TNPSC Thervupettagam

சோலைக் காடுகளின் சுவாசத்தை நிறுத்துவதா

December 12 , 2023 221 days 242 0
  • சோலைக் காடுகள் பாதுகாப்பு மையம் (Shola Conservation Centre) அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவித்தபோது, இயற்கை ஆர்வலர்கள் பெரு மகிழ்ச்சியோடு வரவேற்றனர். சோலைக்காடுகள் - மேற்குத் தொடர்ச்சி மலையில்உள்ள தனித்துவமான இயற்கை அமைப்பு. இக்காடுகளும் அதனை ஒட்டியுள்ள புல்வெளிகளும் இங்கு சில நாட்களே பெய்யும் மழை நீரைத் தேக்கிவைத்து ஆண்டு முழுவதும் உயிர்ப்புடன் இருக்கும் சுனைகளையும் ஓடைகளையும் உருவாக்குகின்றன. அவையே தென்னிந்திய ஆறுகளின் பிறப்பிடம். மலைவாழ் மக்களுக்கும் காட்டுயிர்களுக்கும் அவைதான் ஆதாரம்.

துண்டாடப்பட்ட சோலைகள்

  • மேற்குத் தொடர்ச்சி மலையில், 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பகுதி முழுவதும் சோலைக் காடுகளாலும் புல்வெளிகளாலும் சூழப்பட்டிருந்தது. காலம் காலமாய் மலை மக்களால் பாதுகாக்கப்பட்டுவந்த அந்தக் குறிஞ்சி நிலம், வெள்ளையர்கள் வருகைக்குப் பின் அழிவுக்குள்ளானது. சோலைகள் துண்டாடப்பட்டன. தேயிலை, காப்பி போன்ற பயிர்களும் யூகலிப்டஸ், சீகை போன்ற அந்நிய மரங்களும் வளர்க்கப்பட்டன. ஆங்கிலேயர் சென்ற பின்பும் சோலைகளின் அழிவு தொடரத்தான் செய்தது. 1980இல் கொண்டுவரப்பட்ட இந்திய வனப் பாதுகாப்புச் சட்டம் காடுகளின் அழிவை ஓரளவு கட்டுப்படுத்தியது. சோலைகள் பாதுகாக்கப் பட வேண்டியதன் தேவை உணரப்பட்டது. சோலைக்காடுகள் அழிந்தால், தென்னிந்தியா பாலைவனமாகும்.
  • இப்போதுள்ள நிலையில் மீதமிருக்கும் சோலைகளைக் காப்பாற்றினால் இன்னும் நூறாண்டுகள் கழித்தும் நம் பிள்ளைகளுக்குத் தண்ணீர் கிடைக்கும். இதனை உணர்ந்துதான் தமிழ்நாடு அரசால் சோலைக் காடுகள் பாதுகாப்பு மையம் உருவாக்கப்பட்டது. அம்மையம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ‘லாங்வுட் சோலை’யில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெரிய சோலை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் லாங்வுட் சோலை, கோத்தகிரி நகரத்துக்கு மிக அருகே உள்ளது. சுமார் 257 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய வனப் பகுதி.

தன்னைப் புதுப்பித்துக் கொண்ட இயற்கை

  • இந்தக் காட்டின் அருகே மலை உச்சியில் உள்ள ஒரு கிராமம், கேர்பெட்டா. பெரிய சோலையில் உருவாகும் ஓடைதான் அந்தக் கிராமத்துக்குக் குடிநீர் ஆதாரம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீலகிரியில் காடழிப்பு தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, விறகு மற்றும் பிற தேவைகளுக்காக, பெரிய சோலையும் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது அந்தக் காட்டை ஒட்டிய வீட்டில் வாழ்ந்த பேலின் ப்ரூக் (Baylin Brook) எனும் ஆங்கிலேயர், “இந்தக் காடுதான் உங்களுக்குத் தண்ணீரைத் தருகிறது. இதை அழித்துவிடாதீர்கள்” என உள்ளூர் மக்களிடம் அறிவுறுத்தினார். மக்களும் உணர்ந்துகொண்டதால் சோலை காப்பாற்றப்பட்டது.
  • அதன் பிறகு, பல ஆண்டுகள் கழித்துத்தான் அது காப்புக் காடாக அறிவிக்கப்பட்டது. எனினும், அடுத்து வந்த தலைமுறையினர் அந்தக் காட்டின் மகத்துவத்தை மறந்தனர். ஊர் மக்கள் மட்டுமின்றி, காட்டை ஒட்டிய பகுதிகளில் உள்ள பலரும் பல்வேறு தேவைகளுக்காகச் சோலையைப் பயன்படுத்தியதால் அதன் இயல்புத் தன்மை மாறியது. மக்களுக்குக் கிடைத்த ஓடை நீர் குறைந்துபோனது. 1990-களில் பெரும் குடிநீர்ப் பிரச்சினை அங்கே நிலவியது. அப்போது அங்கிருந்த ஒரு பழைமையான பங்களாவில் குடியிருந்த பிரான்ஸ் நாட்டுக்காரரான மைக்கேல் டேனினோ, தமிழகப் பசுமை இயக்கத்தின் ஜெயச்சந்திரன், உள்ளூர் கணித ஆசிரியரான கே.ஜே.ராஜு உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் வனத் துறையோடு இணைந்து, லாங்வுட் சோலை கண்காணிப்புக் குழுவை (Longwood Shola Watchdog Committee) உருவாக்கினர்.
  • வனத் துறையால் சோலையைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் பின்னர் ஒத்துழைத்தனர். மனித நடமாட்டம் குறைந்தவுடன் இயற்கை தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. சோலைக் காடு புத்துயிர் பெற்றது. அங்கிருந்த ஓடை நீர் ஆண்டு முழுவதும் உயிர்ப்புடன் ஓடத் தொடங்கியது. இன்று கேர்பெட்டா மட்டுமின்றி 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகப் பெரிய சோலை விளங்குகிறது. அக்கண்காணிப்புக் குழுவின் தொடர் முயற்சியால் அங்கிருந்த பற்றிப் படரும் அந்நிய களைத் தாவரங்கள் அகற்றப்பட்டு, சோலை மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • ‘சோலை மரங்கள் இயற்கையாக மட்டுமே வளரும். நம்மால் வளர்த்தெடுக்க முடியாது’ என்ற கருத்து நிலவிய காலத்தில் லாங்வுட் சோலையில் சோலை மரங்கள் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டன. மனிதர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதால் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களுக்கு இடையூறற்ற உய்விடமாக அச்சோலை மாறியது. அங்கு மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா நடத்தப்படுகிறது. ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் களமாகவும் இச்சோலை திகழ்கிறது. அண்மையில், குயின்ஸ் காமன்வெல்த் கெனோபி (Queen’s Commonwealth Canopy) எனும் பன்னாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

முடிவுக்கு வராத பிரச்சினை

  • பல்வேறு சிறப்புகளைக் கொண்ட லாங்வுட் சோலையில், சோலைக் காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என முடிவு செய்தது எல்லா வகையிலும் பொருத்தமானதே. ஆனால், அம்மையத்துக்குக் கட்டிடம் கட்ட இடம் தேர்வுசெய்யப்பட்டபோதுதான் இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏற்கெனவே, நாற்றங்கால் பண்ணை இருந்த இடத்தில் எவ்வித மரங்களையும் அகற்றாமல் கட்டிடம் கட்ட வனத் துறை முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் மக்கள் பங்கேற்புக் கூட்டம் ஒன்று வனத் துறையால் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களும் இயற்கை ஆர்வலர்களும் அங்கு எவ்விதக் கட்டிடமும் கட்டக் கூடாது எனக் கருத்துத் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீலகிரி மாவட்ட வனத் துறை, சோலை பாதுகாப்பு மையம் பொருத்தமான வேறு இடத்தில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
  • ஆனால், வேறு பிரச்சினைகள் சோலைக் காடுகளை அச்சுறுத்துகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை வளங்களின் பாதுகாப்பு உணரப்படாத காலத்தில் காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட துயரம் நடந்தேறியது. தேயிலைத் தோட்டங்கள் பசுமைப் பாலைகள் என்று அழைக்கப்பட்டாலும் அவற்றினுள் சிறிய அளவில் உயிர்ச் சூழல் நிலவியது. சில சிறு உயிரினங்கள் அங்கு வாழப் பழகின. ஆனால், இப்போது தேயிலைத் தோட்டங்கள் ‘ரியல் எஸ்டேட்’களாகக் கூறு போட்டு விற்கப்படுகின்றன. காட்டு விலங்குகள் ஒரு சோலையிலிருந்து இன்னொரு சோலைக்கு இடம்பெயரும் பாதைகள் மறிக்கப்படுகின்றன. குறிப்பாக, காட்டு மாடுகளின் பாதைகள் தடுக்கப்பட்டதால் மனிதர்களுடன் அவற்றின் முரண் அதிகரிக்கிறது.             

அதிகரிக்கும் கான்க்ரீட் காடுகள்

  • ஆறுகளின் ஊற்றுக்கண் பிறக்கும் இடத்திலேயே அழியும் அபாயம் உருவாகி வருகிறது. மலைப் பகுதிகள் நுட்பமான இயற்கை அமைப்பை உடையவை. சிறு தாக்குதலுக்கு உள்ளானாலும் மீண்டும் சரிசெய்ய இயலாத பாதிப்புகள் உருவாகும். எனவேதான், “வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மட்டுமின்றி, மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை; பாதுகாக்கப்பட வேண்டியவை” என அறிஞர் மாதவ் காட்கில் தலைமையிலான குழு பரிந்துரைத்தது. ஆனால், இப்போது நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகள் மிக வேகமாக கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன.
  • காலநிலை மாற்றத்தின் விளைவாகச் சில மணிநேரங்களில் கொட்டித் தீர்க்கும் பெரும் மழைப்பொழிவுகள் நிகழும் வாய்ப்புகள் அதிகம். அதனைக் கருத்தில் கொள்ளாமல் எல்லா இடங்களையும் கட்டிடமயமாக்கி வருவது கோர விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மண்ணுக்குத் தொடர்பில்லாத மனிதர்களால் மலை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மலையைத் தாயகமாகக் கொண்ட மலை மக்கள், நிலமற்றவர்களாக மாறிவருகின்றனர். எனவே, மலைப் பகுதியில் ஏற்படும் நில அமைப்பு மாற்றத்தைத் தடுத்திடக் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். தேவை எனில், சட்டம் இயற்றப்பட வேண்டும். லாங்வுட் சோலையை மட்டுமல்ல ஒட்டுமொத்த மலைப் பகுதியையும் பாதுகாக்க விரைந்து செயல்படுவது நம் அனைவரின் கடமையாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories