TNPSC Thervupettagam

சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

November 10 , 2024 67 days 84 0

சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

  • 1967 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கவும், அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்தது (அதோடு சரி, இன்று வரை காங்கிரஸால் தலையெடுக்க முடியவில்லை!). தோற்றுப்போனபோது மாநிலத்தில் முதல்வராக இருந்த காங்கிரஸ் தலைவரான  எம். பக்தவத்சலம், காங்கிரஸ் தோற்றது ஏன்? என்றொரு நூலை எழுதியிருந்தாராம். ஒரு சந்திப்பின்போது, இந்த நூலைப் படித்தீர்களா? என்று யாரோ ஒரு நண்பர் கேட்கவும் எழுத்தாளர் ஜெயகாந்தனோ, அதுதான் அட்டையிலேயே போட்டு விட்டார்களே! உள்ளே போய் எதற்குப் படிக்க வேண்டும்? என்று பதில் சொல்லியிருக்கிறார். எல்லாரும் புரியாமல் பார்க்க, அதுதாங்க, ‘காங்கிரஸ் தோற்றது ஏன்? – எம். பக்தவத்சலம்’, அவ்வளவுதானே என்றாராம். மறைந்த பாசனப் பொறியியல் வல்லுநரும் ஜெயகாந்தனின் நண்பருமான மறைந்த முனைவர் பழ. கோமதிநாயகம் சொன்ன தகவல் இது. கடைசி சில ஆண்டுகால பக்தவத்சலத்தின் ஆட்சிமுறைதான் தோல்விக்குக் காரணம் என்றே அப்போது கருதப்பட்டிருக்கிறது (திமுகவின் வெற்றி பற்றிக் கேட்டபோது, விஷக் கிருமி பரவிவிட்டதாகச் சொன்ன பக்தவத்சலத்தின் கருத்தும்கூட பின்னர் மிகவும் பிரசித்தம்!).
  • இதற்கும் அமெரிக்காவுக்கும் இப்போது என்ன தொடர்பு? சிம்ப்பிள். அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கும் கமலா ஹாரிஸின் தோல்விக்கும் முக்கியமான காரணம் சுருக்கமாகச் சொன்னால் - ஜோ பைடன்! (கூடவே, குணாவின் மானே, தேனே மாதிரி இனம், நிறம் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்).
  • ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸைப் பொருத்தவரை முதலில் நேரிட்ட ஒரு கோணல், முற்றும் வரையும் தொடர்ந்துவிட்டது. ஏனெனில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தற்போதைய அதிபர் ஜோ பைடன்தான். உள்ளபடியே அந்த இடத்துக்கான - போட்டிக்கான தயாரிப்பிலேயே இல்லை கமலா ஹாரிஸ். வேட்பாளராகவெல்லாம் பைடன் அறிவிக்கப்பட்டு, முதல் விவாதத்தில் டிரம்ப்பிடம் திணறியபோதுதான், களத்துக்குள் கமலா ஹாரிஸைக் கொண்டுவர நேரிட்டது. அதுவரையிலும் ஜோ பைடனைத்தான் எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள். இடையில்தான் வேறு வழியின்றிக் கைமாற்றி விட்டார் பைடன். ஒட்டுமொத்தமாக ஜோ பைடனின் பலவீனங்களையும் சுமைகளையும் அவருடைய ஆட்சிக்காலத் தவறுகளையும் சேர்த்தே கமலா ஹாரிஸ் சுமக்க நேர்ந்துவிட்டது (கால்களில் கட்டைகளைக் கட்டிக்கொண்டு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாதிரிதான்!).
  • கடந்த ஆட்சிக்காலத்தில் அமெரிக்க மாகாணங்கள் முழுவதும் பண வீக்கம் அதிகரித்துச் சென்ற வேகத்துக்கு மக்களுக்கான ஊதியங்கள் உயரவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்க அமெரிக்கா வளர்ச்சி பெற்றிருப்பதாகப்  புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டாலும் அதை மக்கள் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், பெரும்பாலான சாதாரண அமெரிக்கர்கள் நாட்டின் நிலைமையை மோசமாகவே கருதினர். நாடு மிக மோசமான திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவுமே சுமார் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் கருதினர் (இது ஓரளவு உண்மையுங்கூட, ஏனென்றால், அமெரிக்கா மட்டுமல்ல, மேலும் பல மேலை நாடுகள் பொருளாதார ரீதியாகத் திணறிக் கொண்டிருக்கின்றன; பிரிட்டனின் நிலைமை எல்லாம் படுபயங்கரம்!). இந்தச் சூழலில்தான் வரிச் சலுகைகள், நாட்டை விட்டு வெளியேறிய தொழிற்சாலைகளை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டுவருதல் போன்ற டிரம்ப்பின் வாக்குறுதிகள் சிறப்பாகச் செயல்பட்டன. அல்லாமல், செய்வாரோ மாட்டாரோ, வரிக் குறைப்பு போன்ற அறிவிப்புகளைப் பணக்கார வாக்காளர்கள் பெரிதும் வரவேற்றனர்.
  • 2020 தேர்தலைவிடவும் 2024 அதிபர் தேர்தலில் புலம் பெயர்ந்தோர் பிரச்சினை ஐந்து மடங்கு கூடுதலாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏதோ குடியேறி வந்திருப்போர் எல்லாருமாக அமெரிக்காவையே விழுங்கிவிடப் போகிறார்கள் என்கிற அளவுக்கு இந்தப் பிரச்சினை டிரம்ப் ஆதரவாளர்களால் ஊதிப் பெருக்கப்பட்டது.
  • இதிலென்ன கொடுமை என்னவென்றால், இந்தத் தேர்தலில் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்களிலேயே 54 சதவிகிதத்தினர் டிரம்ப்பை ஆதரித்து வாக்களித்திருப்பதுதான் (2020-ல் இது வெறும் 36 சதவிகிதமாக இருந்தது). இதற்கான வினோதமான காரணம் என்னவென்றால், ‘நாம் வந்துவிட்டோம்தானே, இனிமேலும் அங்கிருந்து நம்மவர்கள் யாரும் வர வேண்டாம். டிரம்ப் வந்தால்தான் அவர்களைத் தடுத்து நிறுத்துவார்’ என்று இவர்கள் நம்புவதுதான்! ஏனென்றால், புலம் பெயர்ந்து வருவோருக்கும் குடியேறியோருக்கும் எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் டொனால்ட் டிரம்ப், சட்ட விரோதமாகக் குடியேறியோரை மொத்தமாக நாட்டை விட்டு வெளியேற்றப் போவதாகவும் கூறிவருகிறார். அனேகமாக அவ்வாறே செய்தும்விடுவார் என்ற அச்சம் இப்போது எல்லாரிடமும் காணத் தொடங்கியிருக்கிறது.
  • பெண்களின் வாக்குகளில் கணிசமானவற்றை இழந்த டிரம்ப், ஆண்களின் வாக்குகளில் அதே அளவுக்குக் கூடுதலாகப் பெற்றிருக்கிறார், இவற்றுக்கெல்லாமே அவருடைய ஆணாதிக்கப் பேச்சுகள்தான் காரணம். எதிர்த்துப் போட்டியிட்டவரும் பெண்ணான கமலா  ஹாரிஸ் என்றாகிவிட்டதால் டிரம்ப்பின் எரிகிற ஆணாதிக்க மனோபாவத்துக்கு எண்ணெய் ஊற்றியதைப் போலாகிவிட, அமெரிக்காவின் கணிசமான ஆண்களும் அதே பாதையைப் பின்பற்றி, ‘டிரம்ப்புக்கு வாக்களிப்பதன் மூலம்’ தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்கின்றனர் (எல்லாம் ஒரு ஈகோதான்!).
  • அமெரிக்காவில் பெண்களைப் பாதிக்கும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள கருக்கலைப்பு உரிமை விஷயம், நினைத்த அளவுக்கு இந்தத் தேர்தலில் (கமலா ஹாரிஸ் குழுவினர் எதிர்பார்த்த அளவுக்கு) தீர்மானிக்கும் காரணியாகச் செயல்படவில்லை என்று சிஎன்என் ஆய்வொன்று தெரிவிக்கிறது.
  • ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் பெண்களுக்கு இருந்த கருக்கலைப்பு உரிமையைச் சில மாதங்களுக்கு முன் ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுபற்றி அந்தந்த மாகாணங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துவிட, தற்போது ஒவ்வொரு மாகாணத்திலும் பெண்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
  • தான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கருக்கலைப்பு உரிமை வழங்கப்படும் என்று கமலா ஹாரிஸ் வாக்குறுதியளிக்க, நோ நோவென நேரெதிராக நின்றார் டொனால்ட் டிரம்ப். டிரம்பின் வெற்றிக்குப் பின்னால் இனி என்ன நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை. பாவம், அமெரிக்கப் பெண்கள்.
  • இந்தத் தேர்தலில் திடீரென ஜோ பைடனுக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி  வேட்பாளராக கமலா ஹாரிஸ் எப்போது அறிவிக்கப்பட்டாரோ அன்று முதலே கறுப்பர்கள், கலப்பு இனத்தினர், வெளிநாட்டினர், குடியேறியோர் என மக்களைப்  பிளவுபடுத்தும் இன வெறுப்புப் பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப்பும் அவருடைய ஆதரவாளர்களும் தொடங்கிவிட்டார்கள் என்றால் மிகையில்லை.
  • இதன் மூலம் வெள்ளையின வாக்குகள் - ஒட்டுமொத்தமாக வலதுசாரி வாக்குகள் டிரம்ப்பை நோக்கி நகர்ந்துவிட்டன. மேலும், பழைமைவாதம், கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாடு போன்றவற்றால் கிறிஸ்துவர்களின் வாக்குகளும் குறிப்பாக இவாஞ்செலிகள் பிரிவு கிறிஸ்துவர்கள் வாக்குகளும் டிரம்ப்புக்கு ஆதரவாக மாறிவிட்டன.
  • வெள்ளையினத்தின், கிறிஸ்துவத்தின் செல்வாக்கு மிகுந்த நாடாகத்தான் அமெரிக்கா திகழ வேண்டும் என்ற மனநிலை கொண்டோர் ஒட்டுமொத்தமாக டிரம்ப்பைத் தாங்கிப் பிடிக்க, இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் கமலா ஹாரிஸ் தரப்பினர் தோற்றுப் போய்விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள்  கருதுகின்றனர். சிக்கலான இந்தப் பிரச்சினையில் ஜனநாயகக் கட்சியினருக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் மிகச் சரியாகத் தனக்கு சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டுவிட்டார் டிரம்ப்.
  • தவிர, ஏற்கெனவே அதிபராக இருந்த கறுப்பினத்தவரான ஒபாமாவைப் போன்ற உந்துசக்தியுமல்லர் கமலா ஹாரிஸ். இவருக்கென தனிப்பட்ட முறையிலான ரசிகர் கூட்டமோ, ஆதரவாளர்கள் திரளோ இல்லை எனலாம். ஆனால், எதிர்த்தரப்பில் என்னதான், எவ்வளவுதான் உளறிக்கொட்டிக்கொண்டிருந்தாலும் டிரம்ப் ஆதரவாளர்கள் எப்போதும்போல அவரைத்தான் வலுவாக ஆதரித்துக்கொண்டிருந்தார்கள், கலையவே இல்லை. எவ்வளவு பெரிய பலம்!
  • சிறப்பாகவே கமலா ஹாரிஸ் பேசியபோதிலும்கூட, பொதுவான வாக்காளர்களிடையே, டிரம்ப் போல பரபரப்பையும் அதிர்ச்சிகளையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை அவருடைய பேச்சுகள். இயன்றவரையிலும் மிகவும் நாகரிகமான முறையிலேயே தனது பிரசாரத்தை கமலா ஹாரிஸும் ஜனநாயகக் கட்சியினரும் கொண்டுசென்றனர். அவரை ஆதரித்து நின்ற, பிரசாரம் செய்த பெரும்புள்ளிகளும்கூட நாகரிகமாகவே நடந்துகொண்டனர்.
  • ஆனால், தரை லெவலுக்கு இறங்கிவந்து பிரசாரம் செய்தார் டிரம்ப். பூனைக் கறி தின்கிறார்கள், கமலா ஆட்சிக்கு வந்தால் வளர்ப்புப் பிராணிகளையெல்லாம் இவர்கள் சாப்பிட்டுவிடுவார்கள் என்பதெல்லாம் என்ன லெவல்? இதனிடையே, டிரம்ப்பின் இணைபிரியா நண்பராகக் காட்டிக்கொண்டு, அவரை ஆதரித்து முழுவீச்சில் பிரசாரமும் செய்த எக்ஸ் (பழைய டிவிட்டர்) தளத்தின் உரிமையாளரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கோ, சொல்லத் தரமற்ற அளவுக்கு இறங்கிச் சென்று பல அவதூறான கருத்துகளைப் பகிர்ந்து – பரப்பிக் கொண்டிருந்தார்.
  • டொனால்ட் டிரம்ப் வகையறாவின் ‘ஒரு பொம்பளயால எப்படிங்க அமெரிக்கா மாதிரி ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியும்?’  என்ற ஆணாதிக்க - பாலின வெறுப்புப் பிரசாரங்கள் உச்சம் தொட்டன. தொடக்கத்தில் நிலையாகவும் வலுவாகவும் இருந்த கமலா ஹாரிஸின் ஆதரவு தளங்கள் எல்லாம் இத்தகைய பிரசாரங்களால் தேர்தல் நெருங்க நெருங்க கலகலக்கத் தொடங்கிவிட்டன.
  • இன்னமும் சொல்லப் போனால், உலகின் நம்பர் ஒன் நாடெனக் கூறப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில், ஒரு பெண்ணால் ஆட்சி நடத்த முடியும் என்று பெரும்பாலான மக்கள் நம்பவே மறுத்துவிட்டிருக்கின்றனர் (நம்ம மக்கள் எல்லாம் எங்கேயோ இருக்கிறார்கள், 1966-லேயே இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்; தோற்ற பிறகும் மீண்டும் வெற்றி பெற்றார்). 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் இதே டிரம்ப்பிடம்தான் ஹிலாரி கிளின்டன் என்ற பெண்மணியும் தோற்றுப் போனார், இத்தனைக்கும் அவர் வெள்ளையினத்தவர்தான். இந்தத் தேர்தலில் தோல்விக்கு கமலா ஹாரிஸின் நிறமும் இனமும் சேர்ந்துகொண்டுவிட்டன.
  • அதிபராக பொறுப்பேற்ற பிறகுதான் தேர்தல் பிரசார காலத்தில் டொனால்ட் டிரம்ப்  வெளியிட்ட அதிரடி – சரவெடி அறிவிப்புகளில் என்னென்னவெல்லாம் நடைமுறைக்கு வரப்போகின்றன என்பது தெரிய வரும் (கூடவே யார் யாருக்கெல்லாம் ஆப்புகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்பதுவும்).
  • தாய், தந்தை இருவருக்குமே குடியுரிமை இல்லாவிட்டாலும் இவ்வளவு காலமாக,  அமெரிக்காவில் பிறப்பதாலேயே ஒரு குழந்தை உடனடியாகக் குடியுரிமையைப் பெற்றுவிடும் (by birth). ஆனால், பெற்றோரில் ஒருவரேனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே குழந்தைக்குக் குடியுரிமை வழங்கப்படும் (இல்லாவிட்டால் பிறக்கும்போதே அந்தக் குழந்தையும் ஏதிலிதான்!) என்று தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். இதுவே அதிபர் பதவியேற்றதும் முதல் நாள் அவரால் பிறப்பிக்கப்படும் ஆணையாக இருக்கும் என்றும் டிரம்ப்பின் பிரசார இணையதளங்கள் அறிவித்திருக்கின்றன (இதன் மூலம் தேசபக்தியின் பெயரால் வெள்ளையர் Vs வந்தேறிகள் தியரி கட்டியெழுப்பப்பட்டது என்று கூறலாம்).
  • டிரம்ப் வெற்றிக்குப் பிறகு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது, பச்சை அட்டைக்காக (கிரீன் கார்டுக்காக) அமெரிக்காவில் காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியர்கள் மட்டும் அல்ல, சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் (நுழைந்து) அமெரிக்காவில் வசிக்கும் மெக்சிகோ, பிரேசில் உள்பட எண்ணற்ற நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பேர் பாதிக்கப்படவிருக்கிறார்கள்.
  • இதனிடையே, டிரம்ப் அதிபர் பதவியேற்கும் முன்னரே, கூடுதல் வினையாக சில நாள்கள் முன், உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அமெரிக்கர்களை (அதாவது, ஏற்கெனவே அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருப்பவர்களை – வெளிநாட்டினராகவும் இருக்கலாம்) மணம் செய்துகொண்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் அதிபர் ஜோ பைடனின் திட்டத்தை டெக்ஸாஸ் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது (திரும்புற பக்கமெல்லாம் அணை கட்டுறாங்களே!).
  • (2022 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 48 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 34 சதவிகிதத்தினர், அதாவது 16 லட்சம் பேர் அமெரிக்காவில் பிறந்ததாலேயே குடியுரிமை பெற்றவர்கள்!).
  • இந்த மாதிரியாகத் தங்களைத் தீவிரமாக ஆதரித்த அமெரிக்க –  வெள்ளையினத்தவர்களின் மனம் குளிரும்படியாக, எச்1பி விசா உள்பட வேறு பல விஷயங்களிலும் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு / வெளிநாட்டினருக்கு  எதிராக ஏராளமான அதிரடிகள் தயாராக இருக்கின்றன எனக் கூறப்படுகிறது. அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் ஒவ்வொன்றாக வெளிப்படலாம்.
  • தேர்தல் என்றாலே வெறுப்புப் பிரசாரம்தான் என்பதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. ஆனால், இந்த அளவுக்கு இறங்கிப் போகும் என யாராவது எதிர்பார்த்திருப்பார்களா எனத் தெரியவில்லை. டிரம்ப் இறுதி வரைக்கும் சென்றார் என்றே கூறலாம்.
  • வென்றே தீர வேண்டும் என்ற வேகத்தில் கொலை முயற்சி சம்பவங்கள்  (இவற்றில் எது உண்மை, எது திட்டமிடப்பட்டது என யாருக்கும் தெரியப் போவதில்லை) இன, நிற, பாலின வெறுப்புப் பிரசாரமும் எல்லாரையும் வெளியேற்றுவேன், இவர்களை எல்லாம் சிறையில் தள்ளுவேன் என்பது போன்ற  தடாலடியான அறிவிப்புகளும்... அமெரிக்காவையும் அமெரிக்க வாக்காளர்களையும் அதிபர் தேர்தலையும் வேற லெவலுக்குக் கொண்டுசென்றுவிட்டிருக்கின்றன.
  • தோல்விக்குப் பிறகு கமலா ஹாரிஸ் குறிப்பிட்ட வரிகள் இங்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை: “வெற்றியைத்தான் இழந்திருக்கிறோம், போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்; பேரிருளில்தான் நட்சத்திரங்களின் ஒளியை உணர முடியும். நாம் இருண்ட காலத்துக்குள் நுழைவதாகப் பலர் கருதுகிறார்கள். நட்சத்திரங்களின் ஒளியைக்கொண்டு இருளை நிரப்புவோம்.”
  • 2025, ஜனவரி, 20 – அதிபராக மீண்டும் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நாள்! ஆட்டம் ஆரம்பம்!

நன்றி: தினமணி (10 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories