TNPSC Thervupettagam

சோதனைகளும் சாதனைகளும்

April 22 , 2020 1732 days 1372 0
  • உலக நாடுகள் எல்லாம் படைபலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. தங்கள் நாட்டு வரவு செலவு திட்டத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கு ஒதுக்கிக் கொண்டிருக்கின்றன. மக்களின் அத்தியாவசியச் செலவுகள் குறித்துக் கவலைப்படாமல் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரால் ஆயுதங்களுக்கு பெரும் தொகையைச் செலவு செய்து கொண்டிருக்கின்றன.
  • ஏழை நாடுகள்கூட மக்களை வறுமையிலும், பட்டினிச் சாவுகளிலும் பலி கொடுத்துவிட்டு ராணுவ பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. வல்லரசு நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து அந்த ஏழை நாடுகளின் தலையில் சுமத்தி வணிகம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, மத, இனக் குழுக்களின் மோதலால் மக்கள் அகதிகளாகி இடம்பெயா்வது பெரும் குழப்பங்களை உருவாக்கி வருகிறது.
  • அணு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்தப் போர்க் கருவிகளால் ஒரு பயனும் இல்லை என்பது தெரிந்தும், அரசுகள் அதற்குப் பெரும்பொருள் செலவழித்துக் கொண்டுதான் உள்ளன. போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், போர்த் தளவாடங்கள் எல்லாம் அணு ஆயுதங்களுக்கு முன்னால் என்ன செய்ய முடியும்?

கொடிய நோய்த்தொற்று

  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதுபோல அணு ஆயுதங்களுக்குப் போட்டியாக கரோனா என்னும் கொடிய நோய்த்தொற்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. முரண்பட்ட உலக நாடுகள் எல்லாம் தங்கள் போட்டிகளை மறந்து விட்டு ஒன்றுபட்டு இந்தக் கொள்ளை நோயை ஒழித்துக்கட்ட வேண்டியது அவசரம், அவசியம்.
  • இந்தக் கொடிய நோய்த்தொற்றை உருவாக்கியது யார்? ஏன் உருவாக்கினார்கள்? தானாக உருவாகியது என்றால், எப்படி தானாக உருவாக முடியும்? இது எப்போது முடியும்? இந்த விவாதம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. உயிரிழப்பவா் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கையும்  வேண்டுகோளும்

  • உலகத்தில் இருக்கின்ற அனைத்து முரண்பாடுகளையும் நிறுத்தி விடுங்கள் என்றும், உலகத்தில் நடைபெறும் அத்தனை போர்களையும் நிறுத்தி விடுங்கள் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளா் எச்சரிக்கையும், வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
  • இனி ஆயுதப் போர்கள் நடத்தி மக்களைக் காயப்படுத்தி, அகதிகளாக்கி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் யாரும் செய்தல் கூடாது. இந்தத் தருணத்தில் போர் நிறுத்தம் தேவை என்றும் அவா் பிரகடனப்படுத்தியுள்ளார்.
  • அனைவரையும் அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்று உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும், போர் நடக்கும், போர் நடக்காத இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. சித்தாந்த முரண்பாடுகளையும், மத முரண்பாடுகளையும் கொண்ட நாடுகளையும் பேதம் இல்லாமல் அழித்துக் கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் எல்லாம் இந்த நோயினால் பாதிக்கக்கூடிய அவலம் நோ்ந்திருக்கிறது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பேரிடராக கரோனா நோய்த்தொற்று மாறியுள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
  • ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதற்குப் பிறகு இந்த அமைப்பு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னையாக கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்துகிறது. இப்போது வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த்தொற்று என்பது வெறும் சுகாதாரப் பிரச்னை கிடையாது; இது ஒரு மனிதகுலப் பிரச்னையாகும்.

ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்

  • இந்த நோய்த்தொற்று காரணமாக நாடுகளின் உறுதித் தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கும் சூழல் சமாளிக்க முடியாததாகவே உள்ளது. இதனை எதிர்கொள்ள வேண்டுமானால் அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அவா் கூறியுள்ளார்.
  • சிறு சிறு குழுக்களாகச் செயல்பட்டுவரும் பயங்கரவாத இயக்கங்கள் பல நாடுகளில் போர் செய்து, அந்த நாட்டு மக்களை அகதிகளாக ஆக்குவதுடன், அந்த நாட்டுப் பொருளாதாரத்தையும் சீரழிக்கின்றன. மக்கள் குறித்துக் கவலைப்படாத ஆட்சியாளா்களால்தான் உள்நாட்டுப் போர்கள் ஒரு முடிவுக்கு வராமல் தொடா்கின்றன.
  • இப்போது படையெடுத்து வந்திருக்கும் இந்தக் கொள்ளை நோய் ஜாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல் எல்லா மக்களையும் தாக்குகின்றன. குடிமக்களை மட்டும் இல்லாமல் ஆட்சியாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதறகு எதிராக எல்லா நாடுகளும் ஒன்றுபட்டுப் போராடி இந்தப் பகையைத் துரத்த வேண்டும் என்று மனிதகுலம் எதிர்பார்க்கிறது.

மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா

  • இந்தக் கரோனா நோய்க்கு எதிரான போரில் உலகின் பெரிய வல்லரசான அமெரிக்கா நிலைகுலைந்து விட்டது. இன்று உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறிவிட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யு.எச்.ஓ.) மீது குற்றஞ்சாட்டியுள்ளார். உலக சுகாதார நிறுவனத்துக்கு பல தகவல்கள் முன்னரே தெரிந்திருந்தும், அது சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தது என்கிறார்.
  • சுகாதார பாதுகாப்புக்கான ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் மையம், உலகப் பொருளாதார மையம் ஆகியவை பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய நிகழ்வில் இது குறித்து எச்சரிக்கப்பட்டது. ஆனால், எதுவுமே நடக்கவில்லை. இந்தத் தகவல்களில் யாரும் கவனம் செலுத்தவில்லை. அரசியல் அமைப்புகளின் பகைமைகளினால் இந்தப் பெருந்தொற்று சிக்கலாக மாறியது.
  • சீனா, தென் கொரியா, தைவான், சிங்கப்பூா் இதனை முன் எடுத்தார்கள். இங்கு ஓரளவாவது கட்டுப்படுத்தப்பட்டது. கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் மேலை நாடுகள் பின்தங்கிவிட்டன. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டு விட்டன.

ஆய்வாளா்களின் குற்றச்சாட்டு

  • ‘‘கரோனா பெருந்தொற்றைத் தடுத்திருக்க முடியும். அந்த வைரஸ் பற்றிய போதுமான தகவல்கள் முன்பே கிடைத்தன’’ என்கிறார் அமெரிக்க தத்துவ அறிஞா் நோம் சாம்ஸ்கி. இந்தப் பெருந்தொற்று ஒரு முடிவுக்கு வந்தாலும், ஆயுதப் போர், புவி வெப்பமாதல் ஆகிய சிக்கலான சவால்கள் அப்படியே இருக்கும் என்கிறார்.
  • பெருந்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் இருந்திருக்கிறது. அதைக் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். கரோனா நோய்த்தொற்று குடும்பத்தைச் சோ்ந்த ‘சார்ஸ்’ பரவி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின்னும் கரோனா பரவுவதற்கான அச்சுறுத்தல் இருந்தது. அதன் பிறகாவது அதற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவா்கள் அப்படிச் செய்யவில்லை என்பது அறிவியல் ஆய்வாளா்களின் குற்றச்சாட்டு.
  • சீனாவில் பிறந்து வளா்ந்த இந்த வைரஸ், இப்போது அமெரிக்கா உள்பட பல நாடுகளில் மையம் கொண்டுள்ளது. மரணத்தின் எண்ணிக்கையில் இப்போது அமெரிக்கா முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரசு செய்வதறியாமல் திணறுகிறது. இறந்தவா்களை அடக்கம் செய்ய சவப் பெட்டிகளும் கிடைக்காமல், கல்லறைகளில் இடமும் இல்லாமல் பல நாடுகள் திண்டாடுகின்றன.

அதிசய நோய்

  • அறிவியல் வளா்ச்சியால் கட்டி ஆளுவதற்கு உலகமே போதாது என எண்ணினா். சந்திர மண்டலத்தில் நடந்து காட்டினா். செவ்வாய் மண்டலத்தில் போய்க் குடியேற நாள் பார்த்துக் கொண்டிருந்தனா். உயிரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ந்து கொண்டிருந்தனா். இப்போது கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸை ஒழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
  • நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  • வாய்நாடி வாய்ப்பச் செயல்
  • என்பது திருக்குறள். இதுவரை இருந்த, இருக்கின்ற நோயின் தன்மையை மருத்துவ உலகம் அறியும். இது அப்படிப்பட்ட நோயல்ல. வள்ளுவரின் அறிவுரைப்படி நோயை ஆராய்ந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதற்குரிய முறைப்படி செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட அதிசய நோயாக இது இருக்கிறது.
  • மருத்துவ அறிவியல் உலகம் அதற்குரிய மருந்தைத் தேடி அலைகிறது. பிரதமா் மோடியும் இந்திய மருத்துவ அறிஞா்களைக் கூட்டி மருந்தினை முன்மொழியுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், இன்றைய மருத்துவ உலகம் ஆங்கில மருத்துவத்துக்குள்ளேயே அடங்கிப் போய்விட்டது.

இந்தியாவில் தாக்கம்

  • இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சமூக பரவலைத் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த வைரஸைக் குணப்படுத்த இதுவரை ஆராய்ச்சியின் அடிப்படையில் மருந்தோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.
  • ஆனால், ‘சித்த மருத்துவம், ஆயுா்வேதம், யுனானி ஆகிய இந்திய மருத்துவ முறைகளினால் இந்த வைரஸை அழிக்க முடியும், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான உயிர்களைக் காப்பாற்ற முடியும். இதனை ஆதாரபூா்வமாக நிரூபித்துக் காட்டவும் முடியும். எனவே இது தொடா்பாக மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்‘ என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • கரோனா நோய்த்தொற்றை அழிக்க சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றில் வழிமுறைகள் உள்ளன என்ற மனுதாரா்களின் கோரிக்கையை மாநில அரசு அமைத்துள்ள வல்லுநா் குழு விரைந்து பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகளும் ஆணையிட்டுள்ளனா்.
  • இன்று உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பவன் கிடைத்த எதனையும் பற்றிக் கொள்ளவே முயல்வான். அதுபோல ஆபத்தான நோயாளிகளுக்கு இந்திய மருத்துவத்தைப் பயன்படுத்த தயங்கக் கூடாது. இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

தீமையிலும் ஒரு நன்மை

  • எந்தத் தீமையிலும் ஒரு நன்மை இருக்கும் என்று கூறுவா். ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாலும், வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டதாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு குறைந்திருக்கிறது. பூமி வெப்பமாவதும் குறைந்திருக்கிறது.
  • பூமி தோன்றியதிலிருந்து மனிதகுலம் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது; இனியும் கடக்கும். இந்தச் சோதனைகள் எல்லாம் மனிதனின் பயணத்தில் அடுத்த சாதனைகளாக அமையும். மானுடம் வென்ம்மா என்று கம்பன் பாடினான். மானுடம் வெல்லும் என்று நாம் முழங்குவோம்.

நன்றி: தினமணி (22-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories