- இந்தியாவில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற தனிநபர் உரிமைகளை, வெவ்வேறு பிரிவு மக்கள் பின்பற்றும் மதங்களின் சட்டங்களே நிர்வகித்துவருகின்றன. இந்த நிலையை மாற்றி, அனைத்து மக்களின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான சட்டத்தின்கீழ் கொண்டுவருதே ‘பொது சிவில் சட்ட’த்தின் நோக்கம். இந்தியாவில், 2014இல் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இது பெரும் விவாதப் பொருளாக நீடித்துவருகிறது.
இதுவரை
- 1862இல் பிரிட்டிஷார் கொண்டுவந்த இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் சட்டத்தின் பெரும்பாலான கூறுகளை உள்ளடக்கியிருந்தது. இருப்பினும் தனிநபர் உரிமைகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் வரவில்லை. அவை வெவ்வேறு மதங்களின் தனிப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்பட்டன.
- ஆண்டுகள் செல்லச் செல்ல அவற்றை இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் கொண்டுவருவதற்கான தேவை உணரப்பட்டது. 1930களில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் மாநாடு அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமை கோரியது; எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்றவற்றில் தங்களுக்குச் சம உரிமை தேவை என்று அவர்கள் உரிமைக் குரல் எழுப்பினர்.
- 1947இல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கம் ஒரு பொதுவான சட்டத்தின் மூலம் மதச் சட்டங்களைச் சீர்திருத்தும் செயல்முறையைத் துரிதப்படுத்தியது. 1950இல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தனிநபர் விஷயங்களை நிர்வகிக்கும் மத அடிப்படையிலான தனிநபர் சட்டங்களுக்குப் பதிலாக, அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கும்; அதைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கும்’ என்று அது கூறியது.
அரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன?
- அரசமைப்புச் சட்டத்தின் 44ஆவது கூறு, ‘அரசு தன்னுடைய குடிமக்களுக்குப் பொதுவான சிவில் சட்டம் கிடைப்பதை உறுதிசெய்து, பாதுகாக்க முயற்சிக்கும்’ என்கிறது. இருப்பினும் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், பிரச்சினையின் தீவிரத்தையும், சிக்கலான தன்மையையும் உணர்ந்து, பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்படுவதை அரசாங்கத்தின் விருப்பத்துக்கு விட்டுவிட்டனர். பல ஆண்டுகளாக, பல்வேறு அரசாங்கங்கள் பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி விவாதித்தன. எனினும், இவ்விஷயத்தில் சர்ச்சைகளே அதிகம் எழுந்தன. இந்தியாவில் பல்வேறு சிவில் சட்டங்கள் உள்ளன.
இந்து தனிநபர் சட்டம்
- இந்து தனிநபர் சட்டங்கள் பண்டைய மத நூல்கள், பழக்க வழக்கங்களிலிருந்து பெறப்பட்டவை. இந்துக்களிடையே திருமணம், விவாகரத்தை இந்து திருமணச் சட்டம் - 1955 நிர்வகிக்கிறது; வாரிசுரிமை பற்றி இந்து வாரிசுச் சட்டம் - 1956 கூறுகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ், இந்துப் பெண்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து சொத்தைப் பெறுவதற்கும், இந்து ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெறுவதற்கும் சம உரிமை பெற்றுள்ளனர்.
- இந்தச் சட்டம் பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்களுக்கும் பொருந்தும். முஸ்லிம் தனிநபர் சட்டம்: இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஷரியத்தை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் தனிநபர் சட்டத்தை (1937) பின்பற்றுகிறார்கள். இஸ்லாமியர்களிடையே திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, ஜீவனாம்சம் தொடர்பான விஷயங்களை இச்சட்டம் ஒழுங்கு படுத்துகிறது.
- கிறிஸ்துவர்கள், பார்சிக்கள், யூதர்கள் ஆகியோருக்கு இந்திய வாரிசுச் சட்டம் - 1925 பொருந்தும். கிறிஸ்துவப் பெண்கள், குழந்தைகள் அல்லது பிற உறவினர்களின் இருப்பின் அடிப்படையில், குடும்பச் சொத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பங்கைப் பெறுகிறார்கள்; பார்சி கைம்பெண்கள், தங்கள் குழந்தைகளுக்குச் சமமான பங்கைப் பெறுகிறார்கள்; இறந்தவரின் பெற்றோர் உயிருடன் இருந்தால், குழந்தையின் சொத்தில் பாதிப் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.
எதிர்ப்புக் கருத்துகள்
- சிறுபான்மைச் சமூகங்களில் தனிநபர் சட்டங்கள் அந்தச் சமூகங்களின் மத அடையாளம், நடைமுறைகளுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. அவர்களின் மீது ஒரு பொது சிவில் சட்டத்தைத் திணிப்பது, சிறுபான்மைக் குழுக்களின் தனிநபர் உரிமைகளையும் பாதுகாப்புகளையும் நீர்த்துப்போகச் செய்யும்; அவர்களின் பண்பாட்டுச் சுயாட்சியை அழிக்கும்.
- சிறுபான்மையினரின் உரிமைகளையும், அவர்களின் தனித்துவமான நடைமுறைகளையும் பாதுகாப்பது இந்தியா போன்ற பன்மைத்துவச் சமூகத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, பொது சிவில் சட்டம் நாட்டின் பண்பாட்டுக் கட்டமைப்பைக் குறைமதிப்புக்கு உட்படுத்தும்; குடிமக்களின் மதச் சுதந்திரத்தையும் பாதிக்கும்’ என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
ஆதரவுக் கருத்துகள்
- ‘நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான ஒரு சீரான சட்டத்தை நடைமுறைப் படுத்துவது பாலினச் சமத்துவத்தையும் பெண்களின் உரிமைகளையும் மேம்படுத்தும்’ என்று பொது சிவில் சட்டத்தின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
- திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, ஜீவனாம்சம் போன்ற விஷயங்களில் பொது சிவில் சட்டமானது சம உரிமைகளை உறுதிப்படுத்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், தற்போதுள்ள தனிப்பட்ட சட்டங்களின் கட்டமைப்புக்குள்ளேயே பாலின நீதியை அடைய முடியும் என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
- ஆனால், கல்வி, பெண் சமத்துவம், திருமண வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் நவநாகரிக மாற்றங்களின் பலனை அனைத்து சமூகத்தினரும் சமமாக அனுபவிப்பதற்கு பொது சிவில் சட்டங்கள் பெரிதும் துணை புரியும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்போர் வெளிச்சமிட்டுக் காட்டும் மற்றொரு வாதமாகும்.
நன்றி: தி இந்து (05 – 07 – 2023)