- சோழர் காலத் தமிழ்நாட்டில் மூன்று வகையான ஊராட்சிகள் இலங்கின. பிராமணர் குடியிருப்புகளான பிரமதேயங்களின் ஊராட்சி அமைப்புகள் பெருங்குறி மகாசபை என்றழைக்கப் பட்டன. வணிகர்கள் வாழ்ந்த ஊர்களின் உள்ளாட்சிப் பணிகள் நகரத்தார் என்ற வணிகர் கூட்டமைப்பாலும் வேளாண் பெருமக்கள் பெருகி வாழ்ந்த ஊர்களின் உள்ளாட்சி ஊராராலும் மேற்கொள்ளப்பட்டன.
- பிரமதேய மகாசபையின் உறுப்பினர் தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட தகுதிகள் இருந்ததுடன், தேர்வு குடவோலை வழி நிகழ்ந்தது. பிற இரண்டு உள்ளாட்சி அமைப்புகளான நகரத்தார், ஊரார் அவைகளில், உறுப்பினராக விளங்க அத்தகு தகுதிகளோ, தேர்வோ இருந்ததாகத் தெரியவில்லை.
- இம்மூன்று உள்ளாட்சிகளில் ஊரார் கூட்டாட்சியே சங்கப் பழைமையது. சோழப் பேரரசரான முதலாம் ராஜராஜர் காலம்வரை, தமிழ்நாட்டின் இரு பெரும் வருவாய்ப் பிரிவுகளாக விளங்கிய ஊர், நாடு சுட்டும் சங்கப் பாடல்கள் பலவாய்க் கிடைத்துள்ளன. அவற்றுள் ஊர் பற்றி விரித்துப் பேசும் பாடல்கள் கணக்கில. சிற்றூர், பேரூர், நல்லூர், பாழூர், மூதூர் என ஊரின் அளவு, நிலைமை, பழைமை சுட்டிய புலவர்களின் கூற்றுகள் சங்க ஊர்களின் வரைபடங்களாகத் திகழ்கின்றன. சங்க ஊரவை குறித்த அகப்பாடல் அந்த அவையை, ‘வீறுசால் அவையம்’ எனச் சிறப்பிப்பதுடன், ஊரவையார் குற்றம் விசாரித்துத் தண்டனை வழங்கிய காட்சியையும் படம்பிடிக்கிறது.
கல்வெட்டுக் களஞ்சியங்கள்
- சோழர் காலத்தில் கோயில்கள் எண்ணிக்கையில் பெருகியதால் அவற்றுக்கான கொடைகளைப் பதிவுசெய்த கல்வெட்டுகளும் ஆயிரக்கணக்கில் பொறிக்கப்பட்டன. சமகாலத்தவரான பல்லவர், பாண்டியர்களைவிட அவர்களை அடுத்துவந்த சோழர்களே வரலாற்று விடிவிளக்குகளாய் விளங்கும் கல்வெட்டுக் களஞ்சியங்களைக் கணக்கிலவாய்த் தந்துள்ளனர். இக்கல்வெட்டுகள் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் நிலவிய உள்ளாட்சி அமைப்புகளின் செயற்பாடுகளை விரித்துரைக்கின்றன.
- பேராசிரியர் எ. சுப்பராயலு, ‘சோழர்களின் கீழ்த் தென்தமிழ்நாடு’ என்கிற ஆங்கில நூலில் ஊரார் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். சிராப்பள்ளி மாவட்டச் சோழர் கால ஊராட்சிகளைக் கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வுசெய்திருக்கும் பேராசிரியர் மு.நளினியும் ஊரார் பற்றிய கால நிரலான கண்ணோட்டத்தைத் தம் ஆய்வேட்டில் பதிவுசெய்திருக்கிறார்.
- சங்க இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ளாற் போலவே சோழர் கால ஊர்களிலும் நில உரிமையாளர்களின் குடியிருப்பான ஊரிருக்கையுடன் தொழில்சார் மக்களின் குடியிருப்புகளான சேரிகளும் இருந்தன. மக்கள் வாழ்ந்த இப்பகுதிகள் நத்தம் என்றழைக்கப்பட்டன. பொதுவாக ஓர் ஊரில் இது போன்ற நத்தத்துடன் குளம்-ஏரி, வாய்க்கால்கள், விளை-மேய்ச்சல் நிலங்கள், சுடு-இடு காடு, விளைந்தறியாத் திடல்கள் ஆகியனவும் இருந்தன. ஊரில் நிலம் கொண்டிருந்த மக்களே ஊரார் எனும் உள்ளாட்சி அமைப்பில் இடம்பெற்றனர்.
ஊரவையின் பணிகள்
- அரசாணைகளை நிறைவேற்றல், நிலத்துண்டுகளை விற்றல், கொடையளித்தல், ஊர்மக்களிடம் வரி பெற்று அரசு அலுவலர்களிடம் தருதல், நிலத்தின் மீதான வரியை நீக்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புநிதியாகப் பெற்றுக்கொண்டு அந்நிதியின் வட்டியில் உரிய வரிகளைச் செலுத்தல், ஊர்க் கொடைநிலங்களின் வரியைச் சிலபோதுகளில் ஊரே ஏற்றல், கோயிலுக்கான தனியார் அறக்கட்டளைகள் சிலவற்றிற்குப் பொறுப்பேற்றல் என ஊராரின் பணிகள் பலவாக இருந்தன. இப்பணிகளை ஊரவை ஒருமனதாக நிறைவேற்றியதைக் கல்வெட்டுகளாகக் காட்சிதரும் ஆவணப்பதிவுகள், ‘ஊராய் இசைந்த ஊரோம்’, ‘ஊருக்குச் சமைந்த ஊரோம்’ எனும் தொடர்கள் வழி நிறுவுகின்றன.
- பிரமதேயம், நகரம், ஊர் ஆகிய இம்மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே செயற்பாட்டில் வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பிரமதேய ஆவணங்களில் சபை கூட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சபை கூடிய இடங்கள், கூடிய சபையின் முழுமை, சபை நடவடிக்கைகளை ஒழுங்குற நிகழ்த்த சபை உறுப்பினர் ஒருவரோ, சிலரோ மேலாண்மைப் பொறுப்பில் இருந்தமை எனப் பல தரவுகள் பதிவாகியுள்ளன. ஆவணத்தை எழுதியவர் மத்யஸ்தர் அல்லது சபைக் கணக்கு என்றழைக்கப் பட்டார். ஆவணத்தின் முடிவில் ‘இப்படி அறிவேன், இது என் எழுத்து’ என்று சபைக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பி னர்கள் சான்றொப்பம் இட்டிருப்பதையும் காணமுடிகிறது.
- முற்சோழர் ஊரவை ஆவணங்களில் அவற்றை எழுதியவராகப் பெயருடன் ஊர்க்கணக்கர் பதிவான போதும், கூட்டங்கள் நிகழ்த்தப்பட்ட முறை குறித்த செய்திகள் இல்லை. ஓரிரு ஆவணங்கள் தவிர, பிறவற்றில் அவைக்கூட்டத்தில் பங்கேற்ற ஊரவை உறுப்பினர்களின் சான்றொப்பமும் இல்லை. ஆனால், பிற்சோழர் கால ஆவணங்கள் ஊரவை உறுப்பினர்களை அடையாளம் காட்டுவதுடன், அவர்தம் சான்றொப்பத்தையும் கொண்டுள்ளன.
- ஊரவைகள் தனித்து இயங்கியபோதும் தேவைக்கேற்பத் தத்தம் ஊரை அடுத்திருந்த பிரமதேய சபை, நகரத்தார் அவை ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்ட சூழல்களையும் ஆவணங்கள் பதிவுசெய்துள்ளன. பெரும்பாலும் இரு ஊர் எல்லை சார்ந்த நிலத்துண்டுகளின் உரிமை, பொதுவான நீர்நிலைகளின் வாய்க்கால்களின் பயன்பாட்டுப் பங்கீடு குறித்த சிக்கல்களே தொடர்புடைய ஊராட்சி அமைப்புகளை இணைந்து செயல்படச் செய்தன. உள்ளாட்சிகளுக்குள் ஒருங்கிணைவு நேராத நிலையில், ஒப்புரவாளர் தலையிட்டுச் சிக்கல்களைத் தீர்த்தமைக்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
இன்றும் தொடரும் உள்ளாட்சி முறை
- ஊர் குறித்த அரசாணைகளைத் தனித்து நிறைவேற்றிய ஊரார் பொதுநிலையில் அமைந்த அரசாணைகளை அவ்வாணை எந்தெந்த ஆட்சியமைப்புகளைக் கட்டுப்படுத்துகிறதோ, அவற்றுடன் இணைந்து தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினர்.
- ஊரில் நில உரிமை கொண்டிருந்தவர்கள் தம் பெயருடன் கிழான், கிழவன், உடையான் எனச் சிறப்பொட்டுப் பெற்றிருந்ததுடன், ஊர்ப்பெயரையும் முன்னொட்டாகக் கொண்டிருந்தனர். பிற்சோழர் கால ஊரவை ஆவணங்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் பெயர்கள் வேளான் என்கிற பின்னொட்டுடன் முடிவதைக் காணமுடிகிறது. அரசுப் பணிகளில் பொறுப்பேற்றிருந்த வேளாண் பெருமக்கள் அவரவர் கால அரசர்தம் பெயர்களையும் தத்தம் பணிகளுக்கேற்ப, அரசால் வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்களையும் தம் பெயருடன் இணைத்திருந்தனர்.
- தமிழ்நாட்டு வரலாற்றில் சங்ககாலம் தொட்டு ஏற்றமோ, இறக்கமோ இன்றி இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டுவரும் உள்ளாட்சி அமைப்பாக ஊராட்சியைக் குறிக்கலாம். தேர்தல்கள் எவையுமின்றி ஊரார் என்கிற பொதுப்பெயரில் ஊர்மக்கள் அனைவருமாய் ஒன்றிணைந்து இயங்கிய சங்க, சோழர் கால ஊராட்சி தொடர்ந்து ஆராயப்பட வேண்டிய அரசியலமைப்பாகும்.
நன்றி: தி இந்து (16 – 04 – 2023)