TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?

December 15 , 2024 23 days 73 0

சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?

  • காக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற நல்லிணக்கத்தைக் காக்கக் கூடிய திசை நோக்கியதொரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
  • மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக விசாரணை நீதிமன்றங்கள் எந்தவொரு ஆணையையும் பிறப்பிக்கக் கூடாது;  மசூதி – கோவில் சர்ச்சை தொடர்பான புதிய வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்கக் கூடாதெனக் குறிப்பிட்டிருக்கிறது.
  • நிலுவையிலுள்ள வாராணசி ஞானவாபி மசூதி – காசி விசுவநாதர் கோவில், மதுராவிலுள்ள ஷாஹி ஈத்கா – கிருஷ்ண ஜன்மபூமி தகராறு தொடர்பான முடிவுகளையும் நிறுத்திவைத்துள்ளது.
  • அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக ஹிந்து அமைப்புகளால் இயக்கம் நடத்தப்பட்ட  காலகட்டத்தில், எதிர்காலத்தில் (அண்மையில் சம்பலில் ஜமா மசூதி தொடர்பாக நடைபெற்றதைப் போன்ற மோதல்கள் எதுவும் வந்துவிடக் கூடாதெனக் கருதி) காங்கிரஸ் அரசால் – வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு வழிவகைகள்) – 1991 சட்டம் இயற்றப்பட்டது.
  • இந்தச் சட்டம், ராமஜன்ம பூமி - பாபர் மசூதி தவிர்த்து, நாடு முழுவதுமுள்ள வழிபாட்டுத் தலங்கள் யாவும் நாடு விடுதலை பெற்ற நாளில், 1947, ஆகஸ்ட் 15-ல்,  என்ன நிலையில் (கோவிலாகவோ, மசூதியாகவோ, விகாரையாகவோ, தேவாலயமாகவே) இருந்ததோ அவ்வாறே தொடர வேண்டும்; பிறிதொன்றாக மாற்றப்படக் கூடாது என விதித்தது.
  • இந்த சட்டத்தை எதிர்த்து, சில பிரிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி சில ஹிந்து அமைப்புகளும் சுப்ரமணியன் சுவாமியும், இந்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகளும் வழக்குத் தொடுத்திருந்தன.
  • இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விசுவநாதன் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வுதான் சர்ச்சைக்குரிய இந்தப் பிரச்சினைகள் தொடர்பான எல்லா வழக்குகளையும் நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
  • உச்ச நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை  நாட்டிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் வழிபாட்டுத் தல சர்ச்சைகளில் நிலுவையிலுள்ள வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளையோ இறுதித் தீர்ப்புகளையோ பிறப்பிக்கக் கூடாது. இதுபற்றி மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும்  தொடர்ந்து, அடுத்த 4 வாரங்களில் எதிர்மனுதாரர்கள் கருத்தைப் பதிவு செய்யவும்  வேண்டும் என்று அமர்வு குறிப்பிட்டுள்ளது.
  • இதனிடையே, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள 2025 பிப்ரவரி 17 ஆம் தேதி வரையிலும் இந்தப் பகுதிகளில் (நாடு முழுவதும் மொத்தம் 11 இடங்களில்) ஆய்வுகள் எதுவும் கூடாதெனவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.
  • அயோத்தியில் ஸ்ரீ ராமர் அவதரித்ததாக நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி இடித்து அகற்றப்பட்டது. இந்த இடத்தில் பிரமாண்டமாக பால ராமருக்குக் கோவில் கட்டப்பட்டு இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கக் கோலாகலமாகத் திறப்பு விழாவும் நடைபெற்றது.
  • தற்போது, சர்ச்சைக்குரிய தலங்கள் வரிசையில் வாராணசியில் விசுவநாதர்  கோவில் – ஞானவாபி மசூதி, மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்ததாகக் கூறப்படும் கிருஷ்ண ஜன்மஸ்தான் – ஷாஹி ஈத்கா மசூதி, சம்பலில் ஷாஹி ஜமா மசூதி – ஹரிஹர ஆலயம், தில்லியில் கவாத் – உல் – இஸ்லாம் மசூதி – ரிஷப தீர்த்தங்கரர் ஆலயம், மத்தியப் பிரதேசம் தார்-ரிலுள்ள கமால் மௌலா மசூதி – போஜசாலை கோவில், அஜ்மிர் ஷரீஃப் தர்கா – சங்கடமோட்ச மகாதேவர் கோவில், உத்தரப் பிரதேசத்தில் புதாவுனிலுள்ள ஷாஹி ஜமா மசூதி... பட்டியல் தொடரலாம்.
  • எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடைபெறக் கூடும், சிக்கல்கள் எழக் கூடும் என்ற நோக்கில்தான் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு வழிவகைகள்) – 1991 சட்டமே இயற்றப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை பாரதிய ஜனதா கட்சி, சிவசேனை தவிர அனைத்துக் கட்சிகளுமே ஆதரித்தன.
  • பின்னால் அயோத்தியில் சர்ச்சைக்குரிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கட்டுமானம் இடிக்கப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அயோத்தி பற்றிய தீர்ப்பும் (நீதிபதிகளில் ஒருவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டும் இருந்த இந்த அமர்வின் தீர்ப்பு பற்றியும் நிறையவே விவாதிக்கப்பட்டுவிட்டது) அடுத்தடுத்த காலகட்டங்களில் அயோத்தியில் ஸ்ரீ பால ராமருக்குக் கோவில் கட்டித் திறக்கப்பட்டதும் வரலாறு.
  • நாட்டின் வெவ்வேறு இடங்களில் இப்போது புதிது புதிதாகத் தலங்களைச் சர்ச்சைக்குரியதாக்கி வழிபாடு செய்வது, அளவெடுப்பது, ஆய்வு செய்வது போன்றவையெல்லாம் மறுபடியும் தொடங்கியிருக்கின்றன.
  • இந்தப் பூதம் எப்போது, எப்படி, எங்கிருந்து கிளம்பியது அல்லது ஊக்குவிக்கப்பட்டது?
  • வாராணசியில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவில் அருகேயுள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் ஹிந்துக் கடவுள்களின் சிலைகள்  இருப்பதாகவும் அவற்றுக்குத் தினமும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளூர் சிவில் நீதிமன்றத்தில் பக்தர்கள் சிலர் வழக்குத் தொடுத்திருந்தனர்.
  • இந்த மனுவை விசாரித்த வாராணசி சிவில் நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டதுடன், இதற்கெனத் தனி ஆணையத்தையும் நியமித்தது.
  • இந்த நிலையில், மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்புத் தெரிவித்து மசூதியின் நிர்வாகக் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மனுவின் மீதான விசாரணையின்போது 2022, மே 17 ஆம் ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவொன்றில், ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
  • தொடர்ந்து, 20 ஆம் தேதி நடந்த விசாரணையின் முடிவில், இந்த வழக்கு விசாரணையை சிவில் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்துவந்த சிவில் நீதிமன்ற நீதிபதி மீது எந்தப் புகாரோ, குறையோ இல்லை. எனினும், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, நீதித்துறையில் 25 -30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுவதால் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும்  தெரிவித்தது.
  • உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவைப் பிறப்பித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் (முன்னாள் தலைமை நீதிபதியேதான்), சூர்யகாந்த், பி.எஸ். நரசிம்மா.
  • வழக்கு விசாரணையின்போது, அயோத்தி பிரச்சினைக்குப் பிறகு, புதிதாக எந்தவொரு  வழிபாட்டுத் தலத்தைப் பற்றியும் சர்ச்சை எழுப்புவதை, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் - 1991 தடை செய்வதாக ஞானவாபி மசூதி தரப்பினர் வாதிட்டனர்.
  • இந்த வாதத்தை ஏற்காமல் (கிட்டத்தட்ட இந்த சட்டத்தின் நோக்கமே சிதையக் கூடிய வகையில்), ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்தின் மத அடிப்படையை, சார்ந்த விஷயங்களைப் பற்றி உறுதி செய்துகொள்வதை (அதாவது, அளவிடுவது, ஆய்வு செய்வது போன்றவற்றை), வழிபாட்டுத் தலங்கள் சட்டம் - 1991 தடுக்கவில்லை என்றொரு கருத்தை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
  • ஆக, பூதம் புறப்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் நாட்டில் எங்கே வேண்டுமானாலும் ஒரு வழக்குத் தொடுத்தால் எந்தவொரு வழிபாட்டுத் தலத்திலும் அளவெடுக்கலாம்; ஆய்வும் செய்யலாம் என்றாகிவிட்டது. இப்போது ஒவ்வொன்றாகப் பிரச்சினைகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
  • [சர்ச்சைக்குரியதாகிவிட்ட இந்தக் கருத்து பற்றி அண்மையில் ஒரு விவாதத்தில்  கேட்டபோது, நீதிமன்ற விவாதத்தின்போது பேசப்பட்டதன் ஒரு பகுதிதான் இது; இறுதித் தீர்ப்பு அல்ல என்று தெரிவித்தார் ஓய்வுபெற்றுவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். தீர்ப்பில் அச்சிடப்பட்டிருப்பவை அல்லாமல் நீதிமன்றம் தெரிவித்திருப்பதெல்லாம் அந்தக் கணத்திற்கான கருத்துதான் (அப்சர்வேஷன்தான்). அதை முன்னுதாரணமாகக் காட்ட முடியாது. எதிர்கால விசாரணைகளிலும் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்].
  • உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் நீதித்துறை சார்ந்தவர்கள் உள்பட பலரும் நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்தை நினைவுகூர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
  • நீதிபதி சந்திரசூட் சொன்னதைப் போல, 1991 ஆம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பாக,  இத்தகைய இடங்களில் ஆய்வுகளும் மீட்டெடுப்புகளும் அனுமதிக்கப்படும்பட்சத்தில் இப்போதைக்கு இந்தப் பட்டியல் நிற்கவே நிற்காது; இன்னமும் நீண்டுகொண்டேதான் செல்லும்.
  • ஏனென்றால் யுகங்களைப் பற்றியெல்லாம் பேசுகிற, எண்ணற்ற நூற்றாண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில் எத்தனையோ அரசுகள் இருந்திருக்கின்றன, எத்தனையோ ஆட்சிகள் நடந்திருக்கின்றன. எத்தனையோ மன்னர்கள் இருந்திருக்கிறார்கள், எத்தனையோ மதங்கள் (அதிகாரத்திலும்) இருந்திருக்கின்றன, எத்தனையோ இறைவழிகள் இருந்திருக்கின்றன, மதங்களும் வழிபடுநெறிகளும் வாழ்க்கை முறைகளும் எங்கிருந்தெல்லாமோ இங்கே வந்திருக்கின்றன, இங்கிருந்து எங்கெல்லாமோ சென்றிருக்கின்றன...
  • நம் நாட்டில் இவ்வாறு நிறைய தலங்கள் இருக்கத்தான் செய்யும். அவரவர் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவரவர் தொடர்புடைய மதங்களோ, வழிகளோ உயர்நிலையில் வைக்கப்பட்டுதான் இருந்திருக்கும். எதை வேண்டுமானாலும் தகர்த்து, எது வேண்டுமானாலும் கட்டப்பட்டிருக்கலாம்.
  • கோவிலுக்குள் மசூதிகள் இருக்கலாம், மசூதிக்குள் கோவில்கள் இருக்கலாம், இதேபோல விகாரைகளும் இருக்கலாம், தேவாலயங்களும் இருக்கலாம், சமணப் பள்ளிகளும் இருக்கலாம், கோவில்களேகூட சைவத்திலிருந்து வைணவத்துக்கு, வைணவத்திலிருந்து சைவத்துக்கு மாற்றப்பட்டு இருக்கலாம்; இருக்கலாம், இருந்துகொண்டுதானிருக்கின்றன (தமிழ்நாட்டிலேயே நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன).
  • இவ்வாறு எழக்கூடிய ஒவ்வொன்றுக்காகவும் வழக்குத் தொடுத்து, ஒவ்வொன்றுக்காகவும் ஆய்வுகளை நடத்தி, ஒவ்வொன்றுக்காகவும் மேல் முறையீடு செய்து, ஒவ்வொன்றுக்காகவும் கலவரங்களை நடத்தி, ஒவ்வொன்றையும் இடித்துத் தள்ளிக்கொண்டிருக்க முடியுமா?
  • இன்னமும் பட்டினி என்ற சொல் புழங்கிக்கொண்டிருக்கிற இந்தியா போன்ற ஒரு நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளும் இவற்றையொட்டிய பரபரப்பும் பதற்றமும் அவசியந்தானா? ஆகப் போவதென்ன? புரியவில்லை.
  • இத்தனை மாநிலங்கள், இத்தனை வேறுபாடுகள், தகராறுகள், இத்தனை இனங்கள், மதங்கள், இத்தனை சாதிகள், இத்தனை மொழிகள் பேசுகிற மக்கள் இருக்கிற ஒரு நாட்டில் ஒட்டுமொத்தமாகப் பார்க்க இப்போதும் அமைதியாகவும் இணக்கமாகவும் உலகளவில் வலுவாகவும் இருக்கும் இன்றைய சூழ்நிலை முற்றிலுமாகக் குலைந்துபோய்விடக் கூடிய பேராபத்து காத்திருக்கிறது.
  • நாட்டில் கவனிக்க, தீர்க்க எவ்வளவோ பிரச்சினைகள். குடிக்கிற தண்ணீரும் சுவாசிக்கிற காற்றும் தவிர வாங்குகிற பொருள்களுக்கெல்லாம் சுற்றிவளைத்து வரும் வரிகள். வறுமை, வேலையின்மை, எல்லாருக்கும் எட்டாத உயர் கல்வி, அனைவருக்கும் சிக்காத மருத்துவம் என எவ்வளவோ. இருக்கவே இருக்கின்றன இயற்கைச் சீற்றங்கள்.
  • வல்லரசாகப் போவதாக, உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாகவிருப்பதாகப் பெருமைப்படுகிற நிலையில் - ஆனால், இன்னமும் கணிசமான ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்வைக் கழிப்பதற்கே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் - மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கிற – வளர்ச்சியைப் பாதித்துப் பின்னிழுக்கிற - சற்றும் தேவைப்படாத இத்தகைய பிரச்சினைகள் தேவையா?
  • இத்தகைய சூழ்நிலையில்தான் சில நாள்கள் முன், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குகளின் மீது முக்கியமான இந்த முடிவை  எடுத்திருப்பதுடன், எல்லாவற்றையும் அப்படியே நிறுத்திவைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
  • நாட்டில் எதிர்காலத்தில் மதத்தின் பேரால், வழிபாட்டுத் தலங்களின் பேரால் எவ்வித வகுப்புக் கலவரங்களும் நேரிட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் நாடு விடுதலை பெற்றபோது இருந்த நிலைமையிலிருந்து மாற்றுவதை இந்தச் சட்டம் தடுக்கிறது. இந்தச் சட்டத்தின் தேவையை மிக விரிவாகவே அயோத்தி பற்றிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சிலாகித்திருக்கிறது. இந்தியாவின் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சட்டப்படியான கருவி இந்தச் சட்டம் என்றும் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டிருக்கிறது.
  • இனியும் இதுபோன்ற மதங்களின் அடிப்படையிலான – வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளும் மோதல்களும் பதற்றங்களும் தோன்றாதிருக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.
  • காலச் சக்கரம் ஒருபோதும் பின்னோக்கிச் சுழலுவதில்லை; சுழலுவது நல்லதும் அல்ல.

நன்றி: தினமணி (15 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories