எதிர்பார்ப்பு எழுந் திருக்கிறது.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிகள்படி, 100 கல்லூரிகள் மற்றும் ஆண்டுக்கு 5,000 மாணவர்கள் பட்டம் பெற்றால் பல்கலைக் கழகம் தொடங்கிவிடலாம். அந்த வகையில், செவிலியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே முழுத் தகுதியையும் தமிழ்நாடு பெற்றுவிட்டது. அப்படி ஒரு பல்கலைக்கழகம் அமைவது காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாடும் செவிலியமும்:

  • தமிழ்நாட்டுக்கும் செவிலியர்களுக்குமான பந்தம் மிக ஆழமானது. தென்கிழக்கு ஆசியாவின் முதல் செவிலியர் பள்ளி 1864இல் தமிழ்நாட்டில்தான் தொடங்கப்பட்டது. அதுதான் இன்று சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பிரம்மாண்டமாக நிற்கும் எம்எம்சி செவிலியர் கல்லூரி. இந்தியாவிலேயே முதன் முறையாக செவிலியர் பட்டப் படிப்பு - வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் 1946இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள் மற்றும் மகப்பேறு செவிலியர்களின் எண்ணிக்கை யில் தமிழ்நாடுதான் முதலிடம் (2,87,897); முனைவர் பட்டம் முடித்த செவிலியர்களும் (321) தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். மேலும், இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரியும் செவிலியர்களின் எண்ணிக்கையில் கேரளத்துக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
  • தமிழ்நாட்டில் தற்போது அரசு, தனியார் ஆகிய இரண்டு வகையிலும் 241 செவிலியர் கல்லூரிகள், 193 செவிலியர் பள்ளிகள், 79 செவிலியர் உதவியாளர் பள்ளிகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தமாக 84,000 செவிலிய மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களுக்குப் புதிய படிப்புகள், படிப்புக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளைச் செவிலியர் பல்கலைக்கழகம் ஏற்படுத்திக்கொடுக்கும்.
  • அடுத்து, தமிழ்நாடெங்கும் அரசு, தனியார் மருத்துவ மனைகளில் 1,60,000 செவிலியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கும் உகந்த மேற்படிப்பு களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் செவிலியர் பல்கலைக்கழகம் வழியமைக்கும்.

செவிலியர் பல்கலைக்கழகத்தின் தேவை:

  • உலகெங்கும் செவிலியர் துறையின் வளர்ச்சியைக் கரோனா பெருந்தொற்றுக்கு முன் - பின் என வகைப்படுத்துகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். செவிலியம் என்பது மருத்துவத் துறையில் இருக்கும் ஒரு உதிரிப் பிரிவு என்ற எண்ணம் தற்போது வெகுவாக மாறத் தொடங்கியிருக்கிறது. செவிலியர்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், அதில் நாம் பல படிகள் முன்னால் சென்று 250 பேருக்கு ஒரு மருத்துவரை உருவாக்கியிருக்கிறோம். இதே செவிலியர் களுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் விதிகள், 1,000 பேருக்கு மூன்று செவிலியர்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.
  • ஆனால், தமிழ்நாட்டில் 1,000 பேருக்கு 1.5 என்ற விகிதத்திலேயே செவிலியர்களின் எண்ணிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், சித்தா கல்லூரிகள் ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் செவிலியர் கல்லூரிகளுக்குக் கொடுக்க மறுத்துவருகின்றன. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழு (governing council) தான் தமிழ்நாடெங்கும் செவிலியர் படிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கும் முக்கிய அமைப்பு.
  • ஆனால், இதில் செவிலியர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட எந்தப் பொறுப்பும் இதுவரை வழங்கப்படவில்லை. அக்குழுவின் 14 உறுப்பினர்களில், இரண்டே இரண்டு பேர் மட்டும்தான் செவிலியர்கள். எனவே, செவிலியர்களைக் கலந்தாலோசிக்காமல், அவர்கள் தொடர்பான முடிவுகளை மருத்துவர்களே எடுக்கும் சூழல் நிலவுகிறது. முதியோர் செவிலியர், புற்றுநோயியல் செவிலியர் என வெவ்வேறு பிரிவுகளில் செவிலியர்களுக்கு அதிகமான தேவை இருக்கிறது.
  • எனவே, பிரத்யேகமான செவிலியர் படிப்புகளும் தமிழ்நாட்டுக்கு முக்கியம். பிரசவங்களைக் கவனித்துக்கொள்ளும் முக்கியமான பணியைச் செய்பவர்கள் மகப்பேறு செவிலியர்கள். ஆனால், இந்த மகப்பேறு செவிலியர் நிலையை ஒரு தமிழ்நாட்டு செவிலியர் அடைவது அவ்வளவு எளிதான காரியமாக இப்போது இல்லை.
  • முதலில், பிஎஸ்சி செவிலியர் பட்டப் படிப்பு (4 ஆண்டுகள்) அல்லது செவிலியர் பட்டயப் படிப்பு (3 ஆண்டுகள்), அடுத்து மகப்பேறு மருத்துவத்தில் இரண்டு ஆண்டு அனுபவம் எனக் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளைச் செலவழித்தால்தான், ஒரு செவிலியரால் மகப்பேறு செவிலியராக இயலும்.
  • இதற்கு அஞ்சியே நிறைய செவிலியர்கள் மகப்பேறு செவிலியர் தகுதிபெற முயலாமல் பின்வாங்கிவிடுகிறார்கள். இதன் விளைவாக, இந்தியாவிலேயே மிகக்குறைவாக 46% அளவுக்கு மட்டும் சுகப்பிரசவங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியிருக்கிறது. செவிலியர் பல்கலைக் கழகம் கொண்டுவந்தால், நம்மால் நேரடியாக BSc Midwifery என்ற மூன்று ஆண்டுப் படிப்பைக் கொண்டுவரலாம்.
  • முறையான அங்கீகாரம் இல்லாத செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் உருவாகியிருக்கின்றன. இந்நிறுவனங்கள் ஆறு மாதப் பயிற்சி, ஓராண்டுப் பயிற்சி என செவிலியர் ஆர்வம் கொண்ட மாணவர்களைத் திசைதிருப்பும் போக்கைச் செய்துவருகின்றன.
  • பிஎஸ்சி செவிலியர் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் செவிலியர் பட்டயப் படிப்பை முடித்தவர்களுக்கும், ஒரே மாதிரியான ‘பதிவுசெய்யப்பட்ட செவிலியர்’ என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன.

எங்கு அமைப்பது?

  •  லாலி சீமாட்டி என்கிற பிரிட்டிஷ் பெண்மணி, தமிழ்நாட்டு செவிலியர்களின் மேம்பாட்டுக்காக சென்னை எழும்பூர் அருகே சில ஏக்கர் நிலத்தை, அன்றைய மெட்ராஸ் மாகாண அரசுக்குத் தானமாகக் கொடுத்தார். இந்த இடத்தில் தற்போது அவரது பெயரில் ‘லாலி சீமாட்டி செவிலியர் தங்கும் விடுதி’ அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆனால், லாலி சீமாட்டி போன்ற தியாக உள்ளம் படைத்தவரின் கனவுக்கு ஈடுகொடுக்கும் முன்னெடுப்பாக இது இல்லை என்பதே செவிலியர்களின் கருத்து. எனவே, அவரது கனவுக்கு முறையான மரியாதை செலுத்தும் வகையில், அந்த இடத்தில் செவிலியர் பல்கலைக்கழகம் அமைக்கலாம்.
  • செவிலியர்களுக்கு நலன்களை அளிப்பதில் தமிழ்நாடு முன்னுதாரண மாநிலமாக இருக்கிறது. கூடவே, தமிழ்நாட்டில் புதிதாக ஒரு செவிலியர் பல்கலைக்கழகம் அமைவது தமிழ்நாட்டு மருத்துவத் துறையின் அடுத்தகட்டப் பாய்ச்சலாக அமையும்!

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories