TNPSC Thervupettagam

சோழர்கள் இன்று!

May 16 , 2023 605 days 476 0
  • தஞ்சைப் பெரிய கோயிலை முதல் முறை பார்த்தபோது, கடல் பார்த்த மாதிரி இருந்தது. அது இளங்காலை நேரம். மழைக் காலமும்கூட. நகரத்தைக் குளிர் மூடியிருந்தது. ஏழு கண்டங்களையும் போர்த்தியிருந்த வானத்தைக் கிழித்து வெளிப்பட்ட சூரிய ஒளி நேரே கோயிலின் மீது விழுந்தது. பிரமாண்ட நுழைவாயில்களின் வழியே கண் முன் எதிர்ப்பட்ட ஸ்ரீ விமானம் மீது அந்த சூரிய ஒளி பட்டபோது பெரும் விளக்கு ஏற்றப்பட்டதுபோல் இருந்தது. உலகெங்கும் ஒரே சூரியன், இங்கே அது தமிழ் விளக்கு ஆகியிருந்தது.
  • கோயிலுக்குள் தென்பட்ட எல்லா மனிதர்களுமே சிறுவர் சிறுமியராகத் தெரிந்தனர். என்னுடைய குழந்தைமையும் விடுபட்டு வளாகம் நோக்கி ஓட, அள்ளித் தூக்கியது கோயில். அதற்குப் பின் நூறு முறை சென்றபோதும் மனம் அதே சிறு வயது சித்திரத்தைத்தான் முதல் கணத்தில் உணர்கிறது.

ஏன் பொற்காலம் என்று பேசுகிறார்கள்?

  • மனித குலம் தொடர்ந்து ஒரு பொற்காலத்தை உருவாக்க உழைக்கிறது. அந்தப் பொற்காலமானது மனித குலத்தின் கடைசி மனிதருக்கும் எதிர்காலத்திலேயே இருக்கிறது. இது நிலையானது. எதேச்சதிகாரமும், மேலாதிக்கமும், அடிமைமுறையும், சுரண்டலும், போர்களும், வன்முறைகளும் சட்டரீதியாகவே இயல்பாகவிருந்த மன்னராட்சிக் காலகட்டத்தைப் பொற்காலம் என்று சமகாலத்தின் மீது நிற்கும் எவரும் சொல்லவே முடியாது. அப்படியென்றால், பேரரசுகளையும் பேரரசர்களையும் ஏன் ஒவ்வொரு சமூகமும் நினைவுகூர்கிறது?
  • இப்படி ஒரு கேள்விக்கு சாமானிய மக்களிடமிருந்து பதில் தேடுவதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் பிறந்த தமிழ்ச் சமூகத்தில் பெரிதாக நினைவுகூரப்படும் இரு பெயர்கள்: கரிகாலன், ராஜராஜன்.
  • கரிகாலன் கதைக்கு ஈராயிரம் வயதாகிறது. ராஜராஜன் கதைக்கு ஓராயிரம் வயதாகிறது. கரிகாலன் ஆண்டதாகச் சொல்லப்படும் ஆட்சிப் பகுதியானது, பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆட்சிக் கால நிர்வாக அலகான ஒரு பெரிய மாவட்டத்துக்குள் உள்ளடக்கிவிடக்கூடிய அளவிலேயே இருந்திருக்கிறது. எனில், இன்றைக்கு ஓசூரிலோ குமரியிலோ உள்ள ஒரு தமிழர் எந்த வகையில் கரிகாலனோடு தன்னைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார்?
  • கரிகாலனைப் போல இல்லை ராஜராஜன். அவர் இன்றைய தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பையும் தன் கையில் வைத்திருந்ததோடு, தமிழ்நாட்டுக்கு வெளியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஆனால், அவரையும்கூட அதன் பொருட்டு மக்கள் நினைவுகூரவில்லை. உண்மையில், ராஜராஜனின் மகன் ராஜேந்திரன் தென்னகத்தின் முடிசூடா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். இன்றைய கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா இவையெல்லாம் தாண்டி வடக்கிலும் அவரால் தன் முத்திரைகளைப் பதிக்க முடிந்தது. இரு பக்கக் கடல் பகுதி அவர் கண்ணசைவில் இருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சற்றேறத்தாழ இதே காலகட்டத்தில், அன்றைய உலகின் துடிப்பான வணிகப் பாதையாக உருவெடுத்திருந்த தென் ஆசியக் கடல் பாதையில் தன்னுடைய பேரரசுக்கு என்று ஒரு பெரும் செல்வாக்கை அவர் நிலைநாட்டி இருந்தார். இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத கடற்படையைச் சோழர்கள் வைத்திருந்தார்கள். ஆச்சரியமூட்டும் வகையில், பிற்காலத்திய மக்கள் இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை; ராஜேந்திரனை அல்ல; ராஜராஜனையே தம் வரலாற்று நாயகராக நினைவில் கொண்டார்கள்.
  • சரி, கரிகாலனோ ராஜராஜனோ சோழர் ஆட்சியை நிறுவியவர்களா என்றால் அதுவும் இல்லை. எனில், படையெடுப்புகள், போர் வெற்றிகள், பிரமாண்ட நிலப்பரப்பின் ஆளுகை இவை சார்ந்து இங்கே வரலாற்று நாயகர் உருவாகவில்லை. கரிகாலனை அவர் உருவாக்கிய கல்லணைக்காகக் கொண்டாடுகிறார்கள். ராஜராஜனை அவர் உருவாக்கிய பெரிய கோயிலுக்காகக் கொண்டாடுகிறார்கள். கூர்ந்து யோசித்தால் இவை இரண்டுமேகூடக் குறியீடுகள்தான் என்பது புலப்படும்.

நம்பிக்கையின் அடையாளங்கள்

  • தமிழ்நாட்டில் இன்றுள்ள அணைகளில் பெரியது பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட மேட்டூர் அணை. இன்றைக்கு நாம் பார்க்கும் கல்லணையும்கூட பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டனால் கட்டப்பட்டது. கரிகாலன் காலத்திய அணையானது, இன்றைய கல்லணையின் அடித்தளத்தில் இருக்கிறது. அதேபோல், தஞ்சை பெரிய கோயிலைக் காட்டிலும் உயர்ந்த கோபுரங்களையும் பரந்த பரப்பையும் கொண்ட கோயில்கள் இங்கே உண்டு. எனில், கரிகாலனின் கல்லணையையும் ராஜராஜனின் பெரிய கோயிலையும் ஏன் மக்கள் நினைவுகூர்கிறார்கள்? இரண்டு கட்டுமானங்களுமே நம்பிக்கையைப் பிரகடனப்படுத்துகின்றன.
  • குடகிலிருந்து புறப்பட்டுப் பாய்ந்து வரும் காவிரிக்குக் கரிகாலனால் கல்லணை கட்டப்பட்ட காலத்தில், அதன் மொத்தப் பாதையிலும் எந்தவோர் அணையும் கிடையாது. கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பிரமாண்டமான அணைகள் அணிவகுக்கும் இன்றைய வெள்ளக் காலத்திலும் நொடிக்கு மூன்று லட்சம் கன அடி தண்ணீர் கல்லணை வழியே அடித்துக்கொண்டு போவதை என் கண் முன் பார்த்திருக்கிறேன், ஒரு கடலைப் பிடித்து ஆற்றுப்பாதையில் திருப்பிவிட்டதுபோல் இருக்கும் அது. எனில், கரிகாலன் காலத்துக் கட்டுக்கடங்கா காவிரியைக் கற்பனையில் கொண்டுவந்துவிட முடியாது.
  • கரிகாலன் காலத்தில் காவிரிக்குக் கரை கட்டப்பட்டது, மனித குலத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று என்றே சொல்லப்பட வேண்டும். அதனால்தான் பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தாண்டியும் இது பேசப்பட்டது. இந்தப் பக்கம் இலங்கையின் வரலாற்றைப் பேசும் ‘மகா வம்சம்’ அதைப் பேசியது; அந்தப் பக்கம் கர்நாடகத்தின் கங்க அரசர் ஒருவர் தன் மனைவியைப் பற்றிக் கூறும்போது, ‘காவிரிக்கு அணை கட்டியவர் வழிவந்தவள்’ என்று கரிகாலன் புகழ் பேசினார்.
  • கரிகாலனுடைய சாதனை என்பது கரிகாலன் வழி நடந்த கரிகாலன் காலத்துத் தமிழ்ச் சமூகத்தின் சாதனை என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். ஒரு காலகட்டத்தின், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த கற்பனையும், மூலவளங்களும் எப்படி ஒன்றுகூடி முகிழ்ந்தன என்பதையே ஒரு மன்னரின் பெயரால் பேசுகிறோம். கரிகாலன் காலத்தில்தான் தமிழகத்தில் காடு கொன்று நாடாக்கும் வேலை ஒரு செயல்திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. பேராறென வந்த நீரையும், பெருங்காடென விரிந்த நிலத்தையும் தம்முடைய சிந்தையால் தன் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள் மனிதர்கள். ஒரு நெடிய நாகரிகப் பயணத்தின் மைல் கல்போல் ஆனது கல்லணை.
  • கல்லணைக்குப் பின் ஆட்சியாளர்களுக்கான அடிப்படை அறங்களில் ஒன்றானது, நீராதாரங்களைப் போற்றுதல். கரிகாலனுக்கு அடுத்து வந்த எந்த அரச மரபினரின் கண் முன்னும் கரிகாலனின் கல்லணை நின்றது; காவிரிப் படுகையில் கரிகாலன் எடுத்த ஏரி, குளங்கள் நின்றன. சேரர்கள், பாண்டியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள், பிரிட்டிஷார் என்று எல்லோரும் இங்கு பல்லாயிரம் ஏரி, குளங்களை வெட்டினார்கள். குறிப்பாக, சோழர்கள் இதைப் பிரமாண்டமாகச் செய்தார்கள். எத்தனையோ அரச மரபினர்  தமிழகத்தை ஆண்டபோதிலும் சோழர்கள் இதன் நிமித்தமாகவே மக்கள் மனதில் முதன்மை பெற்றார்கள். பிற்காலச் சோழர்கள் வெட்டிய ஒவ்வொரு பேரேரியும் பல்லாயிரம் ஆண்டு மக்கள் நலனை மனதில் கொண்டிருந்தது. உலகில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரிகளின் வரிசையில் அவை முன்வரிசையில் நிற்கின்றன.
  • தமிழ்நாட்டின் பெரும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி 15 சதுர கி.மீ. பரப்பளவையும், 3643 மில்லியன் கன அடி கொள்ளளவைக் கொண்டது. தலைநகர் சென்னையில் இன்று வாழும் ஒரு கோடி மக்களுக்கு முக்கியமான நீராதாரங்களில் ஒன்று அது. இங்கே சென்னைக்கு செம்பரம்பாக்கம் ஏரி என்றால், அடுத்தது கடலூருக்கு வீராணம் ஏரி, 14 கி.மீ. நீளக் கரையைக் கொண்டது இது. அதற்கடுத்து,  கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் ஏரி; நான்கு ஊராட்சிகளுக்கு விரிந்தது இதன் பரப்பு; இப்படிக் குமரியின் பெரியகுளம் ஏரி வரை தமிழ் நிலத்தின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் ஏரிகள், குளங்களால் நிறைத்தார்கள் சோழர்கள். உண்மையில், தமிழகத்தை நீர்நிலைகள் வழியாகவும் இணைத்தார்கள்; வாய்க்கால்கள் ரத்த நாளங்கள்போல் ஆயின.

பெரிய கோயில் எனும் மர்மக் கோட்டை

  • ராஜராஜனின் பெரிய கோயில் உண்மையாகவே பல ரகசிய சூட்சமங்களைக் கொண்ட மர்மக் கோட்டை. எந்த வரலாற்று ஆய்வாளரும் சொல்லிடாத கதைகளை மக்களிடமிருந்து நாம் கேட்க முடியும். நாட்டாரியலில் கர்ணப் பரம்பரைக் கதை மரபு என்று இதைச் சொல்வார்கள். என்னுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர்; அவர்தான் பெரிய கோயிலின் ராஜராஜன் பொதித்து வைத்திருக்கும் ரகசியங்களில் சிலவற்றை எனக்குச் சுட்டினார்.  “இந்தக் கோயிலுடைய பெயர் என்ன தெரியுமா? ‘ராஜராஜீச்சரம்’. தன்னுடைய பெயரையே இறையகத்தின் பெயராகச் சூட்டினார். கோயில் முழுக்கக் கல்வெட்டுகளைத் தமிழால் நிறைத்தவர், கோயிலுக்கு மட்டும் ஏன் சம்ஸ்கிருதத்தில் பெயர் சூட்டினார்?
  • ஏனென்றால், இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள உலகத்துக்கு, குறிப்பாக இங்கிருந்து வடக்கு நோக்கி விரியும் உலகுக்கு அவர் ஒரு செய்தியைச் சொல்ல விரும்பினார். நெடிதுயர்ந்த விமானத்தில்தான் அந்தச் செய்தி இருக்கிறது. அதற்கு இரு பெயர்களை அவர் வழங்கினார்: ஒரு பெயர் தக்ஷிணமேரு; அப்படியென்றால், தெற்கின் மலை என்று அர்த்தம்; இன்னொரு பெயர் மஹாமேரு; அப்படியென்றால், உயர்ந்த மலை என்று அர்த்தம்; தென்னக மலை மட்டும் அல்ல; இதுவே உயர்ந்த மலை என்றும் சொல்கிறார் ராஜராஜன். சுற்றிலும் குறைந்தது 45 கி.மீ. தொலைவுக்கு மலைகள் இல்லாத ஓர் ஊரில் முழுக்கக் கற்களாலேயே ஒரு கோயிலை எழுப்பி, இதுதான் உயர்ந்த மலை என்று ஏன் சொல்கிறார் ராஜராஜன்? அதுதான் இங்கே அவர் மறைத்து வைத்திருக்கும் ரகசியம்!”
  • ஆய்வாளர்கள் இதற்கு வேறு ஓர் அர்த்தம் கொடுக்கிறார்கள். ஆன்மிகர்கள் இதற்கு வேறு ஓர் அர்த்தம் கொடுக்கிறார்கள். கலைஞர்கள் இதற்கு வேறு ஓர் அர்த்தம் கொடுக்கிறார்கள். வெகுஜன மக்கள் உருவாக்கிக்கொள்ளும் அர்த்தப்பாடு எல்லாவற்றிலும் தலையாயது. தம் சமூகத்தின் எழுச்சியைக் குறிக்கும் பிரகடனமாக அதைக் கண்டார்கள் தமிழ் மக்கள். பிற்காலத்தில் அது அப்படித்தான் நிலைத்தது. ஈராயிரம் ஆண்டு காலத் தமிழக வரலாற்றில் பயணித்தால் இதற்கான நியாயப்பாடு புரிபடும்.

தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர்

  • அதுவரை தமிழகத்தின் பல பகுதிகளையும் பல மன்னர்கள் ஆண்டார்கள்; ராஜராஜன் காலத்தில் தமிழ் நிலம் முழுமையும் ஒரே கொடியின் கீழ் வந்தது; அப்படி வந்தபோது அதிகாரத்தை அன்றைய காலகட்டத்தில் சாத்தியப்பட்ட அளவுக்குப் பகிர்ந்தார்கள். உள்ளூர் சிற்றரசர்கள் தொடங்கி கிராமத்தின் குடிநபர்கள் உட்பட ஆட்சி நிர்வாகத்தில் பங்கெடுப்பதற்கு அதிகாரபூர்வ அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சோழர்கள் ஆட்சியில், அதுவரை இல்லாத அளவுக்கு வேளாண் பரப்பு அதிகரித்தது, உற்பத்தி அதிகரித்தது; படையெடுப்புகளும் சூறையாடல்களும் மட்டுமே நிரந்தரமான பொருளாதாரத்துக்கு வழி வகுக்காது என்று கணக்கிட்டு, நில வழியாகவும் கடல் வழியாகவும் வணிகத்தைப் பெருக்கியது சோழ அரசு.
  • ராஜதந்திரமும் வெளியுறவும் சரியாக அணுகப்பட்டன. சந்தையின் அளவும், பொருளாதாரத்தின் அளவும் அதிகரித்தன; புதிதாக விரிந்த நாட்டின் பாதுகாப்புக்கேற்பப் படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது; இவ்வளவும் சேர்ந்து புதிய வாய்ப்புகளை மக்களிடம் உருவாக்கின; மலைகளிலும் வனங்களிலும் வாழ்ந்த பல பழங்குடிச் சமூகங்கள் சமவெளியை நோக்கி வந்தார்கள்; உருவாகி வந்த சமூகத் தேவைக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்பத் தமிழ் நிலத்துக்கு வெளியிலிருந்தும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். மாபெரும் சமூகக் கலப்பு நடந்தது. அதுவரை தமிழ் மொழி வெவ்வேறு பகுதிகளில், இருவேறு வடிவங்களில் எழுதப்பட்டது; ராஜராஜன் காலத்தில்தான் ஒரே எழுத்து வடிவத்துக்கு அது நகர்ந்தது. முன்பு மொழியாலும் உணர்வாலும் ஒன்றிணைந்திருந்த சமூகம் இப்போது நிலத்தாலும் மனிதர்களாலும் ஒன்றிணைந்தபோது, அதன் படைப்புத் திறனானது பாய்ச்சலை அடைந்தது. சகல துறைகளிலும் இது வெளிப்பட்டது. அதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்ச் சமூகம் பெரிதானது. வெகுமக்களின் சமயத்திலும் பண்பாட்டிலும் இது பிரதிபலித்தது. தமிழ் வரலாற்றின் மாபெரும் ஒருங்கிணைப்பாளரானார் ராஜராஜன். இந்த ஒருங்கிணைப்பின் சின்னமாகத்தான் அவர் பெரிய கோயிலை உருவாக்கினார்.
  • சங்க காலத்துக்குப் பின் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியாத அளவுக்கு, அடுத்தடுத்து வெளியார் படையெடுப்புகளும், போர்களும், அழிவுகளுமாகக் கடந்த தமிழ்ச் சமூகம், சோழராட்சியின் செல்வாக்கான காலகட்டத்தில் கொஞ்சம்போல அமைதியைப் பார்த்தது. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிந்தைய அடுத்த ஒரு நூற்றாண்டிலேயே மீண்டும் வெளியார் படையெடுப்புகள், போர்கள், அழிவுகள். இங்குள்ள மக்கள் தமக்கென்று ஒரு பேரரசை நிறுவிப் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் கொஞ்சமேனும் செழித்திருந்த காலகட்டம் என்றால், அது மன்னராட்சிக் காலகட்டத்தில் சோழர்கள் வழியாகவே நடந்திருக்கிறது என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி.
  • தன்னைச் சார்ந்தோர் உரிமைகள் பாதிக்கப்பட்டால், எந்த எல்லை வரை ராஜராஜன் வழிவந்தவர்கள் செல்வார்கள் என்பதையே ஸ்ரீவிஜயத்தின் மீது சோழர்கள் நடத்திய தாக்குதலாகப் பார்க்கிறோம். தமிழ் வணிகக் குழுக்கள் தடையின்றிக் கடல் பாதையைப் பயன்படுத்த தடையாக இருந்ததற்குக் கொடுக்கப்பட்ட பதிலடியாகவும் அதைப் பார்க்கலாம்; தன்னுடன் நட்பு பாராட்டிக்கொண்டே சீன அரசிடம், ‘எங்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருப்பவர்கள் சோழர்கள்’ என்று தவறாகச் சொல்லி அந்தஸ்து குறைவாக நடத்திய ஸ்ரீவிஜயத்துக்குப் பாடம் கற்பிப்பதோடு, உண்மையில் தாங்கள் யார் என்பதை உலகுக்கு வெளிக்காட்ட நடத்தப்பட்ட சுயமரியாதையின் வெளிப்பாட்டாகவும் அதைப் பார்க்கலாம். சோழர்களின், அந்தக் காலகட்டத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவே ராஜராஜனைப் பார்த்தார்கள் மக்கள்; நம்மாலும் முடியாதது இல்லை என்பதை நிரூபித்தவராகப் பார்த்தார்கள்.
  • கரிகாலன் - கல்லணை; ராஜராஜன் - பெரிய கோயில்… இந்தச் சொற்கள் உள்ளடக்கியிருக்கும் அடிப்படைச் செய்தி இதுதான்: மாபெரும் தமிழ் எத்தனம். தனிமனிதர்களாக, பல குழுக்களாகச் சிதறிச் செயல்படும் மனிதர்கள் ஒரு சமூகமாக வரலாற்றில் ஒருங்கிணைந்து செயல்படும் தருணத்தில், எத்தகைய செயற்கரிய காரியங்களைச் சாத்தியமாக்க முடியும் என்பதை இந்தச் சொற்கள் வெளிப்படுத்துகின்றன. கூடவே சில விழுமியங்களையும் வெளிப்படுத்துகின்றன: சுயமரியாதை, ஒருங்கிணைவு, கூட்டுமுயற்சி, அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சி, பெருங்கனவு, அருஞ்செயல்கள்.
  • பேரரசுகளை நினைவுகூர்வதில் சர்வ நிச்சயமாக வேறுபாடுகள் உண்டு. உலகையெல்லாம் தன் கைக்குள் கொண்டுவர எண்ணிய அலெக்ஸாந்தரின் மாசிடோனியப் பேரரசின் பெருமையைப் பேசுவதற்கும், உலகையே காலனிய சமூகமாக்கிய பிரிட்டிஷ் பேரரசின் பெருமையைப் பேசுவதற்கும், தன்னுடைய மக்கள் நலனின் வாழ்வாதாரத்துக்காகப் பெரும் நீர்க் கட்டமைப்பை உருவாக்கிய கரிகாலன் - தன்னுடைய சமூகத்தை ஒருங்கிணைத்துப் பாதுகாத்த ராஜராஜனின் சோழப் பேரரசைப் பேசுவதற்கும் இடையே பாரதூர வேறுபாடுகள் உண்டு. மேலும், கரிகாலனையும் ராஜராஜனையும் பேசுதல் இரு தனிமனிதர்களோடு முடியவில்லை; அதன் வழி ஒரு பெரும் தொகையிலான மக்கள் கூட்டத்தையும், அவர்கள் செயல்பட்ட ஒரு காலகட்டத்தையும் சேர்த்தே பேசுகிறோம்.
  • வரலாற்றில் கருப்புப் பக்கங்கள் இல்லாத ஆட்சியாளர்கள் இல்லை; அதிகார வேட்கையில் ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்டத்தில் சாமானிய மக்கள் வதைபடாத வரலாறும் இல்லை. தமிழ் நிலம் பெரும் அடிமைக் கூட்டத்தால் நிறைந்திருந்த, ரத்தம் தோய்ந்த காலகட்டமும் அது. சாதியமும் நிலவுடைமையும் விளைவாகத் தீண்டாமையும் வலுப்பட்ட காலகட்டமும் அது. ஆனால், இப்படி ஒரு பேரரசு காலகட்டத்தைப் பல சமூகங்களும் இத்தகைய ஏற்றத்தாழ்வைச் சுமந்தே கடந்திருக்கின்றன. எப்படியும் சோழர்களின் பெருமையும் தமிழர்தம் பெருமை; சோழர்களின் இழிவும் தமிழர்தம் இழிவு.
  • தமிழர்கள் உள்ளளவும் என்றைக்கும் பேசப்படுவார்கள் சோழர்கள். சரி, இன்றைக்கு அவர்கள் எப்படி அர்த்தப்படுகிறார்கள்? ஒரு சமூகம் கடும் அழுத்தத்துக்கு ஆளாகும்போதும், புதிய தாவலுக்குத் தயாராகும்போதும் தன் வரலாற்றுத் தாவல் தருணங்களையும் மூதாதையரையும் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரும். தன்னை முந்தைய சாதனையாளர்களோடு ஒப்பிட்டுக்கொள்ளும். அடுத்து வரும் புதிய காலத்தின் மாபெரும் எத்தனத்துக்குத் தயாராகும். கனவுகள் வறளும் ஒரு காலகட்டத்தில் ஒரு பெரும் கனவுக்கும், பெரும் எத்தனத்துக்கும் உத்வேகம் தரட்டும் சோழர்கள்!

நன்றி: அருஞ்சொல் (16 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories