TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... இந்தச் சிலைகள் செய்த பாவம் என்ன?

August 11 , 2024 6 hrs 0 min 13 0
  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தாற்போல என்பது இங்கே பொருந்துமா தெரியவில்லை. எந்த நாட்டில் வன்முறை என்றாலும் சரி, ஆட்சிமாற்றக் கலவரம் என்றாலும் தேடிச் சென்று இந்த சிலைகளைத்தான் உடைக்கிறார்கள், அப்படியே நொறுங்கிவிழும் சிலைகளுடன் சேர்ந்து அவர்களுடைய முகங்களும உலகம் முழுவதும் தெரிகின்றன.
  • இந்த வங்கதேசத்தை யார் வேண்டுமானாலும் ஆண்டுவிட்டுப் போகட்டும். ஹசீனா போய் யூனுஸ் வந்தால் என்ன? கலீதா வந்தால் என்ன? ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலை என்ன செய்துவிடப் போகிறது? முஜிபுர் ரஹ்மான் இல்லாமல் வங்கதேசம் உருவாகியிருக்குமா? அல்லது நினைத்துத்தான் பார்த்திருக்க முடியுமா? அரை நூற்றாண்டாகிவிட்டதால் அடையாளங்கூடவா மறந்து போய்விடும்? ஹசீனாவின் அப்பா என்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா?
  • வங்க மண்ணில் அப்போது நடந்ததையெல்லாம் யாராவது இந்தக் கலவரக்காரர்களுக்கு ஒருமுறை ரீவைண்ட் செய்து காட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சிலையை நொறுக்க எங்கிருந்துதான் இந்தப் பொருள்களை – ஏணி, கயறுகள்கூட -  எல்லாம் திரட்டி வந்திருப்பார்களோ? கண் கண்ணாடியை உடைக்கத் தொடங்கி, கழுத்தில் கயறு கட்டி இழுத்துத் தள்ளி... சிலைதான் என்றாலும் முஜிபுர் ரஹ்மான் அங்கங்கள் ஒவ்வொன்றும் நொறுங்கிவிழும்போது மிகவும் வலியாகத்தான் இருக்கிறது, அதுவும் மீண்டும் மீண்டும் காட்டப்படும் அந்தக் காட்சிகள்.
  • அவதிப்பட்டுக் கிடந்த ஒரு நாட்டின் விடுதலைக்குக் காரணமான மனிதரின் மீது அப்படியென்ன காழ்ப்பு? வங்கதேச விடுதலையின்போது, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பேசியதை ஒருமுறை இவர்கள் கேட்டுப் பார்க்க வேண்டும்.
  • வங்கதேசத்தில் மட்டும்தானா சிலையை உடைக்கிறார்கள்? இது ஏதோ ஒட்டுமொத்தமாக மக்கள் மனதில் உறைந்துகிடக்கும் நோய்தான் போல. நினைத்துப் பார்த்தால் எல்லா நாடுகளிலும் உடைத்திருக்கிறார்கள், உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • அஹிம்சையைப் போதித்த புத்தர் என்ன செய்துவிடப் போகிறார்? ஆப்கானிஸ்தானிலும் சீனாவிலும் உடைத்துத் தள்ளினார்கள். புரட்சி செய்து உலகைப் புரட்டி இன்னொரு பக்கத்தைத் திறந்துகாட்டிய லெனின் சிலைகளை, கட்டுகள் தளர்ந்து தாராள அரசுகள் வந்ததும் சோவியத் ஒன்றியம் முழுவதும் குறிவைத்து நொறுக்கினார்கள், இழுத்துக் கீழே தள்ளினார்கள். சீனாவிலேயே மாவோ சிலையைத் தகர்த்தார்கள். சிலைகளை உடைப்பதில்தான் என்னே கூச்சல், என்னே உற்சாகம், என்னே மூர்க்கம்?
  • அடேயப்பா, எங்கேயோ உலகத்துக்குப் போயாச்சு, ஊருக்குள்ள என்ன நிலை? என்றால் கொஞ்சம் வெட்கப்படத்தான் வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளிலேயாவது கலவரங்கள், அரசியல் மாற்றங்களின்போதுதான் இந்த பிரமாண்டமான சிலைகளின் உடைப்புகள் நடக்கின்றன. இங்கேயோ எதற்காகவென்றே தெரியாது, திடீர் திடீரென்று எங்கேயாவது, யாராவது ஆள் உயரச் சிலைகளை மட்டும் அல்ல, சின்னச் சின்ன சிலைகளைக்கூட  உடைத்துவிடுகிறார்கள், மூளியாக்கிவிடுகிறார்கள். அவ்வளவுதான், போராட்டம், வன்முறை, கல்வீச்சு, தீவைப்பு, 144, ஊரடங்கு. எவ்வளவோ பெரிய தலைவர்கள், அவர்களுக்குப் பின்னால் எத்தனையோ வரலாறு. ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏதோவொரு சாதிக்காரர்கள் அவர்களைத் தூக்கிப் பிடிக்கப் போக, மற்றவர்கள் எல்லாம் கடப்பாரை, சுத்தியல் பிடிக்கிறார்கள்.
  • தலைவர்களுடைய கொள்கைகளைத்தான் காப்பாற்றவும் முடியவில்லை, பின்பற்றவும் முடியவில்லை. சிலைகளையாவது காப்போம் என்று நினைத்தோ என்னவோ எல்லா இடங்களிலும் சிலைகளையே சிறைப்படுத்திவிட்டார்கள் (நெல்லையில் இருந்த ஒரு போலீஸ்கார ஆபீஸர் சொன்ன யோசனைப்படிதான் இந்த ஏற்பாடு தொடங்கியது). மனிதர்களாக ஊருக்கு வெளியே எங்கேயோ, யாரோ சிறைவைத்ததற்குப் பதிலாக, இப்போது ஊருக்கு நடுவே, சாலைச் சந்திப்புகளில் கம்பிக் கூண்டுகளுக்குப் பின்னால் தலைவர்கள்! ஒருவேளை இதைப் பார்க்க உயிருடன் எழுந்துவந்தால் நிச்சயமாக இதற்காக எந்தத் தலைவரும் பெருமைப்பட மாட்டார்கள். அது சரி, சுதந்திர நாட்டில் இப்படித் தலைவர்கள் எல்லாம் இங்கே  சிலைகளாகச் சிறை வைக்கப்பட்டிருப்பதற்காக யார் யாரெல்லாம் வெட்கப்பட வேண்டும்?

மூன்றாவது கண் - ஐந்தாவது தூண்!

  • தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டினால் போல என்பார்கள். வங்கதேசத்தில் என்ன நடந்தாலும் நிச்சயமாக இந்தியாவுக்கும் எங்கெங்கோ வலிக்கும், வெளியே சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும். இந்த முறை அப்படியெல்லாம் எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் அதிருப்தி காரணமாகப் பதவி விலகிய பிரதமர் ஷேக் ஹசீனா வேறு இங்கேதான் வந்திருக்கிறார். ‘ஹசீனாவுக்கு உதவினால்... ஒரு நாட்டை ஆதரிப்பது வேறு, கட்சியை ஆதரிப்பது வேறு’ என்றிருக்கிறார் வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர்.
  • வன்முறையில் வங்கதேசம் கொதித்துக்கொண்டிருந்தபோது, புது தில்லியில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட தலைவர்கள் அனைவருமே வந்திருந்தனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மட்டும் வரவில்லை. அன்றைக்கு நாடாளுமன்றக் கூட்டமும் நடைபெற்றது, அங்கேயும் செல்லவில்லை. இத்தனைக்கும் தலைநகர் தில்லியில்தான் இருந்திருக்கிறார். இவருடைய ஆப்சென்ஸ் சமூக ஊடகங்களுக்குத் தப்பவில்லை. வேறு என்ன வேலையோ? (இருந்தாலும், இவற்றுக்கெல்லாம் முன்னதாக வங்கதேச பிரச்சினை பற்றி விவாதித்த அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்).

ஆமாம், நாம எங்கதான் இருக்கிறோம்?

  • ஒரே நாளில் இரண்டு செய்திகள் – உணவு உற்பத்தியில் இந்தியா மிகை நாடாக மாறியிருக்கிறது. பருப்பு, பாலில் எல்லாம் முதலிடம், உணவு தானியம், பழங்கள், காய்கறி, சர்க்கரை, பருத்தி, தேயிலையில் எல்லாம் இரண்டாமிடம் என்றொரு நிகழ்ச்சியில் பெருமிதப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. பத்து கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரே சொடுக்கில் பணம் செலுத்தப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார்.
  • இன்னொரு பக்கம், அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் 25 சதவிகிதத்தை எட்டுவதற்கே இந்தியாவுக்கு 75 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வறிக்கையொன்றில் உலக வங்கி தெரிவித்துள்ளது. அப்படின்னா, அமெரிக்காக்காரங்க லெவலுக்கு நாம உயரனும்னா இன்னமும் 300 ஆண்டுகளாகுமா, என்ன? (1980-களில் கல்லூரி வளாகங்களில் கடவுள் அழுத கதைன்னு ஒன்னு சொல்லுவாங்க, இப்ப யாருக்காவது தெரிந்திருக்குமா, தெரியவில்லை).
  • ஏற்கெனவே, பட்ஜெட், வரி வசூல்னுதான் நாம டாப் கியர்ல கலக்கிக்கொண்டிருக்கிறோமே,  பிறகு எதற்காக 300 ஆண்டுகள்? அப்புறம் என்னன்னா, அடுத்த சில நாள்களிலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.டி.பி.யில் 10 சதவிகிதம் அம்பானி குடும்பத்திடம் (அதுதான், இப்போ கல்யாணம்லாம் நடந்து சூப்பர் ஸ்டார் ரஜினியெல்லாம் டான்ஸாடினாரே) என்று பார்க்லேஸ் வங்கி கூறியிருக்கிறது.
  • ஆமாம், உள்ளபடியே நாம, அதாங்க திருவாளர் பொதுஜனம், எங்கேதான் இருக்கிறோம்? யார் சொல்வது உண்மை? எதற்காகவெல்லாம் பெருமைப்பட வேண்டும்? எதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டும்? முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடற மாதிரி. ம். சுத்தமா புரியல.

100 கிராமும் 3 கிலோவும்

  • இறுதியிலும் பங்கேற்று ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தால்கூட இவ்வளவு புகழ் பெற்றிருக்கமாட்டார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ஆளுக்கொரு ட்வீட் போட்டுவிட்டு எல்லாரும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டிருப்பார்கள். ஒரு நூறு கிராமில் போகத்தைத் தகுதி நீக்கம் செய்யப் போய், விளையாட்டுத் துறைக்குள்ளே இருக்கும் வினையான வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக்கின்றன.
  • ஊரே அல்ல, உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், நடைமுறை வாழ்க்கையிலும் போராட்டக்காரரான வினேஷ் போகத், நாடு திரும்பியதும் என்னென்ன உண்மைகளை எல்லாம் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை. சாதாரணமாக ஒரு குத்துச்சண்டை வீரருக்கு 1.5 கிலோ எடை கூடுமாம், போகத்துக்கு மட்டும் எப்படி 2.5 கிலோவுக்கும் அதிகமானது? கூடவே ஒரு குழு வேறு சென்றிருக்கிறதே? என்ன செய்தார்கள்? என்பதையெல்லாம் விசாரிப்பது ஒருபுறம் இருக்கட்டும். 53 கிலோ எடைப்பிரிவில்தான் சண்டையிடுவேன் என்று தெரிவித்த வினேஷ் போகத்தை, 50 கிலோ பிரிவில் மோதினால் மட்டுமே ஒலிம்பிக் வரலாம், இல்லாவிட்டால் நோ சான்ஸ் என்று வற்புறுத்தி வழிக்குவர வைத்தது யார்? ஏன்? எதற்காக? அங்கேயே தொடங்கிவிடுகிறது அயோக்கிய ஆட்டத்தின் தொடக்கப்புள்ளி. இந்தப் பிரச்சினையில் உண்மையாகவே உண்மையானவர்களால் விசாரிக்கப்பட்டால் ஒருவேளை உண்மை வெளிவர வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும்தான் உண்மை.
  • முடிவு என்னவோ இருக்கட்டும், வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெறுவதில்லை என்பதை நிலைநாட்டி, தகுதி நீக்கம் செய்தாலும் உலகம் முழுவதும் பேசப்படுகிற, நினைக்கப்படுகிறவராக மாறியிருக்கிறார் வினேஷ் போகத்!

குழாயடியில் நெக்ஸ்ட் சீன்!

  • குழாயடிச் சண்டையின்போது வேண்டாதவர்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் வேடிக்கை பார்க்கிறவர்கள், அந்த வழியே சென்றுகொண்டிருப்பவர்கள் எல்லாமும்கூட கடிபடுவதுண்டுதானே.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸைத்தான் நம்ம டான் என்கிற டொனால்ட் டிரம்ப் தூற்றி வாருகிறார் என்று நினைத்தால் அது ரொம்ப ரொம்பத் தப்பு. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சிக்கினவங்க எல்லாரையும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவர்.
  • தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து கிரிமினல்கள், கற்பழிப்பாளர்கள், கேடுகெட்ட கும்பல்களைச் சேர்ந்தவர்கள், அப்புறம் மனநலக் காப்பகங்கள், பைத்தியக்கார விடுதிகளிலிருந்தெல்லாம் மனிதர்கள் அமெரிக்காவுக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று எந்தவித ஆதாரமுமின்றிப் பொத்தாம்பொதுவாக அடித்துவிட்டார் கொஞ்ச நாள்களுக்கு முன்னர்.
  • சில நாள்கள் முன் செய்தியாளர்களுடன் பேசும்போது மறுபடியும் அதையே கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிப் பேசியிருக்கிறார் டிரம்ப்.
  • அமெரிக்காவை நாசமாக்குவதற்காக உலகம் முழுவதிலுமுள்ள சிறைகள், மனநோயாளிகள் விடுதிகள் எல்லாம் ‘காலி செய்யப்பட்டு’ அங்கிருப்பவர்கள் எல்லாரும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். திட்டமிட்டுதான் உலகம் இதைச் செய்துகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் நான் மட்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நாடே நாசமாகப் போய்விடும்; கண்டிப்பாக மூன்றாவது உலகப் போரும் வந்துவிடும். தன்னால மட்டும்தான் இவற்றையெல்லாம் தடுத்துநிறுத்த முடியும் என்று நோஸ்ட்ரடாமஸ் ரேஞ்சில் முன்னறிவித்திருக்கிறார்.
  • டிரம்ப் பேச்சை எல்லாம் அமெரிக்கர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், தேர்தலில் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. போகிற போக்கில் நாமெல்லாம் ரொம்ப ரொம்ப டீசன்ட்னு காலரைத் தூக்கிவிட்டுக்கலாம் போல.

சூப்பர் தலைவர் யாருன்னு கேட்டா?

  • ஊஹூம், அதெல்லாம் முடியாது.
  • மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள தம்மாத்தூண்டு நாடு செனகல். அதன் அதிபராக இருப்பவர் Bassirou Diomaye Faye – சரியான உச்சரிப்பு என்னவென்று தெரியவில்லை. இருக்கிற ஆங்கில எழுத்துகளைக் கூட்டிப் படித்தால் பாஸிரோ டயோமாயே ஃபாயே எனலாம். ஆனால், அப்படியில்லை போல. உச்சரிப்புகளைத் தெரிவிக்கும் ஃபோர்வோ இணையதளமோ கிட்டத்தட்ட ‘பஸிஹூஜ் ஸமாஜ்ஸே’ என்பதைப் போல உச்சரிக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது? அவர் சொன்ன விஷயம்தான் கடந்த வார ஹைலைட்களில் ஒன்று!
  • “உங்கள் அலுவலகங்களில் என்னுடைய புகைப்படம் இடம் பெறுவதை உள்ளபடியே நான் விரும்பவில்லை. ஏனெனில், நான் கடவுளும் அல்ல, புனித சின்னமும் அல்ல, இந்த நாட்டுக்காக உழைக்கும் வேலையாள்களில் ஒருவன், அவ்வளவே, பதிலாக, உங்கள் குழந்தைகளின் படங்களை வையுங்கள், எப்போதெல்லாம் முடிவெடுக்கப் போகிறீர்களோ அப்போது அவர்களைப் பாருங்கள்”.
  • இதைப் படித்தவுடனேயே யார் யாரெல்லாம் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள்? ஏதாவது போட்டி வைத்தால் வேண்டுமானால் அதிக வாக்குகளைப் பெறுபவரை அறிந்துகொள்ளலாம்!

நன்றி: அருஞ்சொல் (11 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories