- சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 111 பதக்கங்கள் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இதில் 40 பதக்கங்களை வீராங்கனைகள் வென்றுள்ளனர்.
- இந்தப் போட்டிகள் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுதான். இதே நகரில் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி நிறைவுற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
- பாரா ஆசியப் போட்டியில் சீனா 214 தங்கம் உள்பட 521 பதக்கங்களுடன் முதலிடத்தையும் ஈரான், ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரிந்தாலும் கடந்த போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது நாட்டின் அபாரப் பாய்ச்சலைப் புரிந்து கொள்ள முடியும்.
- 191 ஆடவர், 112 மகளிர் என மொத்தம் 303 பேர் சீனாவுக்குச் சென்றதே பாரா ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச பங்கேற்பு ஆகும். இது 2018-இல் பங்கேற்றதைவிட 113 பேர் அதிகமாகும். 22 விளையாட்டுப் போட்டிகளில் 43 நாடுகளில் இருந்து சுமார் 4,000-த்துக்கும் மேற்பட்டவர்களுடன் இவர்கள் போட்டியிட வேண்டி இருந்தது.
- 2010-ஆம் ஆண்டு சீனாவின் குவாங்ùஸü நகரில் நடைபெற்ற முதலாவது பாரா ஆசியப் போட்டிகளில் ஒரே ஒரு தங்கம் உள்பட வெறும் 14 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றது. 2014-இல் 3 தங்கம் உள்பட 33 பதக்கங்கள், 2018-இல் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை நமது வீரர்கள் வென்றனர்.
- 13 ஆண்டு இடைவெளிக்குள் ஒரே ஒரு தங்கப் பதக்கத்திலிருந்து இப்போது 29 தங்கப் பதக்கம் என்பது, நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய அபாரமான சாதனை ஆகும். அதேபோன்று பதக்க எண்ணிக்கையில் வெறும் 14-இல் இருந்து இப்போது 111 என்பதை எட்டியிருக்கிறோம்.
- இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் 3 உலக சாதனைகள், பல்வேறு ஆசிய சாதனைகள், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனைகளை முறியடித்திருக்கிறார்கள். இவற்றில் சில வீரர்களின் பயிற்சி, முயற்சி, பின்புலம் போன்றவை பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள லோய்தர் என்ற குக்கிராமத்தில் பிறந்த ஷீதல் தேவி என்ற 16 வயதுச் சிறுமியின் சாதனைகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. சர்வதேச அளவில், கைகளால் இல்லாமல் கால்களால் அம்பெய்தும் ஒரே வீராங்கனை இவர்தான்.
- சிறிய வயதிலேயே "போகோமெலியா' என்ற நோயால் பாதிக்கப்பட்டதால் கைகள் வளரவே இல்லை. செயற்கை கைகள் பொருத்த மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்திய ராணுவம் இவரது கிராமத்தில் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இவரது திறமை வெளிப்பட்டது. அதன் பின்னர் கல்வி, மருத்துவம், விளையாட்டுக்கான பயிற்சி என அனைத்து உதவிகளையும் ராணுவத்தினர் செய்தனர்.
- தொடக்கத்தில் வில்லை எடுப்பதற்கே சிரமப்பட்ட இவர், பாரா ஆசியப் போட்டியில் வில்வித்தையில் காம்பவுண்ட் பிரிவில் மகளிர் தனிநபர், கலப்பு இரட்டையர் ஆகியவற்றில் தங்கமும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்று உலகை வியப்பில் ஆழ்த்தினார்.
- இவரைப் போன்ற இன்னொரு சாதனையாளர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் யாதவ். ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்55 பிரிவில் தங்கம் வென்றார். இப்போது 39 வயதாகும் இவர் 7 வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயிற்சி பெற்றார். 2005 முதல் 2012 வரை சக்கர நாற்காலியில் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றார். 2015-க்குப் பிறகு வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் பதக்கங்களாகக் குவித்து வருகிறார்.
- மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த திலிப் காவிட் 4 வயதில் விபத்தில் ஒரு கையை இழந்தபோதும் தன்னம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்டதால் 400 மீ. டி47 பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
- பாரா ஆசியப் போட்டிகளில் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தர்மராஜ் சோலைராஜ், பாட்மின்டன் மகளிர் எஸ்யு5 பிரிவில் துளசிமதி முருகேசன் ஆகியோர் தங்கமும், ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும் வென்று தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
- மத்திய அரசின் முன்னெடுப்புகளான, கிராம அளவில் "கேலோ இந்தியா', "ஒலிம்பிக் பதக்க மேடை இலக்குத் திட்டம்' போன்றவையும் மாநில அரசுகளின் ஊக்குவிப்பும் வீரர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்த சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவால் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவிக்க முடிந்துள்ளது.
- தகுந்த நேரத்தில் திறமையைக் கண்டுபிடித்து சரியான முறையில் பயிற்சி அளித்தால் நமது இளைஞர்கள் விண்ணைத் தொடும் சாதனையைப் புரிவார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: தினமணி (30 – 10 – 2023)