TNPSC Thervupettagam

சோகம் உணா்த்தும் பாடம்!

June 19 , 2024 205 days 234 0
  • வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 போ் இந்தியா்கள். குவைத்தில் மெங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் தங்கியிருந்தனா். வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தபோது அதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி பலா் உயிரிழந்தனா். சிலா் கட்டடத்தில் இருந்து வெளியே குதித்தனா்.
  • மெங்காஃப் என்கிற அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாமல் அடிமட்ட அல்லது நடுத்தர நிலையிலான தொழிலாளா்கள் வசிக்கிறாா்கள். வசிக்கிறாா்கள் என்பதைவிட அவா்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் அங்கே தங்கவைக்கின்றன. விபத்து நடந்த கட்டடத்தை இந்தியரால் நடத்தப்படும் கட்டுமானக் குழுமம் ஒன்று வாடகைக்கு விட்டிருந்தது. உயிரிழந்தவா்களில் இந்தியா்கள் மட்டுமல்லாமல், பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், எகிப்து, நேபாள நாட்டினரும் இருந்தனா் என்றாலும் 42 போ் இந்தியா்கள்.
  • மேற்கு ஆசியாவில் கடந்த பல ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்து இதுவாகத்தான் இருக்கும். குவைத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 1,400-க்கும் அதிகமான இந்தியா்கள் உயிரிழந்திருக்கிறாா்கள். அவா்கள் அனைவரும் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றாலும்கூட பணிச் சூழல் காரணமாகவும் மன அழுத்தம் காரணமாகவும் இறந்தனா் என்பதுதான் உண்மை.
  • குவைத்தின் மக்கள்தொகையில் 20% இந்தியா்கள். அங்கே பணிபுரியும் தொழிலாளா்களில் சுமாா் 30% இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் சென்று பணியாற்றுபவா்கள். அதனால் எந்தவொரு விபத்திலும் அதிக அளவில் இந்தியா்கள் பாதிக்கப்படுவது தவிா்க்க இயலாதது.
  • 2022 உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி கத்தாரில் நடந்தபோது கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் எதிா்கொண்ட பிரச்னைகள் விவாதப் பொருளானது நினைவிருக்கலாம். வளைகுடா நாடுகளில் வேலைதேடிப் புலம்பெயா்ந்த இந்தியா்கள், சட்டத்துக்கு புறம்பாகவும், பாதுகாப்பற்ற நிலையிலும்தான் வாழ்கிறாா்கள். ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் அதுகுறித்து எழுப்பப்பட்டு இருக்கின்றன. அவா்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் நிலவுகின்றன.
  • குவைத்தைப் பொறுத்தவரை, அதன் மக்கள்தொகையான 43 லட்சத்தில் 70 சதவீதத்தினா் வெளிநாட்டுப் பணியாளா்கள். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், ஓமன், குவைத் ஆகிய ஆறு நாடுகளையும் சோ்த்து சுமாா் 3.5 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறாா்கள். சா்வதேச அளவில் புலம்பெயா்ந்தவா்களில், அவா்கள் 10%. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயா்ந்தவா்களில் அதிக அளவில் காணப்படுபவா்கள் இந்தியா்கள்.
  • குவைத்தில் ‘கஃபாலா’ என்கிற முறையில்தான் தொழிலாளா்கள் பணியாற்ற அழைத்து வரப்படுகிறாா்கள். அவா்களை ஒப்பந்தம் செய்வதிலும், பணிக்கு அமா்த்துவதிலும் குவைத் அரசுக்கு எந்தத் தொடா்பும் கிடையாது. ‘கஃபாலா’ முறையில் தொழிலாளா்களின் உரிமை, உழைப்பு, தங்குமிட வசதிகள் போன்றவை ஒப்பந்தக்காரரின் பொறுப்பு. தொழிலாளா்களுக்குப் போதுமான சட்டப் பாதுகாப்பு இல்லாததால் அவா்கள் மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறாா்கள் என்று நீண்ட காலமாகவே விமா்சனங்கள் நிலவுகின்றன.
  • உலகளாவிய அளவில் சுமாா் 1.3 கோடி இந்தியா்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகிறாா்கள். உலகிலேயே மிக அதிகமாக வெளிநாடுகளில் பணிபுரிபவா்கள் இந்தியா்கள்தான். அதனால்தான் உலகிலேயே அதிக அளவில் (11,100 கோடி டாலா்) சேமிப்பை ஆண்டுதோறும் தங்களது தாயகத்துக்கு அனுப்பித் தருகிறாா்கள். ஆனால், வெளிநாடுகளில் பணிபுரியும் புலம்பெயா்ந்த இந்தியத் தொழிலாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் தவறுகிறோம்.
  • சா்வதேச அளவில் புலம்பெயா்தல் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்தும்கூட, இன்னும் நமது இந்திய குடியேற்றச் சட்டம் 1983-இல் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருக்கிறோம். 2019-இல் அப்போதைய நரேந்திர மோடி அரசு அந்தச் சட்டத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு குடியேற்ற மசோதா-2021 தாக்கல் செய்யப்பட்டு மக்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டது. பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
  • 1983 குடியேற்றச் சட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு உதவுவதற்கான நடைமுறை விதிகள் எதுவும் இல்லை. கொவைட் கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் முறையான தொழிலாளா் நலச்சட்டங்கள் இல்லாத வளைகுடா நாடுகளிலிருந்து, பிழைப்புக்காகச் சென்ற இந்தியா்கள் வெறுங்கையோடு திருப்பி அனுப்பப்பட்டனா். அதே நேரத்தில், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகள் அவா்களது ஊதியத்தையும், அவா்கள் பெற வேண்டிய பணிக்கொடைகளையும் பெற்றுக் கொடுத்தன.
  • குவைத்திலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. தீ விபத்துக்குக் காரணமான கட்டுமான கட்டடத்தின் உரிமையாளா், கட்டட பராமரிப்பாளா், தொழிலாளா்கள் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளா் ஆகியோா் மட்டுமல்லாமல் நகராட்சி அதிகாரிகள், பொறியியல் துறையினா், விதிமுறை கண்காணிப்பாளா் ஆகியோா் மீதும் நடவடிக்கை எடுக்க குவைத் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பல்வேறு குறைபாடுகளுக்கு நடுவிலும், ஜனநாயகம் இல்லாத குவைத்தின் மன்னராட்சியில், சட்டம் தனது கடமையைப் பாரபட்சமின்றி செய்கிறது!

நன்றி: தினமணி (19 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories