- முன்னாள் பிரதமர்கள் பண்டித ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங்குக்குப் பிறகு தொடர்ந்து 10-வது ஆண்டாக தில்லி செங்கோட்டையிலிருந்து சுதந்திர தின விழா உரையாற்றும் வாய்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் கிடைத்திருக்கிறது. சுமார் 90 நிமிடங்களுக்கும் அதிகமாக நீண்ட அவரது சுதந்திர தின உரை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலுக்கு முந்தைய சுதந்திர தின உரை என்பதால் கூர்ந்து கவனிக்கப் பட்டது.
- மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அடுத்த 100 ஆண்டுகளுக்குகூட அல்ல, 1,000 ஆண்டுகளுக்கான தொலைநோக்குக் கனவுடனும் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆற்றிய சுதந்திர தின உரையில் அரசியலும், கொள்கை சார்ந்த பார்வையும், கனவுகளை விதைக்கும் சாதுரியமும், வாக்குகளுக்கு வலை விரிக்கும் அறிவிப்புகளும் நிறைந்து காணப்பட்டன. வழக்கமான தனது உரைவீச்சு உத்திகளை அவர் அநாயாசமாகக் கையாண்டு முத்திரை பதித்தது வியப்படையத் தோன்றவில்லை.
- நாடாளுமன்றத்தில் தனது அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பிரதமர் ஆற்றிய உரையின் நீட்சியாகத்தான் அவரது சுதந்திர தின உரையைப் பார்க்க முடிந்தது. வழக்கமாக தனது சுதந்திர தின உரையை "சகோதர சகோதரிகளே' என்று தொடங்கும் பிரதமர், "எனது குடும்பத்தின் உறுப்பினர்களே' என்று மாற்றி அமைத்துக் கொண்டதன் பின்னணியில் ஒரு செய்தி இருந்தது. அவர்களில் ஒருவனாக இல்லாமல், குடும்பத் தலைவனாகத் தன்னை தகவமைத்துக் கொள்வதன் மூலம் குறுகிய ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக மக்கள் மன்றத்தை அணுகும் முயற்சியாக அதைப் பார்க்க முடிகிறது.
- தனது அரசின் 10 ஆண்டு ஆட்சியின் சாதனைகளைப் பட்டியல் போட அவர் தவறவில்லை. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து 1947-இல் இந்தியா விடுதலை பெற்றாலும்கூட குறிக்கோள் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், 2014 திருப்புமுனையாக அமைந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மை பலத்துடன் தன்னால் கடந்த 10 ஆண்டுகளாக நிலையான ஆட்சி இந்தியாவில் நிலை நாட்டப் பட்டிருக்கிறது என்கிற அவரது வாதம் வரவிருக்கும் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எதிர்கொள்ள அவர் கையாளும் உத்தி என்பது தெரிந்தது.
- மக்கள்தொகை பகுப்பு, ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவை இந்தியாவின் மூன்று அடிப்படை வலிமைகள் என்று குறிப்பிட்டார். அதேபோல ஊழல், குடும்ப அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகிய மூன்றும் இந்தியாவின் மிகப்பெரிய எதிரிகள் என்றும் குறிப்பிட்டார்.
- ஆயிரம் ஆண்டு அடிமைத்தளையில் இருந்து இந்தியா விடுபட்டு, அடுத்த ஆயிரம் ஆண்டு பொற்காலத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது என்றார் அவர். சுதந்திரத்துக்கு முற்பட்ட 1,000 ஆண்டுகளில் 700 ஆண்டுகள் முகலாயர் உள்ளிட்ட இஸ்லாமிய படையெடுப்பாளர்களும், 300 ஆண்டுகள் ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களும் இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆண்டது என்னவோ உண்மை. அதேநேரத்தில், இந்தியாவை ஒருங்கிணைத்ததிலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்ததிலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை உருவாக்கியதிலும் அந்நியர்களின் பங்களிப்பை அசாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாது.
- பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா கடந்த 60 ஆண்டுகளில் சிந்தித்துக்கூட பார்க்காத வளர்ச்சிகளைக் கண்டது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. "வையத் தலைமை கொள்' என்கிற மகாகவி பாரதியின் கனவை இந்தியா எட்டியிருக்கிறது என்பதைப் பல நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
- அதேநேரத்தில், எல்லாமே சாதித்துவிட்டோம் என்கிற பெருமிதத்தில் நாம் ஆழ்ந்துவிட முடியாது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. உலக வங்கியின் கணிப்பில் இந்தியா இன்னும் குறைந்த, நடுத்தர வருமான நாடாகத்தான் கருதப்படுகிறது. எல்லோருக்கும் பொருளாதார வளர்ச்சியும், வாய்ப்பும், அதிகரித்த வாழ்க்கைத் தரமும் எட்டப்படவில்லை. 2022 கணக்கின்படி வேலைவாய்ப்பில் மகளிரின் பங்களிப்பு 24% மட்டுமே (உலக சராசரி 47%). ஏற்றுமதியில், உலகளாவிய அளவில் 18-வது இடத்தில்தான் இருக்கிறோம். இதுபோல எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.
- பிரதமரின் சுதந்திர தின உரையில், அடுத்த தேர்தலுக்கான மூன்று இலக்குகள் அவரால் நிர்ணயிக்கப் பட்டிருப்பதை உணர முடிகிறது. முதலாவது இலக்கு, தனது அரசின் சாதனைகளை முன்னிறுத்தி செய்யப்படும் ஆக்கபூர்வமான பிரசார உத்தி. பெரும்பாலும் இந்த உத்தி தேர்தல்களில் வெற்றியளித்திருக்கிறது.
- இரண்டாவதாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நடுத்தர வர்க்கம், இளைஞர்கள், மகளிர் உள்ளிட்டோரை முன்னிலைப்படுத்துதல். சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் விஸ்வகர்மா கௌஷல் சம்மான் திட்டம் உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளும் மேலே குறிப்பிட்ட பிரிவினரின் ஆதரவைப் பெற்றுத் தரக் கூடும்.
- மூன்றாவதாக எதிர்க்கட்சியினருக்கு எதிராக பிரதமர் முன்வைத்திருக்கும் ஊழல், கட்சிகளில் குடும்ப ஆதிக்கம், சலுகை அரசியல்.
- "மோடியின் வாக்குறுதி', "மோடியின் போராட்டம்' என்று தனது உரையில் பல இடங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பதிலிருந்து பொதுத்தேர்தலில் பாஜகவின் பிரசாரம் எதிர்பார்ப்பது போலவே பிரதமர் மோடியை முன்னிறுத்துவதாக அமையும் என்பது தெரிகிறது. 2047 குறித்த கனவை விதைத்து, 2024 வெற்றியை வடிவமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிடுவதை சொல்லாமல் சொல்கிறது அவரது 2023 சுதந்திர தின உரை!
நன்றி: தினமணி (17 – 08 – 2023)